சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் : உ.பி.யில் மட்டும் 1100க்கும் அதிகமானோர் கைது!

19 பேர் பலி. 5558 நபர்கள் பாதுகாப்பு காரணமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

By: December 27, 2019, 12:46:11 PM
Manish Sahu

CAA UP protest in numbers : திருத்தப்பட்ட புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தில் இதுவரையில் சுமார் 19 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 1113 நபர்கள் 327 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5558 நபர்கள் பாதுகாப்பு காரணமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  2013ம் ஆண்டு முஸாஃபர்நகரில் ஏற்பட்ட கலவரத்திற்கு பிறகு இம்மாநிலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய வன்முறை வெடிப்பாகும். அப்போது 1480 நபர்கள் 567 வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். மேலும் 63 நபர்கள் கொல்லப்பட்டனர். 50 ஆயிரம் நபர்கள் பாதுகாப்பு காரணமாக வேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

அதே போன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்த போது பாதுகாப்பு காரணங்களுக்காக 5161 நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று நவம்பர் மாதம் 19ம் தேதி உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷன்ரெட்டி அறிவித்தார்.

லக்னோ போராட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தவர்களில் சமூக செற்பாட்டாளர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருமான சாதஃ ஜாஃபர், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (75), வழக்கறிஞர் முகமது சுயிப் (76), நாடக கலைஞர் தீபக் கபீர், ராபின் வெர்மா, பவன் ராவ் அம்பேத்கார் ஆகியோரும் அடங்குவார்கள். தாராபுரி, சுயேப், ராபின் ஆகியோர் ரிஹாய் மான்ச் அமைப்பை சேர்ந்தவர்கள். பவன் சமூக செயற்பாட்டாளர். டிசம்பர் 19ம் தேதி ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறையை தொடர்ந்து சுயேப் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

டிஜிபி தலைமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டது. அதில் வன்முறை, கொலைமுயற்சி, கலவரம், காவல்துறையை தாக்குதல், ஊரடங்கு உத்தரவை மீறுதல் ஆகியவற்றின் கீழ் 327 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிமினல் ப்ரொசிஜர் 151ன் கீழ் தடுப்பு காவல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 372 நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பொது சொத்தினை சேதாரம் செய்ததற்கு ஈடாக அவர்களின் சொத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொரதாபாத், லக்னோ, ஃபிரோஸாபாத் மற்றும் கோரக்பூர் ஆகிய இடங்களில் தான் அளவுக்கு அதிகமாக நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : சி.ஏ.ஏ. போராட்டம் : இறந்து போன 16 நபர்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்!

இந்த போராட்டங்களில் காயம்பட்ட இரண்டு நபர்கள் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மொத்தமாக இந்த போராட்டங்களில் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. முகமது ஹாரூன் (30) கழுத்தில் குண்டடிபட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று காலை உயிரிழந்தார். முகமது ஷஃபீக் (40) செவ்வாய் கிழமை சஃப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரும் நேற்று உயிரிழந்தார். ஃபிர்ஸோபாத்தில் 6 பேரும், மீரத்தில் 4 பேரும், கான்பூரில் 3 பேரும், சம்பாலில் 2 பேரும், பிஜ்னோரில் இரண்டு பேரும், லக்னோ மற்றும் வாரணாசியில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தை கலைக்க பணியில் அமர்த்தப்பட்ட காவலர்களில் 288 பேர் தாக்குதலுக்கு ஆளானார்கள். 61 நபர்களுக்கு குண்டடி பட்டுள்ளது.

647 காலியான காட்ரேஜ்கள், 69 காட்ரேஜ்கள், 35 நாட்டு துப்பாக்கிகள் ஆகியவற்றை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் கைப்பற்றினர். டிசம்பர் 20ம் தேதி சம்பால் மாவட்ட கிரைம் ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை போராட்டக்காரர்கள் பறித்துள்ளனர். அதனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. முகநூல் மற்றும் இதர சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பும் வகையில் பதிவுகளை வெளியிட்ட 124 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று உணர்ந்த காவல்துறையினர் அம்மாநிலம் முழுவதும் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,. மீரட், காஸியாபாத், முஸாஃபர்நகர், புலந்த்ஸார், சாம்லி மற்றும் ஆக்ரா பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Caa up protest in numbers toll up to 19 over 1100 arrested 5500 detained

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X