PTI
CWC Rahul Gandhi Blames Senior Leaders : நடைபெற்று முடிந்த 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியைக் கூட வெற்றி பெறாமல் மாபெரும் தோல்வியை தழுவியது. நடைபெற்று முடிந்த காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் தோல்விக்கு காரணங்கள் என்ன என்று விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நடத்திய அந்த ஆலோசனைக் கூட்டத்தில், மூத்த தலைவர்கள் தரப்பில் செய்த தவறுகள் குறித்தும் ராகுல் காந்தி விரிவாகக் கூறினார். கட்சியின் நிலைத்த தன்மையை தக்கவைக்க, மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தலைமையுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
தேர்தலில் படுதோல்வி அடைந்ததோடு, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என
காந்தி குடும்பத்தினர் போட்டியிட்டு தக்கவைத்துக் கொண்ட அமேதி தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார்.
கோபத்தில் பேசிய ப்ரியங்கா காந்தி
4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுமையிழந்த ப்ரியங்கா காந்தி, இந்த தோல்விக்கு காரணமானவர்கள் அனைவரும் இதே இடத்தில் தான் அமர்ந்து கொண்டிருக்கின்றோம். என் அண்ணனை மட்டும் தனியாக போராடவிட்டுவிட்டு நீங்கள் எல்லாம் எங்கே சென்றீர்கள் என்று சீற்றமாக பேசியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க : சிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி
/tamil-ie/media/media_files/uploads/2019/05/6cba9ab4-84ba-485f-9a64-3d9f38fae1d9-1024x682.jpg)
ஆலோசனைக் கூட்டத்தில் வெகு நேரம் கோபத்துடன் அமைதியாக இருந்த ப்ரியங்கா காந்தி, ராகுல் காந்தியை யாரும் ஆதரிக்கவில்லை. ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பேசிய போதும், மோடி மீது குற்றச்சாற்று வைத்த போதும், யாரும் ராகுலுடன் அந்த் குற்றச்சாட்டுகளை ஆமோதித்து தங்களின் கருத்துகளை முன்வைக்க வில்லை என்று கோபத்துடன் பேசினார்.
மூத்த தலைவர்கள் மீது குற்றம் சுமத்திய ராகுல்
முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் குடுத்ததால் தான் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தாங்கள் நிற்க வேண்டிய இடத்தில் தங்களின் மகன்களுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்த ப.சிதம்பரம், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் மற்றும் ராஜாஸ்தான் முத்ல்வர் அசோக் கெலாத் ஆகியோர் தங்களின் தொகுதியை தங்களின் வாரிசுகளுக்கு தாரை வார்த்து கொடுத்தது குறிப்பித்தக்கது.
கமல்நாத் மகன் நகுல் மற்றும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் வெற்றி பெற்றனர். ஆனால் கெலோத்தின் மகன் வைபவால் வெற்றி பெற இயலவில்லை.
கார்த்திக்கு இம்முறை இடம் ஒதுக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து விலகுவேன் என்று ப.சிதம்பரம் மிரட்டினார் என்று கூறிய ராகுல் காந்தி, மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத்தோ, என் மகனுக்கு தொகுதியில் வாய்ப்பில்லை என்றால் நான் எப்படி ஒரு முதல்வராக நிலைத்து நிற்க முடியும் என்று கூறினார் என்கிறார் ராகுல் காந்தி. ராஜஸ்தான் முதல்வரோ, மகனுடன் இணைந்து பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு, 7 நாட்களாக மாநிலத் தேவைகளை கவனிக்காமல் பின் தங்கிவிட்டார் என்று கூறிய அவர், இந்த காங்கிரஸ் கட்சிக்கு வேறு யாரேனும் ஏன் தலைவராக இருக்க கூடாது என்றும் வேதனையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடியின் ஊழலுக்கு எதிராகவும், ரஃபேல் பேர ஒப்பந்த ஊழலுக்கு எதிராகவும் எத்தனை பேர் மிகவும் முறையாக பிரச்சாரம் நடத்தி, பிரச்சனையை மக்கள் மத்தியில் யாரெல்லாம் கொண்டு போய் சேர்த்தீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.