கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவில் வுஹான் நகரத்தில் இயல்புநிலை முடங்கியுள்ள நிலையில், தாங்கள் வீடுகளில் பணயக்கைதிகளாக முடங்கியுள்ளதாக இந்திய மாணவர்கள் தெரிவித்துள்ள நிகழ்வு, இந்தியாவில் வாழும் அவர்களது பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இதுவரை, கொரோனோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருக்கிறது. வைரஸ் தாக்குதலால், 2,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகரில் மாணவர்கள் 250 பேர் உள்ளிட்ட இந்தியர்கள் சிலர் வசித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் வுஹான் நகரில் மருத்துவம் பயின்று வருகின்றனர். இவர்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்தியா மற்றும் சீன அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.
சீனாவின் வுஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்தில் மருத்துவ விஞ்ஞானியாக உள்ள ஸ்ரீகாந்த் (வயது 41), இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு வீசாட் ஆப் மூலமாக அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டிசம்பர் மாத இறுதியிலேயே, மர்ம வைரஸ் குறித்த பேச்சுக்கள் ஆங்காங்கே முணுமுணுக்கப்பட்டு வந்தது. உடனே எனது சீன நண்பர்கள், இது ப்ளூ காய்ச்சல் என்று தெரிவித்தனர். ப்ளூ காய்ச்சல், வின்டர் காலங்களில் சாதாரணமாக வருவதுதான் என்று அவர்கள் தெரிவித்தனர். நான் அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்.
ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிவாக்கில்,கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முறையான அறிவிப்பை சீன அரசு வெளியிட்டது. வுஹான் மாகாணத்தில் உள்ளவர்கள் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். நாங்கள் நினைத்ததை விட பன்மடங்கு அளவிற்கு, கொரோனா வைரசின் பாதிப்பு இருந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் விலங்குகளிடமிருந்து துவங்கியுள்ளது. பின் மனிதர்களிடையே வேகமாக பரவ துவங்கியது.
வுஹான் பகுதியில் உள்ள அமெரிக்கர்களை அங்கிருந்து வெளியேற, சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது. இங்கு அசாதாரண நிலை நிலவிவருவதால், இந்தியர்களாகிய தாங்களும் தூதரகத்தின் உதவியை நாடியுள்ளோம். வுஹான் பகுதியில் உள்ள தங்கள் நாட்டவர்களை, விரைந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில், அமெரிக்கா, பிரான்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளதாக ஸ்ரீகாந்த் கூறினார்.
கொரோனா வைரஸ் தடுக்க சர்ஜிகல் மாஸ்க் பயன்படுமா?
இந்தியாவிலும் வுஹான் வைரஸ்? சென்னை உட்பட 7 விமான நிலையங்களில் தெர்மல் சோதனை!
உத்தரபிரதேச மாநிலம் ஷகாரன்பூர் பகுதியை சேர்ந்த மாணவர் கூறியதாவது, நான் இங்குள்ள மருந்து நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். உணவு சமைக்க தேவையான காய்கறிகளை வாங்குவதில் இங்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு போனேன். நீண்ட நெடிய வரிசை அங்கு காணப்படுகிறது. காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளதால், அனைத்து காய்கறிகளும் விரைவில் விற்று விடுகிறது. இதன்காரணமாக, ஏமாற்றமே மிஞ்சுகிறது. மறுநாள் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். வெளியில் நிலை சரியில்லை, எனவே வெளியே போக வேண்டாம் என்று சீன நண்பர்கள் அறிவுறுத்தினர்.
நான் தற்போது உடல்நலத்துடன் உள்ளேன். ஆனால், இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனக்கு ஏதாவது நேர்ந்தால், சீன அல்லது இந்திய அரசு தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உயிரியல் மேற்படிப்புகளுக்கான மையமாக சீனாவின் வுஹான் நகரம் விளங்கி வருகிறது. இங்கு அதிகளவிலான இந்திய மாணவர்கள் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பீதியால், அவர்கள் தற்போது டார்மிடரி அறையில் முடங்கியுள்ளனர். அவர்கள் எப்போதும் ஒருவித பயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். சில பல்கலைகழகங்கள், மாணவர்களின் வசதிக்காக பட்டாசுகள், குக்கீஸ், உலர் பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளன. இந்த கேம்பஸில் இருந்து நான் வெளியேறுவதை தடுக்கும் பொருட்டு, எனது பாஸ்போர்ட்டை, எனது பல்கலைக்கழகம் வைத்துக்கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
என்னால் இங்கே இருந்து கஷ்டப்பட முடியாது, நான் வீட்டிற்கு செல்ல வேண்டும். நான் இங்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளேன். நான் இந்நேரத்தில் இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன் என்று டாஞ்ஜி மருத்துவ பல்கலைகழகத்தில் படிக்கும் கர்நாடகாவை சேர்ந்த மாணவர் கூறினார்.
பல்கலைகழகத்தில் உள்ள சில மாணவர்கள், பிரைவேட் வாகனங்களின் மூலம், இங்கிருந்து வெளியேற முயற்சி செய்கின்றனர். அவர்கள் வுஹான் பகுதியை விட்டு வெளியேற எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க தயாராகவே உள்ளனர். ஆனால், அவர்களை ஏற்றிக்கொள்ள வாகன உரிமையாளர்கள் தயாராக இல்லை.
நாங்கள் வெளியே சென்றால் தான் எங்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும். வெளியில் நிலைமை சரியில்லாததன் காரணத்தினால், நாங்கள் அறைகளிலேயே முடங்கி கிடக்கிறோம். வைரஸ் பீதி குறித்த மனஅழுத்தத்தின் காரணமாக எங்களால் நிம்மதியாக இருக்கவோ, உறங்கவோ முடிவதில்லை. எங்களின் நிலை குறித்து இந்தியாவில் உள்ள எங்களின் பெற்றோர்களிடம் அவ்வப்போது தெரிவித்து வருவதாக, ஜியாங்கான் பல்கலைகழகத்தில்படிக்கும் ஹரியானாவை சேர்ந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
சீன பல்கலைகழகங்கள், வீசாட் ஆப்பின் மூலம், மாணவர்களுக்கு அவ்வப்போது முக்கிய தகவல்களை அளித்து வருகின்றன. சாப்பிட வெளியில் செல்ல வேண்டாம். தேவைப்படின், பல்கலைகழக கேண்டீனுக்கு செல்லவும். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல், யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
இங்கு நிலைமை, நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு வருகிறது. இது எல்லாம் பார்ப்பதற்கு சரியாக படவில்லை என்று விஞ்ஞானி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.