சிபிஐ தலைமை அதிகாரி அலோக் வர்மா : மத்திய புலனாய்வுத் துறை இயக்குநராக பதவி வகித்து வந்தவர் அலோக் வர்மா. இவர் மீது சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஊழல் புகார்களை முன்வைத்தார்.
ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்கே பதிவு செய்திருக்கிறது. இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் பரஸ்பரம் குற்றம் சுமத்திக் கொண்டிருந்ததால் இருவரையும் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது மத்திய அரசு.
தற்போது தலைமை இயக்குநர் பொறுப்புகளை சிபிஐ இணை இயக்குநர் நாகேஷ்வர ராவ் கவனித்து வருகிறார். இந்நிலையில் அலோக் வர்மா கட்டாய விடுப்பினை ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் படிக்க : அலோக் வர்மா விசாரணை செய்து வந்த வழக்குகள் ஒரு பார்வை
சிபிஐ தலைமை அதிகாரி அலோக் வர்மா வீட்டைச் சுற்றி மர்ம நபர்கள்
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் 4 நபர்கள் அலோக் வர்மாவின் வீட்டிற்கு அருகில் சுற்றிக் கொண்டிருந்தனர். அதனை கவனித்த அலோக் வர்மாவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.
அவர்களை டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கும் போது “நாங்கள் புலனாய்வுத் துறையை சார்ந்தவர்கள்” என்று கூறி அடையாள அட்டைகளை காட்டியுள்ளனர். புலனாய்வுத் துறையிடம் கேள்வி கேட்ட போது, புலனாய்வு துறை அதிகாரிகள் யாரையும் நாங்கள் அலோக் வர்மாவின் வீட்டிற்கு அனுப்பவில்லை என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.
யாரிந்த அலோக் வர்மா ?
1972ம் ஆண்டு, தன்னுடைய 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் அலோக் வர்மா. அவருடைய பேட்சில் அவர் தான் இளையவர். புலனாய்வுத் துறைக்கு வருவதற்கு முன்பு அவர் டெல்லி கமிசனராகவும், மிசோரம் மாநிலம் மற்றும் பாண்டிச்சேரி டிஜிபியாகவும், அந்தமான் நிக்கோபர் தீவுகளின் ஐஜியாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புலனாய்வுத் துறையில் எந்த ஒரு முன் அனுபவம் இன்றியும் புலனாய்வுத் துறையில் வேலை பார்க்க தொடங்கியவர் அலோக் வர்மா என்பதும் குறிப்பிடத்தக்கது.