பிப்ரவரியில் பிவானியில் இரண்டு பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் நிலவிய போதிலும், ஹரியானாவின் நுஹ்வில் திங்கள்கிழமை பிரிஜ்மண்டல் ஜலாபிஷேக் யாத்திரைக்கு அனுமதி வழங்கிய ஹரியானா காவல்துறையின் முடிவின் பின்னணியில், அணிவகுப்பில் ஆயுதங்கள் இடம்பெறாது என்ற உத்தரவாதம் இருந்தது.
இருப்பினும், சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் தொடர்ச்சியாக செய்திகள் மற்றும் வீடியோக்கள் பரவத் தொடங்கியவுடன், கோபம் வெடிக்கத் தொடங்கியது.
இதையும் படியுங்கள்: ஹரியானாவில் வகுப்புவாத பதற்றம்; குர்கான் மசூதி தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; நுஹ் நகரில் ஊரடங்கு உத்தரவு
அந்த வீடியோக்களில் பசு காவலர் என்று தன்னை அறிவித்துக் கொண்ட மோனு மானேசர் என்று அழைக்கப்படும் மோஹித் யாதவ், யாத்திரையில் பங்கேற்பதாகக் கூறினார். பிவானியில் ஜுனைத் மற்றும் நசீர் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மோனு மானேசர், ஜூலை 29 அன்று தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வெளியிடப்பட்ட வீடியோவில், "நான் நேரில் யாத்திரையில் கலந்துக் கொள்வேன், எனது முழு குழுவும் கலந்துகொள்ளும்" என்று கூறினார்.
நுஹ் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் ஜமியத் உலமா-இ-ஹிந்த் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதிவாசிகளுக்கு இடையே ஜூலை 27 அன்று ஒரு கூட்டம் நடந்தது. துணை ஆணையர் பிரசாந்த் பன்வார், “நாங்கள் அனுமதி வழங்கியபோது, அவர்களிடம் யாத்திரையின் போது எந்த ஆயுதங்களையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தோம்,” என்று தெரிவித்தார்.
ஜமியத் உலமா-இ-ஹிந்த் உறுப்பினர் மௌலானா யஹியா கரீமி கூறுகையில், "யாத்திரை தற்போது மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது... ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கு எதிராகத் தான் நாங்கள் நிற்கிறோம் என்று கூறி வருகிறோம்” என்றார்.
மோனு மானேசரின் வீடியோ வெளியிடப்பட்டதும், அப்பகுதியில் சூழ்நிலை மாறியது. “ஜுனைத் மற்றும் நசீரைக் கொன்றதாக மோனு மானேசர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எதுவும் இல்லாதது போல், அவர் மேவாத்துக்கு வருவதாகக் கூறுகிறார்,” என்று மற்றொரு ஜமியத் உறுப்பினரான முஃப்தி சலீம் சக்ராஸ் கூறினார், இது குடியிருப்பாளர்களை கோபப்படுத்தியது.
பஜ்ரங் தள உறுப்பினர்கள், மோனு மானேசரை ஆதரித்தனர். “மோனு சாதாரணமாக ஒரு வீடியோவை வெளியிட்டார், அது ஏன் அவர்களை கோபப்படுத்துகிறது? இந்த யாத்திரை வி.ஹெச்.பி அல்லது பஜ்ரங் தளம் பற்றியது அல்ல, இது இந்து சமூகத்தைப் பற்றியது" என்று குர்கான் பஜ்ரங் தள உறுப்பினர் அமித் இந்து கூறினார்.
இருப்பினும் மோனு மானேசர் யாத்திரையில் கலந்துக் கொள்ளவில்லை. வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் தலைவர்கள் யாத்திரையைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதாக மோனு மானேசர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இதனிடையே வன்முறை தொடர்பாக 17 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், நுஹ் போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். “உள்ளூர் மக்களிடமும் துப்பாக்கிகள், தடிகள் மற்றும் வாள்கள் இருந்தன. நாங்கள் பிராந்தியத்தில் துப்பாக்கி உரிமங்களை மதிப்பாய்வு செய்து வருகிறோம், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று பிவானி எஸ்.பி நரேந்தர் பிஜர்னியா கூறினார்.
நிர்வாகத்தில் உள்ள ஒரு அதிகாரி, வீடியோ மற்றும் அதைத் தொடர்ந்து வந்த இரு சமூகங்களின் செய்திகள் குறித்து யாரும் எச்சரிக்கையை வெளியிடவில்லை என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.