மாற்றுக் கருத்து என்னும் விசிலை அடக்க நினைத்தால் ஜனநாயகம் எனும் குக்கர் வெடித்துவிடும் - உச்ச நீதிமன்றம்

கைது செய்யப்பட்டவர்களை செப்.6 வரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு...

பீமா கோரேகான் வழக்கு : இரண்டு நாட்களுக்கு முன்பு (28/08/2018)  இந்தியாவில் இயங்கி வரும் மிகவும் முக்கியமான ஐந்து சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்தது மகாராஷ்ட்ரா காவல் துறை. பீமா கோரேகான் பகுதியில் ஜனவரி 2ம் தேதி ஏற்பட்ட கலவரத்திற்கு எல்கார் பரிஷத் என்ற நிகழ்வு தான் காரணம் என்று புனே காவல்துறையினர் சில முக்கிய செயற்பாட்டாளர்களை ஜூன் மாதம் கைது செய்தார்கள்.

அவர்களுக்கும், மோடியை கொலை செய்யத் திட்டமிட்ட மவோயிஸ்ட் இயக்கத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறிந்த காவல்துறையினர், 9 முக்கிய சமூக செயற்பாட்டார்களின் வீடுகள் மற்றும் வேலைப் பார்க்கும் இடங்களில் சென்று ஆய்வு செய்து, அதில் ஐவரை கடந்த செவ்வாய் அன்று கைது செய்தனர்.

அதைப்பற்றிய முழுமையான செய்தியைப் படிக்க 

பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் :

ஒன்பது முக்கியமான செயற்பாட்டாளர்களில் ஐவரை கைது செய்துள்ளது மகாராஷ்ட்ரா காவல் துறை.  பேராசிரியர் சுதா பரத்வாஜினை பரிதாபாத்திலும், கவிஞர் வரவர ராவினை ஹைதராபாத்திலும், வெர்னோன் கான்சல்வேஸ் மற்றும் அருண் பெரைராவினை மும்பையிலும், கௌதம் நவ்லகாவினை டெல்லியிலும் கைது செய்தனர் மகாராஷ்ட்ர காவல் துறையினர். யாரிந்த ஐந்து முக்கிய செயற்பட்டாளர்கள்? அவர்களின் பின்புலம் என்ன என்று படிக்க 

உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

இவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த செயற்பாட்டாளார்கள் மற்றும் தேசியக் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த கைது நடவடிக்கைகளை எதிர்த்து வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர் மற்றும் சில முக்கியமான செயற்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

அபிஷேக் மனு சிங்வியின் வாதம்

கைது செய்யப்பட்ட இடது சாரி ஆதரவாளர்கள் சார்பில் ஆஜரானார் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது இடது சாரி ஆதரவாளர்கள் சார்பாக வாதத்தை முன்வைத்த சிங்வி, பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த ஐவரும், அந்த நிகழ்விலேயே பங்கு கொள்ளவில்லை.

கைது செய்யப்பட்ட அனைவரும் அதிகம் படித்தவர்கள், சமூகத்தில் நலிந்த மக்களுக்காக குரல் கொடுக்கும் இவர்களின் கைது நடவடிக்கைகள் எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

செப்டம்பர் 6ம் தேதி வரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு:

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் எதன் அடிப்படையில் கைது செய்தீர்கள் என்று மகாராஷ்ட்ர அரசும் அம்மாநில டிஜிபியும் வருகின்ற செப்டம்பர் 5ற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சமூகத்தின் மாற்றத்திற்காக போராடுபவர்கள். மாற்றுக் கருத்துதான் இந்த சமூகத்தை காக்கும் கருவி. அதனை அடக்க முற்படும் பட்சத்தில் அது தானாக வெடித்துவிடும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

பீமா கோரேகான் வன்முறைகள் நடந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து ஏன் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது மாநில அரசு என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெர்னோன், அருண், வரவர ராவ் ஆகியோரை புனேயில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. கைது செய்யப்பட்ட ஐவரையும் அடுத்தகட்ட விசாரணை வரும் வரை வீட்டுக் காவலில் வைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close