2020ம் ஆண்டில் கவனிக்கப்பட வேண்டிய ஆளுமைகள்… ஃபோர்ப்ஸில் இடம் பெற்ற இந்தியர்கள் யார்?

வருங்காலத்தில் இந்திய அரசியலில் மிக முக்கியமான அங்கமாக இவர் திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By: Updated: January 8, 2020, 05:36:51 PM

Forbes India 20 people to watch in 2020 : 2020ம் ஆண்டு பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் எக்கச்சக்க வளர்ச்சிகள், மாற்றங்கள், பின்னடைவுகள், அரசியல் மாற்றங்கள் என அனைத்தையும் கடந்துவிட்டோம். ஆனால் அதன் தாக்கங்கள் இந்த பத்தாண்டுகளிலும் தொடரலாம். அல்லது இந்த 10 ஆண்டுகளில் அரசியல் மீதான பார்வைகள், ஆளுமைகள் மீதான பார்வைகள் மாறுவதற்கான சாத்தியங்களும் உண்டு. இந்த ஆண்டில் கவனிக்கப்பட வேண்டிய 20 அரசியல் ஆளுமைகள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை. நியூசிலாந்து பிரதமர், ஃபின்லாந்து பிரதமர் என பல்வேறு வெளிநாட்டு ஆளுமைகள் இடம் பெற்றிருந்தாலும், இந்த பட்டியலை அலங்கரிக்கின்றார்கள் சிலர் இந்தியர்கள். இது அவர்களைப் பற்றிய தொகுப்பு.

மஹூவா மொய்த்ரா

2009ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர் பின்னர் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜே.பி. மோர்கன் வங்கியில் பணியாற்றிய அவர் பின்பு இந்தியாவில் அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியின் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இவரின் முதல் நாடாளுமன்ற பேச்சு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தியாவில் ஃபாசிசத்தின் அறிகுறிகளை எப்படி சந்தித்து வருகிறது என்று பேசியவர் இவர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்த இவர், இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். எதிர்கட்சிகளில் மிகவும் பலம் வாய்ந்த தனித்த திறமை கொண்ட அரசியல் ஆளுமைகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

மேலும் படிக்க : வேகமாக வளர்ந்து வரும் உலக நகரங்கள் 10 : முதலிடம் பிடித்த மலப்புரம்!

துஷ்யந்த் சௌதலா

ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் 31-வயது இளைஞர். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கான வழிகாட்டுதலாக இருக்கிறார் என்றும் கூறலாம். தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று ஜனநாயக் ஜனதா பார்ட்டி பலரின் கவனத்தையும் ஈர்ப்பையும் பெற்றுள்ளது. துஷ்யந்த் சௌதலா குடும்பத்தின் நான்காம் தலைமுறை அரசியல்வாதி ஆவார். ஏற்கனவே மிகவும் குறைவான வயதில் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவர் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டவர் இவர். ஜாட் மக்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் நின்று வெற்றிகளை குவித்திருக்கிறது இவருடைய கட்சி. மாநில அளவிலான அரசியலில் மிகவும் முக்கியமான நபராக இவர் அடுத்த 10 ஆண்டுகளில் உருமாறுவது நிச்சயம்.

பிரசாந்த் கிஷோர்

42 வயதான அரசியல் வல்லுநர். 2012ம் ஆண்டில் குஜராத்தில் பாஜகவுடன் பணி புரிந்து அம்மாநிலத்தில் அக்கட்சியின் வெற்றியை உறுதி செய்தார். பின்னர் பாஜகவுடன் 2014ம் ஆண்டில் பொதுத்தேர்தலில் பணிபுரிந்து நாடு முழுவதும் மோடி அலையை உருவாக்கியதில் இவருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்சன் கமிட்டி (Indian Political Action Committee) என்ற பெயரில் இயங்கி வரும் இவரது அரசியல் ஆலோசனை நிறுவனம், 2019ம் ஆண்டில் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெறுவதிலும், மகாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சி வெற்றி பெறுவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த ஆண்டு டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் முறையே ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தன்னுடைய அரசியல் ஆலோசனையை வழங்குகிறது இந்த நிறுவனம். பிரசாந்த் கிஷோர் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் முக்கிய பொறுப்பினை வகிக்கிறார்.

கன்ஹையா குமார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் 32 வயது இளைஞர் கன்ஹையா குமார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிந்த இவரின் அரசியல் பார்வை இவரை வேறு களத்திற்கு இழுத்துச் சென்றது. 2016ம் ஆண்டு தேச துரோக வழக்குகள் இவர் மீது போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிகாரின் பெகுசரி தொகுதியில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட இவர் தோல்வியை தழுவினார் இருந்தாலும் 22.03% வாக்குகளை பெற்றார். இந்திய அரசியல் சூழலில் எடுக்கப்படும் முடிவுகள், அரசின் கொள்கைகள் குறித்து பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புபவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருங்காலத்தில் இந்திய அரசியலில் மிக முக்கியமான அங்கமாக இவர் திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Forbes india 20 people to watch in 2020 the faces which can define next decade

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement