நீட் தேர்வு குறித்து ஜூலை 6ம் தேதி பிரகாஷ் ஜவடேகரின் அறிக்கை : மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த மாதம் நீட் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அதன்படி "அடுத்த வருடம் முதல் (2019) நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் மேலும் அனைத்து தேர்வு முறையும் கணினி மயமாக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
“ கிராமப்புற மாணவர்கள் சிறப்பாக போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அவர்களுக்கு கணினி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும் சிபிஎஸ்இக்கு பதிலாக தேர்வுகள் அனைத்தையும் தேசிய தேர்வு முகமை நடத்தும்” என்றும் ஜூலை மாதம் 6ம் தேதி அறிவித்தார் பிரகாஷ் ஜவடேகர்.
ஜூலை ஆறாம் தேதி வெளியிட்ட அறிவிப்பினைப் பற்றி படிக்க
நீட் தேர்வு புதிய அறிவிப்பிற்கு அதிருப்தி தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சகம்
ஆனால் சுகாதாரத் துறை அமைச்சகம் இந்த முடிவில் தங்களின் நிலைப்பாட்டினை அறிவித்திருக்கிறது. ஊரக மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதனால் அதிக அளவில் அவதியுறுவார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் குறிப்பிட்டிருக்கிறது.
இது மட்டும் அல்லாமல் மேலும் எட்டு முக்கியமான காரணங்களை அறிவித்து அதனை கருத்தில் கொண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது சுகாதாரத் துறை அமைச்சகம்.
பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் பிப்ரவரி மாதம் தான் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர் கொள்வார்கள்.
அதனால் அவர்களால் நீட்டில் முழுக்கவனத்துடன் எழுத இயலாது என்றும் குறிப்பிட்டிருக்கிறது சுகாதாரத் துறை அமைச்சகம்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நீட் தேர்வு 2019ம் சிபிஎஸ்இ தான் இத்தேர்வுகளை நடத்த இருக்கிறது. 2019ல் ஒரே ஒரு முறை மட்டும் நடைபெற இருக்கும் அத்தேர்வு தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.