Cafe Coffee Day founder Veerappa Siddhartha Hegde's Mudigere days : 1980ம் ஆண்டு மும்பைக்கு வேலை தேடி சென்றார் சித்தார்த்தா. பிறகு வீடு திரும்பிய அவர் தன்னுடைய தந்தையிடம் இருந்து 7.5 லட்சம் ரூபாயை கடனாக பெற்று காஃபி தோட்டங்களை விலைக்கு வாங்கினார் வீரப்ப சித்தார்த் ஹெக்டே. அந்த வருடத்தின் இறுதியில் கர்நாடகாவின் மல்நாடு அவர் கையில் 10,000 ஏக்கர் காஃபி தோட்டங்கள் இருந்தன. ஆனால் அவருக்கு காஃபி தோட்டங்களை தாண்டியும் கனவுகள் இருந்தன. அதனால் தான் ஜெர்மனியில் இயங்கி வரும் காஃபி ரெஸ்டாரண்ட்டுகள் போல இந்தியாவில் துவங்க ஆசை கொண்டார் சித்தார்த்தா.
Cafe Coffee Day founder Veerappa Siddhartha Hegde's Mudigere days
ஐ.டி. நிறுவனங்கள் மெது மெதுவாக இந்தியாவில் தலை தூக்க ஆரம்பித்த அந்த தருணங்களில் தான், பெங்களூருவின் மிகவும் பரபரப்பான ப்ரிகேட் சாலையில் 1996ம் ஆண்டு தன்னுடைய முதல் கஃபே காஃபி டே அவுட்லெட்டினை துவங்கினார் சித்தார்த்தா. இந்த 24 ஆண்டுகளில் கஃபே காஃபி அடைந்த வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காதது. அதனால் தான் இந்தியா மட்டும் அல்லாமல் ஆஸ்திரியா, செக் குடியரசு, மலேசியா, எகிப்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் இவருடைய நிறுவனம் கிளை பரப்ப துவங்கியது.
சித்தார்த்தாவையும் அவருடைய குடும்பத்தையும் வெகுநாட்களாக அறிந்து வைத்திருந்த ஹாலப்பா கூறுகையில் “கர்நாடகாவின் காஃபியை உலகம் அறிய வேண்டும். உலக அளவில் அதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று சித்தார்த்தா எப்போதும் விரும்பினார். அதனை வெற்றி கரமாகவும் செய்து முடித்தார். காஃபி பண்ணைகளை விலைக்கு வாங்கிய அதே காலகட்டத்தில் தான், காஃபிகளின் ஏற்றுமதி மற்றும் வர்த்தகத்தில் இருந்த பெரும்வாரியான பிரச்சனைகள் முடிவுக்கு வந்தன. அதனால் அவர் அதிலும் கால் பதிக்க துவங்கினார். அமல்கமேட்டட் பீன் காஃபி (Amalgamated Bean Coffee) என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவங்கி அதன் வர்த்தகத்தை மேற்பார்வை செய்து வந்தார்” என்று கூறுகிறார்.
அதனால் தான் இன்றும் அவருடைய ஊரில் சித்தார்த்தாவின் பெயர் ஏ.பி.சி. சித்தார்த்தாவாக இருக்கிறது. காஃபி வர்த்தகத்தில் பெயர் பெற்ற ஒருவரின் இழப்பினை அவருடைய மாவட்டமான சிக்மங்களூரு தாங்கிக் கொள்ளவில்லை. கர்நாடகாவின் காஃபி ப்ளாண்டர் அசோசியேசன், சித்தார்த்தாவின் மரணத்தை ஒட்டி, சிக்மங்களூரு, குடகு, மற்றும் ஹஸ்ஸன் மாவட்டங்களில் உள்ள எஸ்டேட்களில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் விடுப்பு அளித்துள்ளது. அவருடைய சொந்த ஊரான முடிகெரியில் அவர் செய்த எண்ணற்ற நடவடிக்கைகள் அப்பகுதியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது.
நினைவு கூறும் நண்பர்கள்
அவருடைய காஃபி எஸ்டேட்டில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களின் பெயரையும் சித்தார்த்தா அறிவார். பெரும்பான்மையான விழாகாலங்களில் தன்னுடைய ஊழியர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார் என்று நினைவு கூறுகிறார் டாக்டர் ப்ரதீப் கென்ஜிகே. சி.சி.டியில் ரிசர்ச் மற்றும் டெவலப்மெண்ட் பகுதியில் ஆராய்ச்சியாளராக இருக்கும் அவர் “சித்தார்த்தா ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்ப்பார்” என்றும் கூறுகிறார்.
முன்னாள் அமைச்சர் மற்றும் சித்தார்த்தாவின் நெருங்கிய நண்பருமான டி.கே.சிவகுமார் கூறுகையில் “சித்தார்த்தா மிகவும் எளிமையான, அதிர்ந்து பேசாத ஒருவர். யாருடைய வாழ்விலும் தேவையில்லாமல் தலையிட்டதும் இல்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தவர்” என்று கூறுகிறார்.
கர்நாடகாவின் சிக்மங்களூருவில் இருக்கும் மல்நாடு பகுதியில் 140 ஆண்டுகளுக்கும் மேலாக காஃபி விவசாயம் செய்யும் குடும்பத்தில் கங்கைய்யா ஹெக்டே என்பவருக்கு ஒரே மகனாக பிறந்தவர் சித்தார்த்தா. செத்தனஹல்லியில் அமையப்பெற்றிருக்கும் அவரின் குடும்ப காஃபி எஸ்டேட்டில் தன்னுடைய பெரும்பாலான குழந்தை பிராயத்தை கழித்தார். தன்னுடைய பள்ளிபடிப்பினை சிக்மங்களூருவில் இருக்கும் மௌண்டய்ன் வியூ பள்ளியில் படித்தார். மங்களூருவில் இருக்கும் புனித அல்லோய்சியூஸ் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் பி.எல். சங்கர், “இவ்வளவு பெரிய கனவினை நினைவாக்கும் வகையில் திறமை கொண்டவர் சித்தார்த்தா. அதனால் தான் அவரால் கர்நாடகாவின் காஃபியின் மணத்தை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்க முடிந்தது. அத்தனை வெற்றிகளைக் கடந்தும் அவர் எளிமையான பணிவான மனிதனாகவே இருந்தார். பிசினஸில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இது நாள் வரையில் குடும்பத்தினரிடமோ, நண்பர்களிடமோ அவர் பகிர்ந்து கொண்டதே இல்லை” என சித்தார்த்தாவை இவ்வாறு நினைவு கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.