Abhishek Saha, Sushant Singh
IAF An-32 Aircraft Spotted : ஜூன் 3ம் தேதி மதியம் 12:30 மணிக்கு அசாம் மாநிலத்தின் ஹோர்ஹ்த் என்ற பகுதியில் இருந்து ஷி யோமி மாவட்டத்திற்கு 13 பேர் கொண்ட விமானப்படை குழு ஒன்று சென்றது. 1 மணி அளவில் அவர்களிடம் இறுதியாக விமானநிலையத்தில் இருந்து தொடர்பு கொள்ளப்பட்டது. அதற்கு பின்பு அந்த விமானம் ஷி யோமியில் தரையிறங்கவில்லை. 8 நாட்களாக தொடர் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வந்தது பாதுகாப்பு படைக்குழு.
சீன எல்லைக்கு அருகே விழுந்து நொருங்கிய விமானம்
12000 அடிக்கு மேலே அமைந்திருக்கும் லிபோ என்ற பகுதிக்கு 16 கி.மீ வடக்கே, டட்டோவிற்கு வடகிழக்கு பகுதியிலும் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. எம்.ஐ – 17 ரக ஹெலிகாப்டரில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று மலையேற்ற வீரர்களின் உதவியுடன் விமான உதிரி பாகங்கள் காணப்பட்ட இடத்திற்கு விரைகின்றது ஒரு குழு.

தேர்தலின் போது இந்த பகுதியில் இருந்த கிராமம் ஒன்றிற்கு செல்ல தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டது. இமாலய மலைத்தொடரில் தொலைத் தொடர்புகளுக்கு அப்பால் அமைந்துள்ளது டட்டோ. ஷியோமி மாவட்டம் கடந்த வருடம் டிசம்பரில் தான் உருவாக்கப்பட்டது. இதன் வடக்கு பகுதியில் சீன எல்லை அமைந்துள்ளது.
மேலும் படிக்க : 13 பயணிகளுடன் மாயமான AN-32 ரக இந்திய விமானப்படை விமானம்!
IAF An-32 Aircraft Spotted
சியாங் பகுதியின் துணை காவல் ஆணையர் ராஜீவ் தகுக் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் “விமானம் மலைகளுக்கு தென்கிழக்கே விழுந்துள்ளது. ஒன்று அது சியாங்கில் இருக்க வேண்டும். இல்லையே அது ஷி யோமியில் இருக்க வேண்டும். மெக்மோகன் எல்லைக்கோட்டில் இருந்து 30 – 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அந்த பகுதி. நடந்து சென்றால் நாட்கணக்காகும். அங்கு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலும் இல்லை. தொலைத் தொடர்பும் இல்லை” என்று கூறினார்.
விமானம் காணாமல் போன நாளில் இருந்து இந்திய ராணுவம், இந்திய – திபெத் எல்லைப்படை காவலர்கள், இந்திய கப்பற்படை, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், மாநில காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றது.
C-130J ரக விமானம், Su-30MKI ரக விமானம், இந்திய கப்பற்படையில் பயன்படுத்தப்படும் P8i ரக விமானம், அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர்கள், MI-17 மற்றும் சீட்டா ரக விமானங்கள் இந்த தேடுதல் பணிக்காக பயன்படுத்தப்பட்டது. வேட்டையாடுபவர்கள், உள்ளூர்வாசிகள், மலையேற்ற பயிற்சிக் குழுவினர் உள்ளிட்டோர் இந்த தேடுதல் பணிக்கு இந்திய ராணுவத்தினருக்கு உதவிகள் புரிந்து வருகின்றனர்.