கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரி டி ரூபாவுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்துரிக்கும் இடையேயான மோதல் திங்கள்கிழமை தீவிரமடைந்தது, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ரோகிணி சிந்துரி நிர்வாண படங்களைப் பகிர்ந்து கொண்டதாக ரூபா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக ரோகிணி சிந்துரி கூறினார்.
ரோகிணி சிந்துரி வெளியிட்ட ஊடக அறிக்கைக்கு பதிலளித்த ரூபா பேஸ்புக் பதிவில், “நீக்கப்பட்ட நிர்வாண படங்கள்” பற்றி பேசுவாரா என்றும், “(புகைப்படங்கள்) அனுப்பப்பட்ட தொலைப்பேசி எண் அவருடையது இல்லையா” என்றும் கேட்டார்.
இதையும் படியுங்கள்: கர்நாடக பெண் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மோதல்: மாறி மாறி பரபரப்பு குற்றச்சாட்டு
ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நிர்வாண புகைப்படங்களை அனுப்ப முடியுமா? இந்தப் படங்கள் அனுப்பப்பட்டதற்கான காரணம் என்ன? ஒரு சமரசத்திற்காகவா? அல்லது முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட வழக்கில் தன் மீதான நடவடிக்கையை தடுப்பதற்காகவா? அவர் பதில் சொல்ல வேண்டும்” என்று ரூபா பேஸ்புக் பதிவில் எழுதினார்.
இரு அதிகாரிகள் மீதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியதை அடுத்து ரூபாவின் சமூக ஊடக பதிவு வந்தது.
முன்னதாக, ரோகிணி சிந்துரி செய்தியாளர்களிடம், ரூபா தன் மீது தாக்குதல் நடத்தியது “சரியில்லை” என்றார்.
“இது மன்றம் அல்ல. இது மேடையல்ல. இப்படி பேசுவது சரியல்ல. (அவர்) அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதுபோன்ற தனிப்பட்ட அவதூறுகளில் ஈடுபடுவது சரியல்ல,” என்று ரோகிணி சிந்துரி கூறினார்.
ரூபாவுக்கு எதிராக அனைத்து சட்டப்பூர்வ தீர்வுகளையும் தொடரப் போவதாகவும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சந்துரி கூறினார். “நாங்கள் அதை விடமாட்டோம். அவர் (ரூபா) வேலை சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி பேசலாம். ஆனால், அவர் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசினால் நான் அதை மிகக் கடுமையாக எடுத்துக்கொள்வேன். நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்று கூறினார்.
ரோகிணி சிந்துரி மீது சனிக்கிழமை ரூபா 19 குற்றச்சாட்டுகளை முன்வைத்ததையடுத்து, இரண்டு பெண் அதிகாரிகளும் கசப்பான சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ரூபா ஏழு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார், ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்துரி தனது சக ஆண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ரோகிணி சிந்துரி, ரூபா “தவறான, தனிப்பட்ட அவதூறு பிரச்சாரத்தை” நடத்துவதாகவும், அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாகவும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil