Freelance Journalist Prashant Kanojia : உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்ததாக ஊடகவியலாளர் பிரசாந்த் கனோஜியா என்பவரை கைது செய்யதுள்ளது உத்தரப்பிரதேச காவல்துறை.
இவரின் கைதைத் தொடர்ந்து கனோஜியாவின் மனைவி பதிவிட்ட வழக்கினை இன்று இந்திரா பானர்ஜி மற்றும் அஜய் ரஸ்டோகி அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. விசாரணையின் முடிவில் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, ட்வீட்டில் வெளியிட்டுள்ள கருத்து எப்படி ஒருவரை கைது செய்ய வழிவகுக்கும் என்று கேள்வி எழுப்பினார் இந்திரா பானர்ஜி. உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் விக்ரம்ஜித் பானர்ஜீ அதற்கு “இதற்கு முன்பாக கடவுளுக்கு எதிராகவும், மதங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கனோஜியா ட்வீட் செய்துள்ளார். இடது மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் உள்ளது. அதனால் இந்திய தண்டனைச் சட்டம் 505ன் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று கூறினார். அவருடைய ட்வீட் சரி தவறு என்பது இருக்கட்டும். அதற்காக ஒருவரை எப்படி நீங்கள் கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார் இந்திரா பானர்ஜி.
மாநில அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞரின் வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் ஜூன் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கனோஜியா இருக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டது சரியாகாது. ட்வீட்கள் குறித்து கருத்துகள் தெரிவிக்காத அமர்வு, அவருடைய கருத்தினை பதிவு செய்ய அவருக்கு உரிமையில்லையா என்று கேள்வி எழுப்பியது.
இந்திய அரசியல் சாசனம் 19 மற்றும் 21ன் கீழ் அவருடைய அடிப்படை உரிமையை யாரும் பறிக்க இயலாது என்று கூறிய நீதிபதிகள் அவரை உடனடியாஅக பெயிலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து ஒரு பெண் பேசும் பதிவு ஒன்றை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவேற்றிய காரணத்தால் கனோஜியா சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தனியார் தொலைக்காட்சி சேனலில் அந்த வீடியோ ஒளிபரப்பட்டது. அதனை பதிவு செய்ததால் அந்நிறுவனத்தின் ஆசிரியரும் கைது செய்யப்பட்டார்.
லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் விகாஸ் குமார் ஐ.பி.சி. 505 மற்றும் 500ன் கீழ் கனோஜியா மீது வழக்கு பதிவு செய்தார். இதற்கு ஆசிரியர்கள் சம்மேளனம் தங்களின் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது. எதிர்கட்சிகளும் தங்களின் எதிர் குரலை இந்த கைதுகளுக்கு எதிராக பதிவு செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.