Hadiya’s father Ashokan : கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் இருக்கும் வைக்கம் என்ற பகுதியில் பிறந்தவர் அகிலா. 2015ம் ஆண்டு இளங்கலை பட்டம் படிப்பதற்காக தமிழகம் வந்த இவர் இஸ்லாத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார்.
ஹதியா என்று பெயர் மாற்றம் செய்து கொண்ட அவர் பின்பு மேட்ரிமோனியல் தளத்தில் செபின் ஜஹான் என்பவரை திருமணம் முடிக்க திட்டமிட்டிருந்தார். ஓமனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த செபின் இந்தியா திரும்பியதும் ஹதியாவை மணம் முடித்தார்.
ஆனால் ஹதியாவின் தந்தை அசோகன், என் பெண்ணை லவ் ஜிஹாத் என்ற பெயரில் இஸ்லாத்திற்கு மாற்றி, சிரியாவில் தீவிரவாதத்தில் தள்ளப் போகின்றார்கள் என்று மனு ஒன்றினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பிரச்சனை தேசம் முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையினை உண்டாக்கியது.
Hadiya’s father Ashokan joins BJP
ஹதியாவின் திருமணம் செல்லாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், மார்ச் 8,2018 அன்று பெண்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய முழு உரிமையும் உள்ளது என்று கூறி, கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பினை ரத்து செய்தது.
"சிறுபான்மையினரின் ஓட்டுக்களை மட்டுமே கருத்தில் கொண்டு கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், சபரிமலை விவகாரத்தில் முற்றிலும் நேர்மாறாக கேரள அரசு நடந்து கொண்டதாலும், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைகின்றேன்” என்று கூறி பாஜகவில் இணைந்தார் ஹதியாவின் தந்தை. கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கோபால கிருஷ்ணன் முன்னிலையில் அக்கட்சியில் அசோகன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஆர்.எஸ்.எஸ் தொண்டர் தற்கொலை... நான்காவது முறையாக கேரளத்தில் பாஜக பந்த்