கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆன நிலையில் முதல் பட்ஜெட்டினை தாக்கல் செய்கிறார் முதல்வர் குமாரசாமி.
பெங்களூரு விதான சௌதாவில் நடைபெறும் இந்த பட்ஜெட் தொடரில், விவசாயக் கடன்கள் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் முழுவதும் இருக்கும் 75 லட்சம் விவசாயிகளில் 25 லட்சம் விவசாயிகள், பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்காமல், தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார்கள். மேலும் அதிக வட்டிக்கு வெளிநபர்களிடம் இருந்தும் அவர்கள் கடன் வாங்குகின்றார்கள்.
விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் விதமாக, மாநில, கூட்டுறவு, மற்றும் உள்ளூர் வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக முடிவெடுத்திருக்கிறது மாநில அரசு.
இந்த பட்ஜெட் தொடரினை சுட்டிக்காட்டி தன்னுடைய ட்விட்டரில் ட்விட் செய்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “நம்முடைய கூட்டணி ஆட்சியில் நாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம். மேலும் விவசாயிகளின் நம்பிக்கைக்கு ஒளியூட்டும் வகையில் விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
விவசாயக் கடன் தள்ளுபடி மட்டுமன்றி, ஒரு கோடி வேலை வாய்ப்பினை உருவாக்குதல், நீர்பாசன வசதிகளை ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் மேம்படுத்துதல், வீடற்றவர்களுக்கு 20 லட்சம் புதிய வீடுகளைக் கட்டித் தருதல், மற்றும் ஆரோக்ய கர்நாடகா என்ற மருத்துவ காப்பீட்டினை அமல்படுத்துதல் போன்ற திட்டங்கள் பற்றியும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
நிதித்துறையினையும் தன்னிடம் வைத்திருக்கும் குமாரசாமி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ள சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டார். அதன் விளைவாகவே இந்த பட்ஜெட் தொடர் கொஞ்சம் தாமதமாக நடைபெறுகிறது.
கூட்டணி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டியின் தலைவராக இருக்கும் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராம்மைய்யா ஏற்கனவே “ஏன் புதிய பட்ஜெட்டினை தாக்கல் செய்ய வேண்டும். மாறாக நிலுவையில் இருக்கும் திட்டங்களை முடிப்பது தான் நல்லது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடியூரப்பா “குமாரசாமி ஆட்சி மக்களுக்கு கூறியது போல், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாமல் இருக்குமானால், பாஜகவின் 104 எம்.எல்.ஏக்களும் மக்களிடம் சென்று, இந்த கூட்டணி ஆட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற விரும்பவில்லை என்று கூறுவோம்” என்று அறிவித்தார்.