Advertisment

’பசுவதை தடுப்புச் சட்டம் பொருளாதாரத்தை கொன்றுவிட்டது’; கர்நாடக மாட்டுச் சந்தைகளில் ஒரே பல்லவி

கர்நாடகாவில் JD(S) கோட்டையில், இரு தரப்பிலும் BJP அரசுக்கு எதிரான கோபம்; விலை குறைவு அல்லது கால்நடைகளை வாங்க ஆட்கள் இல்லை, அதிக தீவனம், உரம் விலை விவசாயிகளின் முதுகை உடைக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cattle market

சன்னராயப்பட்டிண கால்நடை சந்தை. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: ஜான்சன் டி.ஏ)

Johnson T A

Advertisment

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஹசன் மற்றும் கர்நாடகாவின் மாண்டியா பிராந்தியத்தின் எல்லையில் அமைந்துள்ள சன்னராயப்பட்டணா நகரில் உள்ள மாட்டுச் சந்தையில், கால்நடைகளை வாங்கவும் விற்கவும் அப்பகுதி முழுவதும் இருந்து விவசாயிகள் கூடுவதைக் காணலாம்.

பால் உற்பத்தி செய்யும் மாடுகள், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் பசுக்கள் மற்றும் எருதுகளின் இளம் மற்றும் வயதான மாடுகள், காளைகள் மற்றும் எருமைகள் ஆகியவை விற்பனைக்கு வரும்.

இதையும் படியுங்கள்: பிரதமர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியதாக ஒருவர் கைது; காஷ்மீர் ஆளுநருக்கு கடன் கொடுத்தவர்

மாண்டியாவில் உள்ள கே.ஆர்.பேட்டையைச் சேர்ந்த சோம்மே கவுடா என்ற விவசாயி, ஹல்லிகர் இன மாடுகளை (விவசாயம் செய்யப் பயன்படும் வரைவு இனம்) கையில் வைத்துக்கொண்டு சந்தையில் உள்ள ஒரு கல்லில் அமர்ந்திருக்கிறார். ஐந்து மணி நேரமாகியும், கால்நடைகளை விற்க முடியவில்லை.

"வாங்குபவர்கள் ஜோடிக்கு ரூ. 5,000 விலை பேசுகிறார்கள்... நாங்கள் குறைந்தபட்சம் ரூ. 15,000 எதிர்பார்க்கிறோம்," என்கிறார் 55 வயதான சோம்மே கவுடா. மேலும், "மாநிலத்தில் பசு வதையை தடை செய்யும் சட்டத்தை அரசு கொண்டு வந்த பிறகு ஒட்டுமொத்த மாட்டு சந்தையும் சரிந்துவிட்டது," என்று சோம்மே கவுடா கூறினார்.

தீவனங்களின் விலை உயர்வால் சோம்மே கவுடாவின் பிரச்சனைகள் மேலும் மேலும் அதிகரிக்கின்றன. “இந்தக் கால்நடைகளை வைத்திருப்பதால் நாங்கள் விரக்தியில் இருக்கிறோம். இறுதியில், இடைத்தரகர் எந்த விலைக்கு பேரம் பேசுகிறாரோ அதற்கு நாங்கள் கொடுக்க வேண்டும்,” என்று சோம்மே கவுடா கூறினார்.

கால்நடை வியாபாரத்தை கிட்டத்தட்ட குற்றமாகக் கருதும், பா.ஜ.க அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட கர்நாடகா வதை தடுப்புச் சட்டம், 2020, அச்சச் சூழலை உருவாக்கி விவசாயிகளுக்கு முடங்கும் அடியை அளித்துள்ளது என்ற ஒருமித்த கருத்து மாட்டுச்சந்தை முழுவதும் உள்ளது.

“வதை கூடங்களுக்குச் செல்லும் கால்நடைகளை வாங்க ஆட்கள் இல்லை. முஸ்லீம்களின் வியாபாரிகள் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார்கள்,” என்கிறார் ஹசனைச் சேர்ந்த அன்னே கவுடா என்ற விவசாயி, அவர் ஒரு ஜோடி மாடு மற்றும் ஒரு காளையை ரூ.42,000க்கு வாங்கினார். "செம்மறியாடு சந்தையில், சிறிய ஆடுகள் 5,000 ரூபாய்க்கு விற்கப்படும்" நிலையில், ஹல்லிகர் இன மாடு 5,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்திலும் மத்தியிலும் பா.ஜ.க அரசின் பெரிய வாக்குறுதிகளை குறிப்பிட்டு அன்னே கவுடா கூறுகிறார்: “நாட்டின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் சிந்திக்கிறது, அது நல்லது. ஆனால் அவர்கள் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை... எங்கள் வங்கி கணக்குகளில் (பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ்) ரூ.6,000 டெபாசிட் செய்வதைத் தவிர. ஆனால் தீவனம், உரங்களின் விலை மிக அதிகம்.”

பசு வதை சட்டத்தை அடுத்து "நிறைய கண்ணாமூச்சி (கடத்தலைப் பிடிப்பது போன்ற) ஆட்டங்கள் நடந்தது" என்கிறார் அன்னே கவுடா. மாடுகளை கொண்டுச் செல்வதில் உள்ள "அபாயத்தை" காரணம் காட்டி, வணிகர்கள் குறைந்த விலைக்கு கேட்கிறார்கள், இது அவரைப் போன்ற விவசாயிகளுக்கு அல்லது இடைத்தரகர்களுக்கு சில விருப்பங்களை மட்டுமே விட்டுச்செல்கிறது, ஆனால் தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற பிற மாநிலங்களில், இறைச்சிக் கூடங்களுக்கு கால்நடைகளை வாங்குபவர்கள் பெரும் தொகையை கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள்.

சமீபத்தில், மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதி இடைப்பட்ட இரவில், கே.ஆர்.பேட்டை பகுதியில் (சன்னராயபட்டிணா பகுதியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில்) திங்கட்கிழமை நடைபெற்ற தென்டேகெரே மாட்டுச் சந்தையில் இருந்து வாங்கிய 16 மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரியை ஓட்டிய 42 வயதான இத்ரீஸ் பாஷா, வலதுசாரி பசுக் காவலர்களால் தாக்கப்பட்டதில் இறந்தார்.

2020 சட்டம் அமலுக்கு வந்த பிறகு, பசு காவலர்களின் கையால் மாடுகளை ஏற்றிச் செல்பவர் இறந்த முதல் சம்பவம் இதுவாகும்.

இத்ரீஸ் பாஷா 6, 4, 2 மற்றும் மூன்று மாத வயதுடைய நான்கு குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளார். மாண்டியா நகரில் இத்ரீஸ் பாஷாவின் 35 வயதான சகோதரர் யூனுஸ் கூறுகையில், “குழந்தைகளின் தந்தையின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கிறேன். ஆனால் நான் எப்போதும் சிறிய தந்தை தான்,” என்று கூறினார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அறியப்பட்ட வலதுசாரி விழிப்புணர்வாளர் புனித் கெரேஹல்லி மற்றும் நான்கு கூட்டாளிகளை போலீசார் கைது செய்திருந்தாலும், இத்ரீஸ் பாஷாவின் குடும்பத்தினருக்கு அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து இன்னும் பதில் இல்லை. முழுமையான தடயவியல் அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

“வழக்கமாக இத்ரீஸ் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஓட்டுவதில்லை. இது ஒரு முறையான விஷயம். கால்நடைகளை வாங்கிச் சென்றவர்கள் எந்த தவறும் செய்யவில்லை, அவர்களிடம் ஆவணங்கள் இருந்தன, ஆனால் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று கருதி சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அவர்களைத் தாக்க யாருக்கும் என்ன உரிமை இருக்கிறது? என்று யூனுஸ் கேட்டார். தாக்கியவர்கள் இத்ரீஸ் பாஷாவையும் மற்றவர்களையும் விடுவிக்க ரூ.2 லட்சம் கேட்டதாக யூனுஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.

மேலும், இந்த சட்டம் அனைத்து சமூகங்களின் விவசாயிகள் மற்றும் கால்நடை வியாபாரிகளுக்கு இடையே இருந்த சமூக ஒப்பந்தத்தை உடைத்துவிட்டது. இதையெல்லாம் அனுமதிக்கும் மக்களுக்கு களத்தின் யதார்த்தம் புரியவில்லையா? கோமாதாவின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொன்று விவசாயிகளின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர். மாடுகளை அதிகமாக விற்பனைக்கு கொண்டு வருபவர்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (இந்துக்கள்). அவர்கள் பால் உற்பத்தியை நிறுத்தும்போது அல்லது நோய்வாய்ப்பட்டால் கால்நடைகளை விற்க விரும்புகிறார்கள். அவர்களே கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வருகிறார்கள் அல்லது இடைத்தரகர்களை அழைக்கிறார்கள். இப்போது அதெல்லாம் சீர்குலைந்துவிட்டது,” என்றும் யூனுஸ் கூறினார்

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிற இன்னல்களுடன், சன்னராயப்பட்டணா மாட்டுச்சந்தை போன்ற இடங்களில் இது ஒரு முக்கிய விவாதப் பொருளாகும். இடைத்தரகர் சுவாமி கவுடா கூறுகையில், “பல பாரம்பரிய கால்நடை சந்தைகள் மூடப்படுகின்றன. கால்நடைகளை வாங்க சில வியாபாரிகள் மட்டுமே உள்ளனர்,” என்றார்.

"வாழ்க்கைச் செலவுகளுக்கு 60,000 ரூபாய் செலவழிக்கிறோம்" எனும்போது வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் (பி.எம் கிசான் நிதி) ரூ. 6,000 முக்கியமில்லை என்று மற்றவர்களுடன் சேர்ந்து சுவாமி கவுடா கூறினார். மேலும், காங்கிரஸ் அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி(எஸ்)) கட்சிக்கு வாக்களிக்க உள்ளதாகவும், பா.ஜ.க.,வுக்கு வாக்களிக்க மாட்டேன் என்றும் சுவாமி கவுடா சத்தியம் செய்தார். ஹசன் தொகுதி ஜே.டி(எஸ்) கட்சியின் முதல் குடும்பமான தேவகவுடாக்களின் கோட்டையாகும்.

பா.ஜ.க அரசாங்கத்தின் "விளம்பர" யுக்தி மற்றும் அதன் கீழ் உள்ள வகுப்புவாத துருவமுனைப்பு ஆகியவற்றை சந்தையில் மற்றவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் சுவாமி கவுடா கேள்வி எழுப்பினார். “ஒரு வாஜ்பாய் மட்டுமே இருந்தார். தற்போதைய அரசாங்கம் விளம்பரத்திற்காகவே உள்ளது. இந்த அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் விலை, எல்.பி.ஜி (சமையல் எரிவாயு) விலை என்ன?... மேலும், முஸ்லிம்கள் கூட இந்த நாட்டின் குடிமக்கள். அவர்கள் இந்த பூமியின் உணவை உண்ண வேண்டாமா? இந்த பிராந்தியத்தில், அவர்கள் எங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளனர்,” என்று சுவாமி கவுடா கூறினார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், காங்கிரஸ் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, பசு சட்டத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள விவசாயிகளின் துயரத்தை சபையில் எழுப்பினார். “பசுக்கொலைக்கு தடை விதித்துள்ளதால் சுற்றுச்சூழல் அமைப்புக்கு நன்மை பயக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது, ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தங்களுக்கு பலனளிக்கவில்லை என்றால் விவசாயிகள் இறப்புக்கு முன்னதாகவே கால்நடைகளை விற்பனை செய்வார்கள், ஆனால் இப்போது அவ்வாறு செய்ய முடியாது. விவசாயி மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதால் கால்நடைகளை விற்க முடியாது” என்று கூறிய சித்தராமையா, பசு வதைச் சட்டத்தில் “மறைக்கப்பட்ட நோக்கம் மற்றும் வகுப்புவாத நோக்கம்” உள்ளது என்றும் கூறினார்.

