சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் பெண்களை அனுமதிப்பது ஐயப்பன் கோவிலின் ஆச்சார விதிகளை மீறுவதாகும் என்று கூறி பல்வேறு இந்து அமைப்புகளும், பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சாமி தரிசனத்துக்கு வந்த பெண்களை ஆங்காங்கே ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் சில இடங்களில் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த போராட்டத்தை தொடர்ந்து சபரிமலை, சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
நேற்று முன்தினம் கொச்சியைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா என்பவரும், ஆந்திராவைச் சேர்ந்த டி.வி. பெண் நிருபர் கவிதா கோஷியும் போலீசாரின் உதவியுடன் கோவில் சன்னிதானம் வரை சென்றனர். அவர்கள் நடைபந்தல் பகுதியில் வந்த போது, அங்கு பக்தர்கள் திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் 18-ம் படி அருகே கீழ்சாந்திகள் எனப்படும் அர்ச்சகர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ரெஹானா பாத்திமாவும், கவிதா கோஷியும் திருப்பி செல்ல கேரள அரசு உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, 'பெண்ணியவாதிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க சபரிமலை இடமில்லை. உண்மையான பெண் பக்தர்கள் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்' என கேரள அரசு எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து, நேற்று திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கோரி சன்னிதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சபரிமலை போலீசார் தெரிவித்தனர்.
மேலும் பதினெட்டாம் படி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்களுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.