Advertisment

சிந்தாந்தம் இல்லாமல் எப்படி கட்சி நடத்த முடியும்? ராகுலுக்கு மாநிலக் கட்சிகள் எதிர்ப்பு

மாநில கட்சிகளின் பாஜகவை எதிர்க்க போதுமான சித்தாந்தம் இல்லை என ராகுல் பேச்சு; சிந்தாந்தம் இல்லாமல் எப்படி கட்சி நடத்த முடியும் என மாநிலக் கட்சிகள் எதிர்ப்பு

author-image
WebDesk
New Update
Rahul Gandhi

ராகுல் காந்தி

How are we running party without any ideology: Regional leaders question Rahul: காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வான சிந்தன் ஷிவிரில், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்கொள்ள மாநிலக் கட்சிகளுக்கு போதுமான “சித்தாந்தம் இல்லை” என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, முக்கிய எதிர்க்கட்சியாக இனி ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற யதார்த்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளும் தருணம் இது என்று, மாநிலக் கட்சிகள் கூறியுள்ளன.

Advertisment

பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் பாஜகவை வீழ்த்த முடியாவிட்டாலும், மாநிலக் கட்சிகள் பாஜகவை பின்னுக்குத் தள்ளிவிட்டுள்ளன. இந்த நிலையில் ராகுலின் கருத்துக்கு பதிலளித்த, காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்), இது ராகுலின் சுயமதிப்பீடு, அவருக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால் சித்தாந்தம் குறித்து கருத்து தெரிவிக்க அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எந்த சித்தாந்தமும் இல்லாமல் கட்சியை எப்படி நடத்த முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளது.

ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா கூறியதாவது: ஜார்க்கண்டில் ஜேஎம்எம் அல்லது பீகாரில் ஆர்ஜேடியாக இருந்தாலும், இந்த மாநிலக் கட்சிகளையே காங்கிரஸ் தனது தேர்தல் போராட்டம் அல்லது வெற்றிக்காக நம்பியிருக்கிறது என்பதுதான் உண்மை.

சிந்தன் ஷிவிரில் பேசிய ராகுல், "சித்தாந்தம் இல்லாத" மற்றும் "வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்ட" மாநிலக் கட்சிகளைப் போலல்லாமல், ஆர்எஸ்எஸ்ஸின் தாக்குதலுக்கு காங்கிரஸ் சித்தாந்த எதிர்ப்பை அதிகரித்து வருவதாகக் கூறினார்.

காங்கிரஸின் மற்றொரு கூட்டணிக் கட்சியான ஆர்ஜேடியும் (ராஷ்ட்ரிய ஜனதா தள்) ராகுலின் கருத்து "துரதிர்ஷ்டவசமானது" என்று கூறியது. RJD எம்பி மனோஜ் ஜா கூறுகையில், பாஜகவுக்கு எதிரான தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் கவனத்தில் வைத்திருந்தால், “போதுமான திறன் இல்லை என்று அவர் கூறிய மாநில கட்சிகளால் கொண்டுவரப்படும் கருத்தியல் மற்றும் தேர்தல் உறுதிப்பாட்டை அவர் உணர்ந்திருப்பார்” என்று கூறினார்.

காங்கிரஸுக்கு RJD தலைவர் தேஜஸ்வி யாதவின் அறிவுரையை மனோஜ் ஜா மீண்டும் மீண்டும் கூறினார். மேலும், “220-225 இடங்களில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே நேரடிப் போட்டி உள்ளது. காங்கிரஸ் மற்ற இடங்களை மாநிலக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து, ஒரு இணை பயணி என்ற எண்ணத்தில் தேர்தலில் பயணிக்க வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக தலைவர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் கட்சித் தலைமையின் நிலைப்பாட்டை எதிர்பார்த்து காத்திருப்பதாக திமுகவைச் சேர்ந்த பலர் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்தில், மற்றொரு கூட்டணி கட்சியான சிபிஎம், "மென்மையான இந்துத்துவத்துடன்" பயணிப்பதால், சித்தாந்த நெருக்கடி காங்கிரஸூக்கு தான் உள்ளது என்றும், பாஜக முன்வைக்கும் சவால்களை காங்கிரஸால் சமாளிக்க முடியவில்லை என்றும் கூறியது. காங்கிரஸூடன் நெருக்கமானவராகக் கருதப்படும் சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கொச்சியில் நடந்த கட்சி மாநாட்டில் கூறியதாவது: கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், இன்று காங்கிரஸ் கணிசமாக பலவீனமடைந்துள்ளது. மேலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள பலர் காங்கிரஸை பெரும் அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. ஏனெனில், அதன் தலைவர்கள் எவரும், எந்த நேரத்திலும், கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேரலாம்.