ஆவணங்களுக்காக துன்புறுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகிறது என்று JD(S) சட்டமன்ற உறுப்பினர் சாரா மகேஷ் கூறினார். கைவிடப்பட்ட கால்நடைகளுக்கான கோசாலைகளைப் பொறுத்தவரை, "அவர்கள் அங்குள்ள கால்நடைகளுக்கே உணவளிப்பதில்லை" என்றும் சாரா மகேஷ் கூறினார்.

கே.ஆர்.பேட்டை அல்லது கிருஷ்ண ராஜா பேட்டை சட்டமன்றத் தொகுதியில் இருந்து, சன்னராயப்பட்டணாவில் உள்ள மாட்டுச் சந்தைக்கு ஏராளமான விவசாயிகள் வருகை தருகின்றனர், மேலும் திங்கட்கிழமைகளில் தென்டேகெரே மாட்டுச் சந்தையும் நடைபெறும், இது ஏழு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய, வொக்கலிகா சமூகம் ஆதிக்கம் செலுத்தும் மாண்டியா பகுதியில் பா.ஜ.க வென்ற முதல் தொகுதியாகும்.

K.C நாராயண கவுடா 2013 மற்றும் 2018 இல் KR பேட்டையில் இருந்து JD(S) கட்சியிலிருந்து வெற்றி பெற்ற நிலையில், ​​​​கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவர் பா.ஜ.க.,வுக்கு மாறினார். காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணியை வீழ்த்தி பா.ஜ.க ஆட்சி அமைக்க உதவும் வகையில், JD(S) மற்றும் காங்கிரஸ் அணிகளில் இருந்து பா.ஜ.க.,வுக்கு மாறிய 17 பேரில் இவரும் ஒருவர்.

2019 டிசம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில், நாராயண கவுடா பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்றார், ஆனால் 9,731 வாக்குகள் என்ற குறைவான வித்தியாசத்திலே நாராயண கவுடா வெற்றி பெற்று அமைச்சரானார்.

2008ல் கே.ஆர்.பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு முறை ஜே.டி(எஸ்) வெற்றி பெற்றுள்ள ஷ்ரவணபெலகொலா சட்டமன்றத் தொகுதியில் வெள்ளிக்கிழமைகளில் மாட்டுச் சந்தை நடைபெறும் சன்னராயப்பட்டணா நகரம் உள்ளது.

தற்போதைய JD(S) எம்.எல்.ஏ, CN பாலகிருஷ்ணா, தேவகவுடாக்களுடன் தொடர்புடையவர்.

சட்டம்

கர்நாடகா வதை தடுப்பு மற்றும் பசு மாடுகளை பாதுகாத்தல் சட்டம், 2020, "பசு, பசுவின் கன்று மற்றும் காளை, காளை மற்றும் ஆண் அல்லது பெண் எருமை" ஆகியவற்றை வெட்டுவதை தடை செய்கிறது. அதேநேரம் தகுதிவாய்ந்த அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட பிறகு, 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளுக்கு மட்டும் இச்சட்டத்தின் கீழ் விதிவிலக்குகள் உள்ளன, மேலும் மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் கால்நடைகள், எந்தவொரு நோய் பரவாமல் தடுக்க கால்நடை மருத்துவரால் படுகொலை செய்யப்பட்ட கால்நடைகள் மற்றும் மிகவும் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு விதிவிலக்குகள் உள்ளன.

நீதிமன்ற உத்தரவின்றி கைதுகளை மேற்கொள்ள முடியும். மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

சட்டவிரோதமாக கால்நடைகளைக் கொண்டு செல்வது, இறைச்சி விற்பனை செய்தல், இறைச்சிக்காக மாடுகளை வாங்குவது அல்லது அகற்றுவது ஆகிய குற்றங்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Karnataka Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment