India may lose 3-10% GDP annually : காலநிலை மாற்றத்தால் 2100ம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 3 முதல் 10% ஆக குறையும் என்றும், வறுமை விகிதம் 2040ம் ஆண்டுவாக்கில் 3.5% அதிகரிக்க கூடும் என்றும் லண்டனை சேர்ந்த திங்-டேங் நிறுவனமான ஓவர்சீஸ் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் அறிவித்துள்ளது.
The Costs of Climate Change in India என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த ஆய்வு அறிக்கையில், நாட்டில் காலநிலை தொடர்பான அபாயங்களால் ஏற்படும் பொருளாதார நஷ்டங்களை கணக்கில் கொண்டு, ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமை அதிகரிக்கும் வாய்ப்பை குறித்து கூறப்பட்டுள்ளது.
இந்தியா ஏற்கனவே 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வால் ஏற்பட்டுள்ள விளைவுகளை சந்தித்து வருகிறது. அளவுக்கு அதிகமான கடுமையான வெப்ப அலை, கனமழை, மோசமான வெள்ளம், பேரழிவை ஏற்படுத்தும் புயல்கள் மற்றும் கடல்மட்டம் உயர்வு போன்றவை மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் நாட்டின் சொத்துகளையும் சீர்குலைத்து வருகிறது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் வருமானம் மற்றும் வாழ்க்கை தரம் உயர்வதை நாம் கண்டிருக்கின்றோம். உலக நடவடிக்கைகள் இல்லாமல், காலநிலை மாற்றத்தால் இந்த முன்னேற்றத்தின் வளர்ச்சி மாறக்கூடும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே காலநிலை மாற்றத்தின் விளைவாக, வறுமை குறைப்பு நடவடிக்கைகளின் வேகம் குறைந்துள்ளது. வேகமாக வெப்பமடைந்துள்ள மாவட்டங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, குறைவாக வெப்பமடைந்துள்ள மாவட்டங்களின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் 56% குறைவான வளர்ச்சியையே கண்டுள்ளது. கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைக்க விரைவான உலகளாவிய நடவடிக்கை இல்லாமல், உயரும் சராசரி வெப்பநிலை உண்மையில் சமீபத்திய தசாப்தங்களின் வளர்ச்சி ஆதாயங்களை மாற்றியமைக்கக்கூடும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸிற்குள் கட்டுப்படுத்தினாலும் ஆண்டு தோறும் 2.6% ஜி.டி.பியை இந்தியா இழக்கும். ஒரு வேளை 3 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை உயரும் போது ஜி.டி.பி. 13.4% ஆக குறையும். இந்த முடிவுகள் வெப்பநிலை மற்றும் மழைப் பொழிவு மாற்றங்களின் கணிப்புகள் மற்றும் வெவ்வேறு துறைகளில் தொழிலாளர் உற்பத்தித்திறன் மீதான தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. காலநிலை மாற்றம் கூடுதல் சேனல்கள் மூலம் தொழிலாளர் உற்பத்தித்திறனையும் பாதிக்கலாம், உதாரணமாக மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஃபைலேரியாஸிஸ், ஜப்பானிய என்செபாலிடிஸ் மற்றும் உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ் போன்ற நோய்கள் காரணமாகவும் உற்பத்தி திறன் பாதிப்படையக் கூடும். கங்கை-பிரம்மபுத்திரா-மேக்னா மற்றும் மகாநதி டெல்டா பகுதிகள், காலநிலை நடவடிக்கைகளால் தூண்டப்பட்டு காணாமல் போகும் போது 18-32 பொருளாதார இழப்புக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகிறது.
வருமானம் மற்றும் செல்வ நிலைகள், பாலின உறவுகள் மற்றும் சாதி இயக்கவியல் ஆகியவை காலநிலை மாற்றத்துடன் ஒன்றிணைந்து ஏற்றத்தாழ்வுகளை நிலை நிறுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக, அதிகரித்து வரும் தானிய விலைகள், விவசாயத் துறையில் குறைந்துவரும் ஊதியங்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்குக் காரணமான பொருளாதார வளர்ச்சியின் மெதுவான வீதம் ஆகியவற்றின் கலவையானது பூஜ்ஜிய வெப்பமயமாதல் சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது 2040 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய வறுமை விகிதத்தை 3.5 சதவீதமாக உயர்த்தக்கூடும் இதனால் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் வறுமையால் அந்த ஆண்டில் பாதிக்கப்படுவார்கள். நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் தானியங்களின் விலைகள் அதிகரிப்பதை எதிர்கொள்ள நேரிடும். கிராமப்புற மக்களை இது பெரிதும் பாதிக்கக் கூடும்.
குறைந்த கார்பன் வளர்ச்சியைப் பின்தொடர்வது திட்டமிடப்பட்ட செலவுகளைத் தணிக்கும், மேலும் பிற பொருளாதார நன்மைகளையும் தரும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் ஓ.டி.ஐ. நிர்வாகத்தின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றும் ரத்தின் ராய்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil