மும்பை நானாவதி மருத்துவமனையில் 15 நாட்கள் சிகிச்சை பெற, கோரேகான் பீமா (Koregaon Bhima) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தெலங்கானாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் வரவர ராவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராவ், உடனடியாக மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். சிகிச்சைக்கான மொத்த செலவையும் ஏற்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் மனுதாரர், மனைவி பி.ஹேமலதா உட்பட குடும்பத்தினர் மருத்துவமனை நெறிமுறையின்படி அவரை சந்திக்கலாம் என்று கூறிய நீதிமன்றம், "நீதிமன்றத்திடம் தகவல் தெரிவிக்கமால் ராவ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படக் கூடாது" என்றும் தெரிவித்தது.
80 வயதான ராவை, நானாவதி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி ஹேமலதா தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே, எம்.எஸ்.ஜம்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. சிறைச்சாலை மருத்துவமனை வார்டில் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக தலைமை அரசு வக்கீல் தீபக் தாக்கரே தெரிவித்தார்.
வரவர ராவ் யார்? அவருடைய இலக்கியம், அரசியல் பற்றி ஒரு விளக்கம்
முதுமை மற்றும் சிறுநீர் தொற்றால் ராவ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சரியான மருத்துவ வசதி இல்லாத காரணத்தினால் அவரின் நிலை மோசமடைந்து வருவதாகவும் நீதிமன்றத்தில் ராவின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிட்டார். இதனையடுத்து, கடந்த ஜூலை மாதம் கொரோனா நோய்த் தொற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நானாவதி மருத்துவமனையில், உயர் சிகிச்சைக்காக மீண்டும் ராவ் அனுமதிக்கப்படலாம் என்று நீதிமன்றம் கூறியது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
மே மாதம், சிறையில் மயக்கமுற்ற நிலையில் கிடந்த ராவ் ஜே.ஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் தொடர்பான மனு ஒன்று என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், ராவ் மருத்துவமனையில் இருந்து மிக அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஜெய்சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனு பின்னர் நிராகரித்தது.
மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு, நீதிமன்றத்திற்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ முறைப்படி தெரிவிக்கப்படவில்லை என்றும், நோயின் தன்மையை அறிந்து கொள்ள உதவும் டிஸ்சார்ஜ் அறிக்கை வெளியிடப்படவில்லை என்றும் ஜெய்சிங் தெரிவித்தார்.
ராவ் மருத்துவ பரிசோதனைக்கு கடந்த வாரம் ஐகோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும், நரம்பியல் நிபுணர்கள் (அ) சிறுநீரக மருத்துவர்கள் ராவை பரிசோதிக்கவில்லை என்றும், 15 நிமிடங்கள் அடங்கிய தொலைதூர மருத்துவ ஆலோசனைகளுக்கு மட்டுமே ராவ் உட்படுத்தப்பட்டார் என்றும் ஜெய்சிங் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிறையில் உள்ள கவிஞர் வரவர ராவை நானாவதி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.