scorecardresearch

ஆம் ஆத்மி தலைவர்கள் ’சவுத் குரூப்’ மூலம் ரூ.100 கோடி பெற்றனர்; நீதிமன்றத்தில் இ.டி குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் சார்பில் ஆம் ஆத்மியின் விஜய் நாயர், சவுத் குரூப் மூலம் ரூ.100 கோடி பெற்றார்: நீதிமன்றத்தில் தெரிவித்த அமலாக்கத்துறை

ஆம் ஆத்மி தலைவர்கள் ’சவுத் குரூப்’ மூலம் ரூ.100 கோடி பெற்றனர்; நீதிமன்றத்தில் இ.டி குற்றச்சாட்டு

Mahender Singh Manral

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கை விசாரித்த அமலாக்க இயக்குனரகம், ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில், ஆம் ஆத்மி தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர், குறைந்தபட்சம் ரூ. 100 கோடி கிக்பேக் (லஞ்சம்) பெற்றதாக, தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தது.

“சரத் ரெட்டி, கே.கவிதா, மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி ஆகியோரால் கட்டுப்படுத்தப்படும் சவுத் குரூப் என்ற குழுவிலிருந்து” பணம் வந்ததாக அமலாக்கத்துறை கூறியது. கவிதா யார் என அமலாக்கத்துறை அடையாளம் காட்டவில்லை.

இதையும் படியுங்கள்: தெலுங்கானா அரசியலில் தீவிரம் காட்டும் ஜெகனின் சகோதரி; எதிர்க்கும் டி.ஆர்.எஸ்

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பா.ஜ.க தலைவர்களான பர்வேஷ் வர்மா மற்றும் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆகியோர், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கே.கவிதாவுக்கு, டில்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை நிராகரித்த கவிதா, அவதூறு வழக்கு தொடரப்போவதாக கூறினார். சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் சவுத் குரூப் மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் நபர்கள் என்று அமலாக்கத்துறை பெயர்களை குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை வைத்ததையடுத்து, இது குறித்து கருத்துக்களை கவிதாவிடம் பெறமுடியவில்லை.

டெல்லி கலால் கொள்கை (2021-22) என்பது மாநில கருவூலத்தின் செலவில் சட்டவிரோதமான நிதியை உருவாக்குவதற்கான, டெல்லி அரசாங்கத்தில் உள்ள சிலர் உட்பட ஆம் ஆத்மி தலைவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு “சாதனம்” என அதன் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

செப்டம்பரில் பதிவு செய்யப்பட்ட அமலாக்கத்துறை வழக்கு, ஆகஸ்டில் தாக்கல் செய்யப்பட்ட சி.பி.ஐ எஃப்.ஐ.ஆரை அடிப்படையாகக் கொண்டது.

விசாரணை நீதிமன்றத்தில் விஜய் நாயர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சமுத்திர சாரங்கி, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

குர்கானில் உள்ள பட்டி ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் அமித் அரோரா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரிமாண்ட் விண்ணப்பத்தில், டெல்லி கலால் கொள்கை “வேண்டுமென்றே ஓட்டைகளுடனும் (முறைகேட்டிற்கான வழிகள்)”, “சட்டவிரோத நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான உள்ளமைக்கப்பட்ட பொறிமுறையுடனும்” உருவாக்கப்பட்டதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

“இந்தக் கொள்கை… உண்மையில்… பின் கதவு வழியாக கார்டெல் (கள்ளச்சந்தை) அமைப்புகளை ஊக்குவித்தது, அதிகப்படியான மொத்த விற்பனை (12%) மற்றும் பெரிய சில்லறை (185%) லாப வரம்புகளை வழங்கியது மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்தது” என்று அமலாக்கத்துறை கூறியது.

விசாரணை அதிகாரி, உதவி இயக்குனர் ஜோகெந்தர், மொத்த விற்பனையாளர்களுக்கு 12% லாப வரம்பு என்பது ஆம் ஆத்மி தலைவர்களுக்கு ஒரு கிக்பேக்காக (லஞ்சமாக) அதில் பாதியை பிரித்தெடுக்க திட்டமிடப்பட்டது என்று கூறினார்.

“இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி, அமித் அரோரா உட்பட பல்வேறு நபர்களால் சரத் ரெட்டி, கே.கவிதா, மகுண்டா சீனிவாசலு ரெட்டி ஆகியோரால் கட்டுப்படுத்தப்படும் சவுத் குழுமத்திடம் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில் விஜய் நாயர் குறைந்தபட்சம் ரூ.100 கோடி வரை கிக்பேக் பெற்றுள்ளார். இதையே கைது செய்யப்பட்ட அமித் அரோரா தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்” என்று விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விஜய் நாயர், தினேஷ் அரோரா மற்றும் அமித் அரோராவுடன் கூட்டு சேர்ந்து, சில மொத்த விற்பனையாளர்களை தங்கள் எல்-1 உரிமங்களை சரண்டர் செய்ய செய்தார், பின்னர் தனக்கு விருப்பமான மொத்த விற்பனையாளர்களைத் தேர்ந்தெடுக்கவும், லாப வரம்புகளை விருப்பமுள்ள நபர்களுக்கு வழங்கவும் தயாரிப்பாளர்களை வற்புறுத்தினார், என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

“சதியின் காரணமாக, அரசு 12% வருவாயை இழந்தது – நிபுணர் குழு பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், ரூ. 581 கோடி வருவாய் குவிந்திருக்கும், ஆனால் இது மதுபானக் கொள்கையில் ஆம் ஆத்மி தலைவர்களின் தனிப்பட்ட கருவூலங்களை நிரப்ப ஒருசில தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. அரசாங்க கருவூலத்திற்கு ஏற்பட்ட இந்த இழப்பு உண்மையில் சட்டவிரோதமாக மொத்த விற்பனையாளர்களுக்கு ஆடம்பரமான இலாபமாக மாற்றப்பட்டது, இது ‘சவுத் குழுமம்’ மூலம் முன்கூட்டியே செலுத்தப்பட்ட கிக்பேக்குகளை திரும்பப் பெற பயன்படுத்தப்பட்டது, ”என்று விசாரணை அதிகாரி கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், விஜய் நாயர் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அபிஷேக் போயின்பல்லி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியபோது, ​​ சி.பி.ஐ கூறியது போல் பெரிய அளவிலான பணப் பரிமாற்றத்தைக் காட்ட வாய்மொழியைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை என்று டெல்லி நீதிமன்றம் கூறியது.

“விசாரணையின் போது வாய்மொழி ஆதாரங்கள் சோதிக்கப்பட வேண்டும், அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரமாக மாற்ற முடியுமா இல்லையா என்பது காலம் தீர்மானிக்கக் கூடிய விஷயம், அப்போது தான் நீதிமன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று நீதிமன்றம் கூறியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Excise policy case aaps vijay nair got rs 100 crore kickbacks on behalf of party leaders ed to court