/tamil-ie/media/media_files/uploads/2018/09/mallya-uk-court-reuters-759.jpg)
விஜய் மல்லையா வழக்கு
Indian Tycoon Vijay Mallya : பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி திரும்பத் தராமல் இந்தியாவை விட்டு வெளியேறியவர் இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா. 9000 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி தராமல் வெளிநாட்டில் 2016ம் ஆண்டில் இருந்து தங்கியிருக்கிறார் விஜய் மல்லையா.
அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பவேண்டும் என்று மத்திய புலனாய்வுத் துறை சார்பில் இருந்து இங்கிலாந்து நாட்டு அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று, விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது அந்த நீதிமன்றம். மேலும் 14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் பணத்தை நான் திருடவில்லை
இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரான விஜய் மல்லையா, நான் ஒன்றும் மக்களின் பணத்தை திருடவில்லை. கிங் பிஷ்ஷர் ஏர் லைன்ஸ் நடத்திய போது, எரிபொருள் தொடர்பாக நானும் 4000 கோடி ரூபாய் வரையில் நஷ்டமடைந்திருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார் விஜய் மல்லையா. அதனை நான் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன் என்றும் கூறியிருக்கிறார்.
விஜய் மல்லையாவின் வழக்கில் கிடைக்கப்பெற்ற இந்த தீர்ப்பினால் மத்திய புலனாய்வுத் துறையும், மத்திய அரசும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது. 14 நாட்களில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால், விஜய் மல்லையா இந்தியா வருவது மேலும் தாமதம் ஆகலாம்.
மேலும் படிக்க : நாட்டினை விட்டு வெளியேறும் முன்பு நான் நிதி அமைச்சரை சந்தித்தேன் - விஜய் மல்லையா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.