scorecardresearch

ஹரியானா தேர்தல் 2019 : பாஜகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் ஜாட் தொகுதிகள்…

ஒரு கட்சியாக பாஜகவும் ஜாட் வாக்குகளை அதிகமாக பெற விரும்புகிறது – ராம்பால் மஜ்ரா

Haryana Assembly Elections 2019
Haryana Assembly Elections 2019

 Varinder Bhatia, Sukhbir Siwach

Haryana Assembly Elections 2019 : 21ம் தேதி ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. ஜாட் மக்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் அவர்களின் வாக்குகளை எவ்வாறு பெறுவது என்று மிகவும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக. பாஜகவின் வியூகம் வெற்றி பெற வேண்டுமானால் அவர்கள் குறைந்த்பட்சமாக 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிக் கொடியை நடவேண்டும். தேர்தலையொட்டி பாஜக மேற்கொண்டு இருக்கும் நடவடிக்கைகள் என்னென்ன? ஜாட் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் பாஜக எப்படி வெற்றியை நிலை நிறுத்தப் போகிறது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இருக்கின்ற வாய்ப்புகளை நழுவ விடும் நிலையில் பாஜக இல்லை என்று தான் கூற வேண்டும். அதனால் தான் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இடைவெளி இல்லாமல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது பாஜக. திங்கள் கிழமையன்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஐந்து இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஜஜ்ஜரின் பெரி, ரோஹ்தக்கின் கலானௌர், பானிப்பட்டின் சமல்க்கா, ஹிஸ்ஸாரின் பர்வாலா மற்றும் ஹான்சி என 5 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இம்மாநிலத்தில் தேர்தலுக்கான பிரச்சாரம் செப்டம்பர் மாதம் 8ம் தேதி நரேந்திரமோடி துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷாவின் பிரச்சார கூட்டங்கள்

பிரதமர், முதல்வர் தங்களின் பிரச்சாரங்களை முடித்துவிட்டனர். அடுத்ததாக அந்த பக்கம் அடி எடுத்து வைக்க இருப்பது உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவர் 7 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கிறார். மிக முக்கியமாக ஜாட் இன மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில். முதலாவதாக அவர் மெஹெம், காலானௌர், மற்றும் முன்னாள் ஹரியானா மிஉதல்வர் புபிந்தர் ஹூடாவின் தொகுதியான கர்ஹி-கிலோய் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 9ம் தேதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். அக்டோபர் 14ம் தேதி தொஹானா, ரதியா, நர்வானா, ஜஜ்ஜார், பர்வாலா, உல்கானா மற்றும் ஹன்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

நட்சத்திர பேச்சாளர்களை வரவேற்கும் ஹரியானா தொகுதிகள்

அக்டோபர் 11ம் தேதி சோனிப்பட் மற்ரும் ஜுல்லான் பகுதிகளில் உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

பாஜக பெண்கள் அமைப்பின் தலைவர் விஜய் ரஹத்கர் அக்டோபர் 12ம் தேதி ரோஹ்தக்கின் பாஜக வேட்பாளர் பபிதா போகத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தப்வாலி, ரனியா மற்றும் கலன்வாலி தொகுதியில் அக்டோபர் 13ம் தேதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

ஜாட் மக்களை ஈர்க்க பாஜக எடுக்கும் முயற்சிகள்

கைத்தலின் கலாயத் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏவாக பணியாற்றி சமீபமாக பாஜகவில் இணைந்த ராம்பால் மஜ்ரா கூறுகையில், ஜாட் வாக்காளர்களின் வாக்குகள் தற்போது பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறுகிறார். ஒரு கட்சியாக பாஜகவும் ஜாட் வாக்குகளை அதிகமாக பெற விரும்புகிறது என்கிறார். தேவிலாலின் இந்திய தேசிய லோக் தளத்தின் (INLD) விசுவாசியாக, கட்சியின் உறுப்பினராக 40 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய இவர் பாஜகவில் தற்போது இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர பேச்சாளர்களான சயீத் ஷானவாஸ் ஹூசைன் மற்றும் கர்னல் எம்.பி. சஞ்சய் பாட்டியா போன்றவர்கள் தற்போது ரோஹ்தக்கில் இருந்து பிரச்சாரப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தற்போதைய எம்.பிக்கள் அனைவரும் ஜாட் மக்களின் வாக்குகளை கவரும் வகையில் அதிகமாக ரோஹ்தக் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹரியானாவில் 27% வாக்கு வங்கி ஜாட் மக்களிடம் உள்ளது. 1966ம் ஆண்டில் இருந்து ஹரியானாவை 10 நபர்கள் ஆட்சி செய்துள்ளனர். அதில் 5 நபர்கள் (பன்சி லால், தேவி லால், ஹூக்கும் சிங், ஓம் பிரகாஷ் சௌதலா, புபிந்தர் சிங் ஹூடா) ஜாட் இனத்தை சேர்ந்தவர்கள்.

தற்போதைய முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ஜாட் இனத்தை சேராதவர் தான். இருப்பினும் நிதி மற்றும் வேளான் அமைச்சர்களாக முறையே அபிமன்யூ மற்றும் ஓம் பிரகாஷ் தன்கரை நியமனம் செய்துள்ளார். அவர்கள் இருவரும் ஜாட் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பாஜகவிற்கு தோல்வியையே பரிசளித்த 23 தொகுதிகள்

23 தொகுதிகளில் ரோஹ்தக், ஹிசார், சிர்சா, பிவானி, மஹெந்தெர்கர், ஜஜ்ஜார், சோனிப்பட் மற்றும் பானிப்பட் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது பாஜக. இதற்கு முன்பு நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் பாஜக அங்கு வெற்றி கண்டதில்லை.

கைத்தல், கலாயத், கார்கௌடா, கோஹனா, பரோடா, ஜுலானா, கரி சம்ப்ளா கிலோய், தப்வளி, ரணியா, கலன்வாளி, எல்லனாபாத், நல்வா, தோசம், சஜ்ஜர், பெரி ஆகிய தொகுதிகளிலும் 2014 தேர்தலில் தோல்வியை சந்தித்தது பாஜக. முதல் இரண்டு இடங்களைக் கூட அவர்களால் பெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை எப்படியும் ஜாட் மக்கள் அதிகம் வாழும் தொகுதியில் வெற்றியை நிலைநாட்டிவிட வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கியுள்ளது பாஜக.

மேலும் படிக்க :இரண்டு மாநிலங்களில் தேர்தல்; பிரசாரம் செய்யாமல் தாய்லாந்துக்கு சென்ற ராகுல் காந்தி

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Haryana assembly elections 2019 bjp goes all out to swing jat votes in its favour

Best of Express