பீமா கோரேகான் கைது நடவடிக்கைள் : இந்த வருட ஆரம்பத்தில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில், பீமா கோரேகான் பகுதியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தை காரணம் காட்டி சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து வருகிறது புனே காவல் துறை.
பீமா கோரேகான் பகுதியில் இந்த வருடம் ஜனவரி மாதம், பேஷ்வா மக்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்ற மஹர்களின் சரித்திரத்தின் இரண்டாவது நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் குஜராத்தினை சேர்ந்த எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, ஜெ.என்.யூ மாணவர் உமர் காலித், மற்றும் ரோஹித் வெமுலாவின் தாயார் கலந்து கொண்டனர். அச்சமயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்திற்கு எல்கர் பரிசாத் நிகழ்வே காரணம் என்றும் அதில் மாவோயிஸ்ட்டுகளின் ஊடுருவல்கள் இருந்தன என்று கூறி அவர்களுக்கு உதவியதாக சமூக செயற்பாட்டாளர்கள் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், வழக்குரைஞர்கள் என ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர் புனே காவல்துறையினர்.
பல்வேறு சமூக அமைப்புகள், தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் இதற்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யத் திட்டமிட்ட மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டு சேர்ந்திருப்பதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அது பற்றிய முழுமையான செய்தியினைப் படிக்க
பீமா கோரேகான் கைது நடவடிக்கைள் பற்றி ராகுல் காந்தியின் பதிவு
இதைப்பற்றி, காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பகுதியில் கடுமையான விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தவிர அனைத்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் மூடி விடுங்கள். ஆர்.எஸ்.எஸ் ஒன்று மட்டுமே இந்தியாவில் இயங்கட்டும்.
பின்பு இந்த சமூக செயற்பாட்டாளார்கள் மற்றும் சிந்தனையாளர்கள் அனைவரையும் ஜெயில் இடுங்கள். அவர்கள் மீதான் புகார்கள் அனைத்தும் பொய்யாகட்டும். புதிய இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறேன் என்று பொருள்படும் ட்விட்டர் கருத்தை பதிவு செய்தார்.