2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன் – பிரிஜ் பூஷன் சரண் சிங்
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பிறகு நடந்த முதல் பேரணியில் தனது பலத்தை காட்டிய பிரிஜ் பூஷன் சரண் சிங்; 2024 தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 11, 2023, கோண்டாவில் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் உரையாற்றுகிறார். (PTI புகைப்படம்)
இந்தியாவின் முன்னணி பெண் மல்யுத்த வீரர்கள் சிலர் அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எழுப்பியதற்கு பிறகு நடந்த, அவரது முதல் பேரணியில் உரையாற்றிய போது, ”நான் கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் உறுதியாக கூறினார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும் பா.ஜ.க எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், 2024 மக்களவைத் தேர்தலுக்கான தனது திட்டங்களை உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தின் கத்ரா பகுதியில் உள்ள தனது கைசர்கஞ்ச் தொகுதியில் நடைபெற்ற பேரணியில் தெளிவாகக் கூறினார்.
பேரணியில் தனது உரையில், மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பையோ அல்லது அவர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளையோ பிரிஜ் பூஷன் சரண் சிங் நேரடியாக குறிப்பிடவில்லை. “இது என் அன்புக்காக நான் பெற்ற வெகுமதி, அவர்கள் என்னை துரோகம் என்கிறார்கள் என்ற வரிகளுடன் பேச்சைத் தொடங்கிய பிரிஜ் பூஷன் சரண் சிங், இதை அவப்பெயர் அல்லது புகழ் என்று அழைத்து, அவர்கள் என் பெயரை கெடுக்க நினைக்கிறார்கள்," என்று கூறினார்.
பெரும்பாலும் காங்கிரஸை குறிவைத்து, மத்தியில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ அரசாங்கத்தைப் பாராட்டிய பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உரைக்குப் பிறகு, 2024 தேர்தலில் எங்கிருந்து போட்டியிடுவீர்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அப்போது கைசர்கஞ்ச் தொகுதியில் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை பேரணி நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஒன்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொடங்கப்பட்ட பா.ஜ.க.,வின் மக்களை சென்றடையும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் இதேபோன்ற பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கைசர்கஞ்சில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் பேரணி அவர் நடத்தும் கல்லூரியில் நடைபெற்றது.
பிரிஜ் பூஷன் சரண் சிங் முன்னதாக ஜூன் 5 ஆம் தேதி அயோத்தியில் ஜன் சேத்னா மகா பேரணி நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தார், ஆனால் பின்னர் அவர் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கோள் காட்டி அதை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை, SUV கள் அணிவகுத்த படையின் ஒரு பகுதியாக இருந்த ஒரு வாகனத்தின் மேல் அமர்ந்து பேரணி மைதானத்தை பிரிஜ் பூஷன் சரண் சிங் அடைந்தார். அவருக்கு "உ.பி. புலி பிரிஜ் பூஷன் சிங்" என்ற கோஷங்களுடன் மேடையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேடையில், நிகழ்வின் பொறுப்பை ஏற்று, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களை "சிறிய" உரையாற்ற அழைத்தார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது உரையில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுகளை கடுமையாக சாடினார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசின் கீழ், பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலத்தை இந்தியா இழந்துள்ளது என்று அவர் கூறினார்.
1975 மற்றும் 1977 க்கு இடையில் விதிக்கப்பட்ட அவசர நிலை மற்றும் 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்தும் பிரிஜ் பூஷன் சரண் சிங் காங்கிரஸைத் தாக்கினார்.
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பா.ஜ.க பெற்ற பெரிய வெற்றிகளை நினைவு கூர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், 2024-ல் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அரசின் முயற்சிகளை பிரிஜ் பூஷன் சரண் சிங் பாராட்டினார்.
“இந்தப் புகழ் மோடிக்குத்தான் செல்கிறது, ஆனால் அதற்கு முன்பே அது கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் செல்கிறது. அவர்கள் மோடியின் திறமையை செயல்படுத்தியுள்ளனர்.” என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறினார்.
பேரணியில் பேசிய மற்ற பா.ஜ.க தலைவர்கள் தங்கள் உரைகளில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கைப் பாராட்டினர்.
பிரிஜ் பூஷன் சரண் சிங்கை "பூர்வாஞ்சல் கே கவுரவ் (கிழக்கு பிராந்தியத்தின் பெருமை)" என்றும் "இளைஞர்களுக்கு உத்வேகம்" என்றும் எம்.எல்.சி மஞ்சு சிங் கூறினார்.
பேரணியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற மத்தியப் பிரதேச அமைச்சர் மோகன் யாதவ், 55 கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை பிரிஜ் பூஷன் சரண் கட்டியுள்ளதாகவும், கல்வியை மேம்படுத்தியதாகவும் கூறி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு கைதட்டுமாறு கூட்டத்தினரைக் கேட்டுக்கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil