ஆதார் சட்டம் என்றால் என்ன ? உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு பார்வை

வங்கிக் கணக்குகள் & புதிய மொபைல் சேவைகளை பெற ஆதார் தேவையில்லை. ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆதார் எண்ணை என்ன செய்வது?

ஆதார் சட்டம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு : புதன்கிழமையன்று (26/09/2018) உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பொன்றை வழங்கியது. அதாவது ஆதார் சட்டம் செல்லும் என்று 5ல் நான்கு நீதிபதிகள் தங்களின் தீர்ப்பினை நேற்று வாசித்தார்கள்.  ஆதார் சட்டத்தினை நிதி மசோதாவாக அறிவிக்கக் கோரி மத்திய அரசிற்கு வேண்டுகோளையும் விடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

எதற்காக உருவாக்கப்பட்டது ஆதார் அட்டை ?

ஆதார் அட்டை இரண்டு முக்கிய இலக்குகளை எட்டுவதற்காக உருவாக்கப்பட்டது. அதில் முதலாவது டிஜிட்டல் மையமாக்கப்பட்ட அடையாள அட்டை மூலமாக சாமனிய மனிதர்களை அடையாளம் கண்டு கொள்வதை எளிமைப்படுத்துவதற்காக. மற்றொன்று பல்வேறு அடையாள அட்டைகளுக்கு மாற்றாக ஒற்றை அடையாள அட்டை பயன்படுத்தும் முறைக்காக.

முதலாவது இலக்கினைப் பற்றி நேற்று குறிப்பிடுகையில், ஆதார் திட்டத்தின் கட்டமைப்பு, ஆதார் சட்டத்திற்கான தேவைகள், மற்றும் தனி மனித பாதுகாப்பினை மீறாமல் வழிநடத்துதல் போன்ற பல முக்கியமான அம்சங்களை தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்கள்.

அதே போல் எங்கெல்லாம், எதற்கெல்லாம் ஆதார் தேவையில்லை என்பதையும் பட்டியலிட்டார்கள். குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் சேர்வதற்கு, வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கெல்லாம் இனி ஆதார் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்கள்.

மேலும் படிக்க எதற்கெல்லாம் ஆதார் அட்டை தேவையில்லை

ஆதார் சட்டம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு : ஆதார் குறித்த பயம் முகாந்திரம் அற்றது

ஐந்து பேர் அடங்கிய அமர்வு நீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகள் ஆதார் சட்டத்திற்கு ஆதரவாக தீர்ப்பினை வழங்கினார்கள். எக்காரணம் கொண்டும் தனிமனித பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கும் வகையில், பதிவு செய்யப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை பயன்படுத்தக் கூடாது என்று கூறினார்கள். மேலும் ஒரு மனிதன் வாழும் இடம், செய்யும் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று கூறும் கருத்து முகாந்திரம் அற்றது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

மேலும் படிக்க : ஆதார் சட்டம் பற்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஆதார் சட்டம் குறித்து சந்திரசூட்

ஆதார் சட்டம் நிதி மசோதா, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், ஆதார் சட்டம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நீதிபதி சந்திரசூட்

அமர்வு நீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பினை வழங்க, நீதிபதி சந்திர சூட் மற்றும் வேறு மாதிரியான தீர்ப்பினை வழங்கினார். அதில் ”ஆதார் மூலமாக நிச்சயம் தனி மனித பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது என்றார். மேலும் கடந்த ஐந்து வருடங்களில், இந்தியாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் எங்கு சென்றார்கள், எங்கே வாழ்ந்தார்கள், அவர்கள் எவ்வளவு பண பரிவர்த்தனை செய்தார்கள் என்று நிச்சயம் கண்டறிய முடியும் என்று கூறினார். வெரிஃபிகேஷன் லாக் இல்லாமலே ஆதார் மூலம் திரட்டப்பட்ட தகவலைக் கொண்டு நிச்சயம் ஒரு மனிதனின் இருப்பிடத்தை கண்டறிய இயலும்” என்று தன்னுடைய தீர்ப்பில் கூறினார் சந்திரசூட்.

மேலும் படிக்க : ஆதார் சட்டம் நிதி மசோதாவிற்கான தகுதியைப் பெறவில்லை – நீதிபதி சந்திரசூட்

தனிமனித உரிமைகளை கேள்விக்குள்ளாக்குகிறதா ஆதார் சட்டம் ?

அரசியல் சாசன சட்டம் 21 தனிமனித ரகசியங்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதாகும். ஆனால் தனிமனித ரகசியங்கள் எதையெல்லாம் ஆதார் பாதுகாக்க வேண்டும் என்று நேற்று கூறப்பட்டது. முன்னாள் நீதிபதி புட்டசாமி ஆதார் தனிமனித ரகசியங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமா என்று கேள்வி எழுப்பியவர்களில் மிகவும் முக்கியமானவர். அவரின் மனுவைத் தொடர்ந்து ஆதார் மற்றும் தனிமனித பாதுகாப்பு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆதார் சட்டம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆதார் எங்கு தேவை எங்கு தேவையில்லை

ஆனால் அதே சமயத்தில் இந்திய அரசியல் சாசனப்படி ஆதார் எண் எங்கெல்லாம் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். தனியார் கார்ப்பரெட் நிறுவனங்களுக்கு எந்த விதத்தில் ஆதார் அட்டையின் பயன்பாடு தேவைப்படுகிறது என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம்.  1961 வருமான வரிச்சட்டம், பிரிவு 139ஏஏவின் படி ஆதார் அட்டை வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் PAN அட்டையை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாகிறது என்று அறிவித்தது நீதிமன்றம்.

பள்ளிகளில் சேர தேவையா ஆதார் அடையாள அட்டை ?

பெற்றவர்கள் மற்றும் கார்டியன்கள் விருப்பப்பட்டால் தன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது ஆதார் அடையாள எண்ணை பகிரலாம். ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்னர் ஆதாரினால் அடையப் போகும் நன்மையை பெறுவது குறித்து குழந்தைகளே முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் நேற்றைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவில் 6 முதல் 14 வயது குழந்தையின் கல்வி என்பது அக்குழந்தையின் அடிப்படை உரிமை. ஆகவே பள்ளி நிறுவனங்கள் சேவை மற்றும் நலத்திட்டங்களில் சேராது. ஆகவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை.

ஆதார் சட்டம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு : வங்கி மற்றும் நிதி சேவைகளில் ஆதார்

2017ம் ஆண்டில் பண மோசடி தடுப்புச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்ததின் படி வங்கிக் கணக்கு தொடங்க, க்ரெடிட் கார்ட்கள் சேவையை பெற, இன்சூரன்ஸ் பாலிசி, மற்றும் இதர நிதி சேவைகளை பயன்படுத்த ஆதார் அவசியம் ஆகும். ஆனால் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் “ராம் ஜெத்மலானி அவர்களின் தீர்ப்பினை மேற்கோள் காட்டி, இது நிச்சயம் தனிமனித உரிமைகளை மீறும் நடவடிக்கை ஆகும்” என்று கூறினார்கள். ஆகவே வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் இனி தேவையில்லை என்று நேற்றைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே வங்கிகள் மற்றும் இதர மொபைல் சேவைகளில் பதியப்பட்டிருந்த ஆதார் எண்ணை நீக்குவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close