Fani Cyclone Affects Puri Jagannath temple : ஒரு வாரத்திற்கும் மேலாக வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஃபனி புயல் இன்று காலையில் இருந்து ஒடிசாவில் கரையைக் கடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கலிங்கப்பட்டினம் மற்றும் பீமுனிப்பட்டினம் ஆகிய இரண்டு துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூரி பகுதியில் உள்ள 10 லட்சம் மக்கள் பத்திரமான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் கனத்த மழை மற்றும் பலமான காற்று வீசி வருகிறது. சாலைகளில் உள்ள மரங்கள் எல்லாம் முற்றிலுமாக கீழே முறிந்து விழ மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் இருக்கும் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் பூரியாகும். காலையில் இருந்தே சுமார் 142 கி.மீ முதல் 174 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. மேலும் கனத்த மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஃபனி புயலின் எச்சரிக்கையால் பலர் தங்களின் வீடுகளில் முடங்கியுள்ளனர். பூரியில் அமைந்துள்ளது 850 கால பழமை வாய்ந்த ஜெகநாதர் ஆலயம். எப்போதும் அதிக அளவு கூட்டத்துடன் காணப்படும் இந்த கோவிலில் இன்று வழக்கத்துக்கு மாறாக நிசப்தம் நிறைந்ததாக இருக்கிறது. மேலும் அதிகாலையில் மழைக்கு மத்தியில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
புயல் காலங்களில் நேரடியாக பாதிப்பை சந்திக்க கூடிய முதல் மாவட்டம் என்றால் ஒடிசாவில் பூரி மாவட்டம் தான். கோவிலில் உள்ள கோபுரங்களில் நீலச்சக்கரத்துடன் பானா எனப்படும் கோவில் கொடியை கட்டுவது வழக்கம். புயலின் தாக்கத்தால் அதனை மாற்றிவிட்டு 4 அடி நீளத்தில் ஒரு பானா கட்டப்பட்டுள்ளது.
பூரி மாவட்டத்தில் உள்ள பூரி கடற்கரையில் 12ம் நூற்றாண்டு கீழைக்கங்கர் வம்சத்தில் வந்த ஆனந்தவர்மன் சோட கங்கனால் கட்டப்பட்டது இந்த கோவிலாகும். ஃபனியால் நேரடி பாதிப்புக்கு ஆளாகியுள்ளது இந்த கோவில்.
ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும் தேரோட்ட திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால் இன்று தேர்வீதிகள் முழுவதும் நாசம் அடைந்துவிட்டது. கோவிலுக்கு எந்த விதமான ஆபத்தும் வராது என்று நான் நம்புகின்றேன் என தலைமை பூசாரி சோம்நாத் க்ஹந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.