உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவித்து வரும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய குடிமக்களை மீட்கும் பணிகளை மேற்பார்வையிட ருமேனியா, போலந்து உள்ளிட்ட உக்ரைன் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் 4 பேரை அனுப்ப பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
உக்ரைன் மீது 5-ஆவது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.
பொதுமக்கள் யாரையும் வெளியேற வேண்டாம் என்று உக்ரைன் அரசு அறிவுறுத்தியுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலும், வீட்டுக்கு கீழே இருக்கும் பதுங்கு குழிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
மற்றொரு பக்கம் லட்சக்கணக்கான மக்கள் போர் அச்சம் காரணமாக உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர்.
உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவிப்பது குறித்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. தங்க இடம், உணவு, குடிநீர் என அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் கஷ்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
தமிழகத்திலிருந்து உக்ரைன் சென்று பயிலும் மாணவர்களும் செல்போன்களில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உதவி கோரி வருகின்றனர்.
உக்ரைன் அரசு தனது வான்வெளியை மூடியிருப்பதால் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா எல்லையில் இந்திய விமானம் மீட்புப் பணியில் ஈடுபட்டு வவருகிறது.
இதுவரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் பத்திரமாக மீட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் நிகழக் கூடாது என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
புதினும் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்று உறுதியளித்துள்ளார். அதே நேரம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காததால் இந்தியர்கள் உக்ரைனில் எப்படி நடத்தப்படுவார்கள் என்ற அச்சமும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.
மீட்பு நடவடிக்கைக்காக மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிற மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (பிப்.28) நடந்தது.
அப்போது, உக்ரைன் அண்டை நாடுகளின் எல்லைகளில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக 4 அமைச்சர்களை அனுப்புவது என்று முடிவானது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோரை அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
போலந்து எல்லையில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள்… புதிய பாதையை திட்டமிடும் இந்தியா
ருமேனியா மற்றும் மால்டோவாவில் ஜோதிராதித்ய சிந்தியா, ஸ்லோவேகியாவில் கிரண் ரிஜிஜு, ஹங்கேரியில் ஹர்தீப் சிங் புரி, போலந்தில் வி.கே.சிங் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட உள்ளனர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா, கேபினர் செயலர் ராஜீவ் கெளவா, வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்கலா மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.