பாஜகவை ஒன்றுக்கு மேற்பட்ட முறை தோல்விகளை அடைய வைத்த திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மிகவும் காட்டமாக பதிலளித்தன. திரிணாமுல் காங்கிரஸின் ராஜ்யசபா எம்பி சுஷ்மிதா தேவ் கூறுகையில், “கட்சிக்கான முகம் மற்றும் அமைப்பு இல்லாததால், இரு கட்சிகளும் நேரடியாக போட்டியிடும் இடங்களில், பாஜகவுக்கு எளிமையாக வெற்றியைக் கொடுப்பது காங்கிரஸ் தான்” என்று கூறினார்.

“நாங்கள் எல்லா இடங்களிலும் போட்டியிடவில்லை, ஆனால் காங்கிரஸ் முதன்மை எதிர்க்கட்சியாக இருக்கும் இடங்களில் பாஜக வலுவாக உள்ளது. மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), அல்லது ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரப் பிரதேசம்) ஆகியோரை பாஜகவால் தோற்கடிக்க முடியவில்லை. அந்த வகையில் காங்கிரஸ் தேசிய கட்சியாக உருவெடுத்ததில் பாஜக மகிழ்ச்சி அடைந்துள்ளது. உண்மை என்னவென்றால், காங்கிரஸால் பாஜகவை தோற்கடிக்க முடியவில்லை,” என்று கடந்த ஆண்டு ஆகஸ்டில் காங்கிரஸில் இருந்து விலகி திரிணாமுல் கட்சியில் சேர்ந்த சுஷ்மிதா தேவ் கூறினார்.

ஒரு காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ், பின்னர் அந்த கூட்டணியிலிருந்து விலகி விட்டது.

காங்கிரஸின் மற்றொரு முன்னாள் கூட்டணி கட்சியான சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து சொல்ல முடியாது என்றாலும், பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சி இருந்தால், அப்படி ஏன் பார்க்கப்படவில்லை என்று யோசிக்க வேண்டும். “மத்தியில் பாஜக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்துள்ளது. மக்களுக்கான ஒரே மாற்று காங்கிரஸ் என்றால், அந்த மாற்று ஏன் ஆட்சிக்கு வரத் தவறியது?... மாநிலக் கட்சிகள் இல்லாமல் மத்தியிலும் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் உண்மை, ”என்று SP தலைவர் ராஜேந்திர சவுத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முன்னாள் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, “பொதுமைப்படுத்தல் என்பது எப்போதும் தவறு, மேலும் அனைத்து மாநிலக் கட்சிகளையும் ஒரே தூரிகையால் சாயம் பூசுவது மாநிலக் கட்சிகளுக்கு அவமானம். என்னால் மற்றவர்களுக்காக பேச முடியாது, ஆனால் நாங்கள் நிச்சயமாக சித்தாந்தம் இல்லாதவர்கள் அல்ல... நாங்கள் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களை தேர்ந்தெடுத்துள்ளோம்” என்று கூறினார்.

காங்கிரஸ் கிட்டத்தட்ட அனைத்து மாநிலக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்துள்ளது என்று சுட்டிக் காட்டிய உமர் அப்துல்லா, “காங்கிரஸ் சித்தாந்தத்தைப் பற்றி அந்தக் கட்சி என்ன சொல்கிறது? சிவசேனாவிலிருந்து பிடிபி, என்சி, அஇஅதிமுக, திமுக என அனைத்து கட்சிகளுடனும், மேலும் ஒரு காலத்தில் நிதிஷ் குமாரின் கட்சியிடனும்... காங்கிரசுக்கு மாநிலக் கட்சிகள் தேவைப்படும் நேரத்தில் அக்கட்சி கூட்டணி வைத்துள்ளது. எனவே காங்கிரஸ் மாநிலக் கட்சிகளைத் தாக்கக் கூடாது. பாஜகவைத் தாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

உட்கட்சி பூசல்களால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போராடும் நிலையில் இருப்பதாக பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் எப்படி நினைக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியது. “காங்கிரஸ் ஆட்சிக்கு வாக்களித்த மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட, அதன் வேட்பாளர்கள் விலைபோயுள்ளனர். உ.பி., தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் அக்கட்சிக்கு இருப்பு இல்லை. மற்றும் தேசிய கட்சி மற்றும் மாநில கட்சி என்றால் என்ன? பல ஆண்டுகளாக, சமாஜ்வாதி, திமுக போன்ற கட்சிகளின் தலைமையிலான கூட்டணியில் இளைய பங்காளியாக காங்கிரஸ் இருந்து வருகிறது” என்று ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் கூறினார்.

அகாலிதளத்தின் மூத்த தலைவர் பிரேம் சிங் சந்துமஜ்ரா கூறுகையில், பாஜகவும் காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். "தங்கள் தேசியக் கொள்கைகளைப் பின்பற்றும் போது, ​​தனித்துவமான புவியியல், மொழி மற்றும் பிராந்தியங்களின் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்... யாராவது காங்கிரஸ் அல்லது பாஜகவுக்கு எதிராக போராட முடியும் என்றால், அது மாநிலக் கட்சிகள் தான்." என்று கூறினார்.

தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் மூத்த தலைவரும் அமைச்சருமான தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ், “ராகுல் காந்தி இந்தியா முழுவதும் உள்ள தனது கட்சியின் நிலையை முதலில் பரிசீலித்துவிட்டு இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

காங்கிரஸில் பிரிந்த பின்னர் உருவாக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் பெயர் வெளியிட விரும்பாத நிலையில் கூறுகையில், “தேசியக் கட்சியான காங்கிரஸை ஆந்திராவில் நாம் அழிக்கவில்லையா? நாம் ஒரு தேசியக் கட்சியை எடுத்துக் கொண்டால், வேறு எந்த தேசியக் கட்சியையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நாங்கள் பலமாக இருக்கிறோம்” என்று கூறினார்.

பிஜூ ஜனதா தள் (பிஜேடி) கட்சியின் செய்தி தொடர்பாளர் லெனின் மொஹந்தி கூறியதாவது: மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் காட்டி வரும் தேர்தல் முடிவுகள், இந்த கட்சிகளின் செயல்திறனுக்கு போதுமான சான்று. டெல்லி முதல் கேரளா வரை, மாநிலக் கட்சிகள் மக்களால் நம்பப்படுகின்றன, மாநில கட்சிகளிடம் மக்கள் அதிக பொறுப்புகளை வழங்குகின்றனர் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: கேரளாவில் கூட்டணி அமைத்த ஆம் ஆத்மி கட்சி; தனித்து போட்டியிடுவது எப்போது?

மேலும், காங்கிரஸின் மெதுவான கிரகணம் "அது ஒரு கருத்தியல் போரில் போராடுகிறது" என்பதை காட்டுகிறது. “எல்லா நிகழ்தகவுகளிலும், அவரை கேலி செய்யும் நிலையில் ராகுல் காந்தி இருந்து வருகிறார். அவர்கள் முதலில் தங்களை சரியாக மதிப்பீடு செய்து, பின்னர் தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என்பதை பிரித்து காட்ட வேண்டும். இப்போது காங்கிரஸின் பிரச்சனை என்னவென்றால், அக்கட்சியால் அதனை சுயமதிப்பீடு செய்ய முடியவில்லை, என்று கூறினார்.

"ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன்" கூட்டணிக்கான விருப்பங்களைத் திறந்து வைத்திருப்பது குறித்து சிந்தன் ஷிவிரில் காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட பிரகடனத்திற்கு மாறாக ராகுலின் கருத்து இருப்பதாக மனோஜ் ஜா குறிப்பிட்டார்.

டெல்லி, ராஞ்சி, லக்னோ, ஸ்ரீநகர், சண்டிகர், ஹைதராபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட இடங்களின் தகவல்களுடன் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment