பீமா கோரேகான் வன்முறை வழக்கு : புனே காவல்துறை கைது செய்த அந்த 5 நபர்கள் யார்?

பீமா கோரேகான் வன்முறை வழக்கிற்கும் இவர்களுக்குமான தொடர்பு என்ன ?

பீமா கோரேகான் வன்முறை வழக்கு : பீமா கோரேகான் பகுதியில் இந்த வருடம் ஜனவரி 1 அன்று நடைபெற்ற பேரணியில் கலவரம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். மகாராஷ்ட்ரா மாநிலம், பீமா கோரேகான் பகுதியில் மஹர் என்ற தலித் இனத்தவர்கள், வரலாற்று நிகழ்வு ஒன்றின் 200வது ஆண்டு விழாவிற்காக ஒன்று திரண்டனர். பீமா கோராகானின் வரலாற்றுப் பின்னணி என்ன என்று படிக்க…  ஜனவரி 1ம் தேதி எல்கர் பரிஷத் அமைப்பின் கீழ் ஒரு கூட்டம் நிகழ்த்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசப்பட்ட உரையின் மூலமாகவே அடுத்த நாள் கலவரம் நடந்தது என்று காவல் தரப்பு கூறுகிறது.

பீமா கோரேகான் வன்முறை வழக்கு கைது செய்யப்பட்டவர்கள் யார்?

அந்த கூட்டத்தில் கலவரத்தினை தூண்டும் வகையில் பேசிய ஐவரை ஜூன் மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் முறையே வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், தலித் உரிமைகளுக்கான போராளி சுதிர் தாவாலே, பிரதம மந்திரியின் ஊரக வளர்ச்சித் திட்டத்தில் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் ராவுட், நாக்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ஷோமா சென், மற்றும் டெல்லியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ரோனா வில்சன் இருப்பிடத்தில் இருந்து மோடியை கொலை செய்யத் திட்டமிட்ட மாவோஸ்ட்டுகளின் துண்டுப் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் “ராஜீவ் காந்தியை கொலை செய்தது போலவே ஒரு திட்டத்தினைத் தீட்டி மோடியை கொலை செய்யும் நோக்கிலான திட்டங்கள் குறித்தும், சில சமூக செயற்பாட்டாளர்களின் பெயர்களும்” இடம் பெற்றிருந்தன.

துண்டு பிரசுரங்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள்

இந்த துண்டுப் பிரசாரங்களில் இடம் பெற்றிருந்த பெயர்களின் அடிப்படையில், நேற்று மட்டும் (28/08/2018) அன்று ராஞ்சி, மும்பை, டெல்லி, புனே, கோவா, மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகள் மற்றும் நிர்வாகங்கள் சோதனை செய்யப்பட்டு அதில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

சுதா பரத்வாஜ்

ஹரியானாவைச் சேர்ந்த சுதா ப்ரத்வாஜ் ஒரு வழக்கறிஞர் ஆவர். அவர் டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு வயது 57 ஆகும்.

மேலும், தொழிலாளர் நலன் குறித்து செயல்பட்டு வரும் தொழிற்சங்கவாதி ஆவார். பழங்குடியினர் உரிமைகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருபவர்.

பழங்குடி மக்களிற்காக அடிக்கடி கோர்ட்டில் ஆஜராகி வாதிடுபவர் சுதா பரத்வாஜ்.  சத்தீஸ்கரிலுள்ள ராய்கர் பகுதியில் வசித்து வருகிறார்.

பீமா கோரேகான் வன்முறை வழக்கு

பீமா கோரேகான் வன்முறை வழக்கு : சுதா பரத்வாஜ்

கௌதம் நவ்லகா

சமூக சிந்தனையாளர் மற்றும் செயற்பாட்டாளருமான கௌதம் மனித உரிமைகள் மற்றும் குடியுரிமைகள் தொடர்பான செயல்பாட்டாளார் ஆவார். இவர் பிறந்த ஊர் குவாலியர் ஆகும்.

காஷ்மீர் மாநில மக்களின் நலன் பற்றி தொடர்ந்து எழுதியும் ஆய்வுகள் செய்தும் வந்தவர் கௌதம். காஷ்மீர் பகுதியில் வாழும் குடிமக்கள் ராணுவத்தினாரால் அடையும் பிரச்சனைகளை மையப்படுத்தி பல கட்டுரைகளை எழுதி வருகிறவர். பழங்குடி மக்கள் மற்றும் தலித் இன மக்கள் தொடர்பான பிரச்சனைகள் பற்றி கடந்த 40 வருடங்களாக குரல் கொடுத்து வருகிறார் கௌதம் நவ்லகா. தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவருடைய நெருங்கிய வட்டம் இதைப்பற்றி கூறும் போது “இது போன்ற வழக்கு மற்றும் விசாரணையை கௌதம் முதல்முறையாக சந்திக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.

வரவர ராவ்

தெலுங்கானாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர் பெண்டியாலா வரவர ராவ். இடது சாரி கருத்துக்களைக் கொண்ட எழுத்தாளர் விரசாம் என்ற அசோசியனை நடத்தி வருகிறார். அதில் புரட்சிகரமான கவிதைகள் மற்றும் இலக்கியங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது இந்த அமைப்பு.

ஆந்திரப் பிரதேசத்தில் மாவோயிஸ்ட்டுகளின் ஊடுருவல்கள் அதிகம் இருந்த காலத்தில் அரசிற்கும் அரசாங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதில் முக்கிய பங்கு வகித்தார் வரவர ராவ். இவருடைய 15 கவிதைத் தொகுப்புகள் 20 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. செகந்தரபாத் புரட்சியின் போது ஆந்திர அரசாங்கத்தால், 1974ல் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பீமா கோரேகான் வன்முறை வழக்கு, வரவர ராவ்

பீமா கோரேகான் வன்முறை வழக்கு – வரவர ராவ்

அருண் பெரேரா

மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார் அருண். பீமா கோரேகான் வழக்கில் கைது சுதிர் தவாலே கைது செய்யப்பட்டதிற்கு பலத்த எதிர்ப்பினை பதிவு செய்தவர் அருண் பெரேரா.
சட்டவிரோத செயல்கள் தடுப்புப் பிரிவின் கீழ் இவர் 4 ஆண்டுகள் சிறைவாசம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலக்கட்டத்தில் சிறையில் இருந்து இவர் புத்தகம் ஒன்றினை எழுதினார். கலர்ஸ் ஆஃப் த கேஜ்: ஏ ப்ரிசன் மேமோயர் என்ற பெயரில் வெளியான புத்தகம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெர்னோன் கோன்சல்வேஸ்

இவர் மும்பையைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் எழுத்தாளர், இவரும் ஏற்கனவே சட்டவிரோத செயல்கள் தடுப்புப் பிரிவின் கீழ் 2007ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் சிறை வாசம் அடைந்தவர்.

மங்களூரில் சேர்ந்த கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். தெற்கு மும்பையில் இவருடைய இளமைக் காலம் கழிந்தது. விதர்பா பகுதியில் இருக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருபவர் இந்த வெர்னோன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மனைவியும் மனித உரிமை செயற்பாட்டியலாளர் ஆவார்.

இந்த ஐந்து நபர்களையும் மோடியை கொலை செய்யத் திட்டமிட்டதிற்காகவும், பீமா கோரேகான் பகுதியில் வன்முறையை உருவாக்கிய காரணத்திற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close