குஜராத்தை சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் நடத்திய தொழிலதிபர் நிதின் ஜெயந்திலால் சந்தேசரா பொதுத்துறை வங்கிகளில் இருந்து 5300 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டு, இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டார்.
அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் இவர் மீது வழக்கு தொடுத்து இவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இவரை அமீரக அரசாங்கம் ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்தது என்ற தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து அமீரகத்திற்கு நிதின் தொடர்பாக கடிதம் ஒன்று எழுதப்பட்டது.
ஆனால் தற்போது நிதின் ஜெயந்திலால் சந்தேசரா அமீரகத்தில் இல்லை என்று அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டிருக்கிறது அந்நாடு. மேலும் அவருடைய முதலீடு இங்கிலாந்தில் இருந்து நைஜீரியா வரை பரவி இருக்கிறது. அவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது. புலனாய்வுத் துறையின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இந்த வழக்கினை விசாரித்து வருகிறார்.
மேலும் படிக்க அலோக் மீது குற்றம் சுமத்தும் ராகேஷ் அஸ்தானா
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம், அமீரகத்தில் கைது செய்யப்பட்ட நிதினை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது புலனாய்வுத் துறை. ஆனால்ல் அமீரகம் ஏன் இது தொடர்பாக எந்த ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என்று புலனாய்த்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம்
நிதின் மற்றும் அவருடைய சகோதரர் சேத்தன் ஜெயந்திலால் மற்றும் சில இயக்குநர்கள் வதோதராவை மையமாக கொண்டு ஸ்டெர்லிங் என்ற மருந்தக நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். வியாபரத்திற்காக அவர்கள் ஆந்திரா வங்கியிடம் இருந்து ரூ. 5383 கோடி ரூபாயை கடனாக பெற்று பின்னர் அதனை அசையா சொத்துகளாக மாற்றிக் கொண்டார்கள். இந்த மோசடியில் பல அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் முக்கிய ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிபிஐ எப்போது இந்த வழக்கை கையில் எடுத்ததோ அப்போதில் இருந்து சந்தேசரா சகோதரர்கள் தலைமறைவாக உள்ளனர். அமலாகத்துறை ஸ்டெர்லிங் நிறுவனத்தின் மீது பண மோசடி வழக்கினை பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
குற்றவாளிகளைத் தேடி வரும் சிபிஐ
சந்தேசரா சகோதரர்கள் இல்லாமல் இந்த வழக்கில், ஸ்டெர்லிங் நிறுவனத்தின் இதர இயக்குநர்களான திப்தீ சேத்தன் சந்தேசரா, ராஜ்பூஷன் ஓம்பிரகாஷ் திக்சீத், மற்றும் விலாஸ் ஜோஷி, கணக்கர் ஹேமந்த் ஹத்தி, ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் அனுப் கர்க் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறது அமலாக்கத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
புலனாய்வுத் துறையின் முதல் தகவல் அறிக்கையின் படி “இவ்வளவு பெரிய தொகையை கடனாக பெறுவதற்கு போலி ஆவணங்களை இந்நிறுவனம் பயன்படுத்தி உள்ளது” என்று கூறியிருக்கிறது.
2008ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி கணக்கீட்டின் படி 50 கோடி ரூபாய் மட்டுமே வியாபர முதலீட்டில் பயன்படுத்தியிருக்கிறது இந்நிறுவனம். மீதம் இருந்த 355 கோடி ரூபாயினை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது என்று கண்டறியப்பட்டது.
2007 -08 நிதியாண்டில் இந்த கம்பெனியின் டர்ன் ஓவர் என்பது 304. 8 கோடி தான். ஆனால் ஐ.டி ரிட்டன்ஸ் மற்றும் பேலன்ஸ் ஷீட்டில் 918. 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருக்கிறது.