உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் பலரும் போர் களத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மாணவர்களை இந்திய அரசு மீட்டுள்ளது. இருப்பினும், மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அவர்களை மீட்கும் பணிகளையும் இந்தியத் தூதரகம் முன்னெடுத்து வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் தினமும் தாயகம் திரும்பி வருகின்றனர்.
அவர்களை மீட்பதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. உக்ரைனுக்கு சென்ற பெரும்பாலான மாணவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.
திடீர் போர் காரணமாக அவர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய அரசு விதிகளில் திருத்தங்களை செய்து மீண்டும் அவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மருத்துவக் கல்வியை தொடர தேவையான முயற்சிகளை எடுப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலினும் நம்பிக்கை அளித்துள்ளார்.
எனினும், இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்: உக்ரைன் குறித்து ஜெலன்ஸ்கியுடன் விவாதித்த மோடி – 35 நிமிட உரையாடலில் பேசியது என்ன?
சில மாணவர்கள் இரண்டாண்டுகளும், சில மாணவர்கள் மூன்றாண்டுகள், நான்காண்டுகளும் மருத்துவக் கல்வியை படித்து முடித்திருக்கின்றனர்.
உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியாவில் மருத்துவ கல்வியை தொடர உதவுவதாக சில மோசடி பேர்வழிகள் அணுக வாய்ப்புள்ளது என மாணவர்களை உக்ரைனில் உள்ள வி.என். கார்கிவ் தேசிய பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
இரண்டாம் ஆண்டு மருத்துவக் கல்வி மாணவரான அருள் ராஜ் கூறுகையில், அமைதியாக இருக்குமாறு பல்கலைக்கழகம் எங்களிடம் கூறியுள்ளது. மார்ச் 13-ஆம் தேதி வரை பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்கிறார்.
லிவிவில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் அபிஷேக் சிங் என்ற மாணவர், வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாறி படிப்பை தொடர வேண்டும் என்றால் மதிப்பெண் சான்றிதழ்களையும், ஆய்வு திட்டங்களையும் வழங்க வேண்டும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், உக்ரைனில் மருத்துவக் கல்விக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.3.76 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் படிக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு சுமார் ரூ.7.7 லட்சம் செலுத்த வேண்டி இருக்கும் என்றார்.
குறைந்த கல்வி கட்டணம் என்பதால் உக்ரைனை தேர்வு செய்த மாணவர்களுக்கு இது மிகப் பெரிய சுமையாகி விடும்.
இந்திய மாணவர் யஷ் ராணாவின் தந்தை ராஜ் குமார் ராணா கூறுகையில், இந்தியாவில் மருத்துவக் கல்வி படிக்க வேண்டுமானால் 6 ஆண்டுகளுக்கு குறைந்தது ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை செலவாகும். உக்ரைனில் ரூ.35 லட்சம் மட்டுமே ஆகும் என்றார்.
ஆன்லைன் வகுப்பு இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்திலிருந்து தகவலுக்காக காத்திருக்கிறோம் என்று சோனியா யாதவ் என்ற மாணவி கூறினார்.
இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயின்றால் அங்கேயே தான் முழு கல்வியையும் முடிக்க வேண்டும். அத்துடன், பயிற்சியையும் அங்கேதான் செய்து முடிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ கமிஷன் (வெளிநாடு மருத்துவ பட்டாதாரிகளுக்கான உரிமம்) ஒழுங்குமுறை 2021இன் படி ஆன்லைனில் மருத்துவக் கல்வி படித்து முடித்தால் இந்தியாவில் மருத்துவ தொழில் புரிய அங்கீகாரம் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல முட்டுக்கட்டைகள் இருப்பதால் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மருத்துவக் கல்வி மாணவ-மாணவிகளின் கல்வி நிலையின் அடுத்த கட்டம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil