சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த இளம் தம்பதி, தங்களுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு 'கொரோனா', 'கோவிட்' என பெயரிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன, இதனால், தொழில் செய்ய முடியாமலும், பணவரவின்றியும் மக்கள் தவித்து வருகின்றனர். பலருக்கும் வேலை இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
Advertisment
இந்நிலையில், கடந்த 26ம் தேதி இரவு ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ப்ரீத்தி வர்மா என்ற பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.
ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும், பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் அவர் பெயரிட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அந்த தம்பதி, பணி நிமித்தமாக ராய்ப்பூரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஊரடங்கால் எதிர்கொண்ட சிரமங்களை குறிக்கும் வகையில் குழந்தைகளுக்கு இந்த பெயரை சூட்டியதாக ப்ரீத்தி வர்மா தெரிவித்துள்ளார். பின்னாட்களில் மனமாற்றம் ஏற்பட்டால் குழந்தைகளின் பெயரை மாற்ற வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், உத்திரபிரதேசத்தில் தியோரியா மாவட்டத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு 'லாக்டவுன்' என்று அவர்களது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர். “என்னுடைய குழந்தை ஊரடங்கு சமயத்தில் பிறந்தான். கொரோனா தொற்று மக்களிடம் பரவாமல் தடுக்க சரியான சமயத்தில் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஊரடங்கு தேசிய நலன் மீதான அக்கறை. அதனால் எங்களின் குழந்தைக்கு 'லாக்டவுன்' பெயர் வைக்க முடிவு செய்தோம்“ என்று குழந்தையின் தந்தை பவன் கூறினார்.
இதேப் போன்று கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் அலறும் இந்த சூழலில், அதையே தங்கள் பிள்ளைகளுக்கு பெயராக பெற்றோர் வைப்பது என்ன மாதிரியான டிஸைன் என்பது தான் புரியவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil