புதுச்சேரியில், மேலும் ஒரு சிறுமி எச்.எம்.பி.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளிர் காலங்களில் பரவும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் ரெஸ்பிரட்டரி சின்கிடல் வைரஸ் பிரிவை சார்ந்தது எச்.எம்.பி.வி (ஹூமன் மெட்டாநியூமோ வைரஸ்). இது சீனாவில் மட்டும் பரவுவது இல்லை. ஆசிய கண்டத்தில் இதன் பரவல் காணப்படுகிறது. எச்.எம்.பி.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் உடல்நலக்குறைவு, சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இருக்கும்
வயதானவர்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் போன்றோர் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனினும், இந்த தொற்று அபாயகரமானதாக மாறுவதற்கு வாய்ப்பு மிக மிக அரிது என வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இந்தியாவில் 13 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர் காய்ச்சல், சளி, இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு எச்.எம்.பி.வி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, 5 வயது சிறுமி ஒருவர் எச்.எம்.பி.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அச்சிறுமி சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.