மருத்துவமனை பிணவறைகளில் சடலங்கள் அழுகிப் போகாமல் இருப்பதற்காக ஃபார்மலின் என்ற ரசாயனம் பயன்படுத்துவது வழக்கம்.
மீன் சந்தைகளில் மீன்கள் அதிக நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருப்பதற்காக இந்த ஃபார்மலின் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது என்று பல்வேறு மாநிலங்களில் கண்டறியப்பட்டது.
ஆந்திரப் பிரதேசம், கேரளா, அசாம், தமிழ்நாடு, மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருக்கும் மீன் சந்தைகளில் ஃபார்மலின் பொருட்களின் பயன்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோவா நேற்றிலிருந்து சுமார் 15 நாட்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதனைப் பற்றிய செய்தியினை படிக்க.
நாகலாந்து மற்றும் கேரள மாநிலங்களில் தான் அதிக அளவிலான ஃபார்மலின் பொருட்களின் உபயோகம் இருப்பது கண்டறியப்பட்டது. ஃபார்மலின் என்ற வேதிப் பொருள், புற்று நோயை உண்டாக்கும் ஃபார்மால்டிஹைடு என்ற பொருளில் இருந்து பெறப்படுவதாகும்.
ஃபார்மலின் பொருட்கள் பயன்பாடு கண்டறியப்பட்ட பின்பு தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஒரு பார்வை
ஜூன் 22
நாகலாந்து மாநிலத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஃபார்மலின் பயன்படுத்திய மீன்களை சேமிக்க, விநியோகிக்க, மற்றும் விற்க தடை விதித்துள்ளது. முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வரை இந்த தடை உத்தரவு இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.
ஜூன் 26
கேரளா: சுமார் 21,600 கிலோ மீன்கள் ஃபார்மலின் கொண்டு பதப்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சாகர் ராணி என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு செய்த போது இதனை கண்டறிந்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு: உணவு பாதுகாப்புத் துறை தூத்துக்குடி அருகே ஒரு கண்டெய்னர் முழுவதும் ஃபார்மலினால் பதப்படுத்தப்பட்ட மீன்களை பறிமுதல் செய்தது.
ஜூன் 30:
நாகலாந்து மற்றும் கேரள மாநிலங்களில் மீன்கள் மீதான ஃபார்மலின் பயன்பாடு கண்டறியப்பட்ட பின்பு, மணிப்பூர் மாநிலம் ஐஸ்கட்டிகளால் பதப்படுத்தப்பட்ட மீன்களின் இறக்குமதிக்கும் உபயோகத்திற்கும் தடை விதித்தது.
ஜூலை 10:
ஆரோக்கியம் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம், அசாம் மாநிலத்தில் இறக்குமதி செய்யப்படும் மீன்களை பரிசோதனை செய்தது. அதில் ஃபார்மலின் உபயோகம் கண்டறியப்பட்ட பின்பு, 10 நாட்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதை தடை செய்திருக்கிறது அசாம் மாநிலம்.
ஜூலை 12:
கோவா மாநிலத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் பனாஜி மீன் சந்தை மற்றும் தெற்கு கோவாவில் இருக்கும் மார்கோவா மீன் சந்தைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அங்கிருக்கும் மீன்களில் ஃபார்மலின் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்தார்கள்.
ஜூலை 13:
ஒடிசாவில் இருக்கும் மீன் சந்தைகளில் ஆய்வு செய்யப்பட்டு ஃபார்மலின் பொருட்கள் மீன்களில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
ஜூலை 14:
கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர், ஃபார்மலின் தொடர்பாக தனிப்பட்ட முறையில் கவனம் எடுப்பதாக ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார்.
ஜூலை 18:
பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்ட பின்பு, கோவாவும், வெளி மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதை தடை செய்தது.