INX Media case CBI gets ex-Niti CEO Sindhushree Khullar : முன்னாள் நிதி ஆயோக்கின் தலைவர் சிந்துஸ்ரீ குல்லார், ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக செயல்பட்ட போது, பொருளாதார உள்விவகாரத் துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். ப.சிதம்பரம் வழக்கின் சி.பி.ஐ விசாரணையின் போது, அவர் தரப்பு சாட்சியங்களை அளிக்க சிந்துஸ்ரீ நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவர் ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இன்று அவர் மீண்டும் விசாரணைக்கு அவர் அழைக்கப்பட உள்ளார்.
அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (FIPB) ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ. 4.62 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியது. ஆனால் அந்த ஒப்புதலை பயன்படுத்தி 305 கோடி ரூபாய் நிதியாக ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது. அந்த கால கட்டத்தில் சிந்துஸ்ரீ அங்கு பணியாற்றியது குறிப்பிடதக்கது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
விசாரணையின் ஆரம்பத்தில் இருந்து சிதம்பரம் தரப்பு கூறியது, இந்த ஒப்புதலை வாரியம் மற்றும் அமைச்சகத்தில் பணி புரிந்த அதிகாரிகளே வழங்கினார்கள் என்பது தான். நேற்றும் அவ்வாறே கூறப்பட்டது. நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மேலும் விசாரணைகள் துவங்கியது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் நேரடியாக குறிப்பிடப்படாத இந்த வழக்கின் மற்ற குற்றவாளிகளிடம் இவ்விசாரணை நடத்தப்பட்டு, ப.சிதம்பரத்தின் குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹாரிடம் கூறினார். சி.பி.ஐ தரப்பு நேற்று, மீண்டும் ப.சிதம்பரத்தை அடுத்த 5 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் ஆகஸ்ட் 30ம் தேதி வரை, நான்கு நாள் விசாரணைக்கு மட்டும் ஒப்புக் கொண்டது நீதிமன்றம்.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு
முன் ஜாமீன் மேல் முறையீட்டு மனு
நேற்று நீதிபதி பானுமதி மற்றும் ஏ.எஸ். போபண்ணா முன்னிலையில், முன் ஜாமீன் மனு நிராகரிப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஏற்கனவே சி.பி.ஐ ப.சிதம்பரத்தை கைது செய்ததால், ஜாமினுக்கான மனுவை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு அம்மனுவை தள்ளுபடி செய்தனர்.
சி.பி.ஐ. காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு
சி.பி.ஐ காவலுக்கு எடுத்து விசாரிப்பதை தவிர்க்க தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைப் பட்டியலில் இடம் பெறவில்லை. இது குறித்து பதிவாளரிடம் கேள்வி எழுப்பிய போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவுக்காக காத்துக் கொண்டிருப்பதாக அறிவித்தார்.
அமலாக்கத்துறையில் கைது செய்யாமல் இருக்க இடைக்கால தடையை செவ்வாய் கிழமை வரை நீடித்து அறிவித்தது உச்ச நீதிமன்றம். அதற்கு முன்பு, அவர் சார்பில் கைது தடைக்கான மனுவை தாக்கல் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
கபில் சிபில் வாதம்
ப.சிதம்பரம் தரப்பில் நேற்று கபில் சிபில், தயான் கிருஷ்ணன், மற்றும் பி.கே. துபேய் ஆகியோர் வாதம் செய்தனர். சி.பி.ஐ. காவல் மேலும் நீட்டிப்பது குறித்து அவர் பேசிய போது, இந்த வழக்கில் பேமெண்ட் விவகாரம் (5 மில்லியன் டாலர்கள்) குறித்து ஏற்கனவே சி.பி.ஐ குறிப்பிட்டிருந்தது. ஆனால் கடந்த 26 மணி நேர விசாரணையில் இது குறித்து ப.சிதம்பரத்திடம் ஒரு கேள்வி கூட எழுப்பப்படவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் இந்த விவகாரத்தை பெரிதாக காட்டவே இந்த பணம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. பீட்டர் முகர்ஜி உங்களுக்கு இந்த பணம் கொடுத்தாரா என்று கேள்வி எழுப்பிய போது சிதம்பரத்தின் பதில் இல்லை என்று தான் இருந்தது. மேலும் இதற்கான தகுந்த ஆதாரங்கள் சி.பி.ஐயிடம் இல்லை என்றும் வாதமிட்டார் கபில் சிபில்.
மேலும் படிக்க : ஐ.என்.எக்ஸ் வழக்கில் இதுவரை நடைபெற்றது என்ன?
இந்த வழக்கு ஒரு நல்ல மனிதரின் புகழை நாளுக்கு நாள் கலங்கம் செய்து வருகிறது என்று மேற்கோள் காட்டிய கபில் சிபில், மக்கள் குற்றத்தின் நிருபணமாவதற்கு முன்பு கைது செய்யப்படுவதுக்கும், குற்றவாளி தான் என்று அறிந்த பின்பு கைது செய்யப்படுவதுக்கும் இடையிலான வித்தியாசத்தினை உணர்ந்து கொள்ளமாட்டார்கள் என்று கூறினார். சீலிடப்பட்டு உறையில் கொடுக்கப்பட்ட ஆவணங்களுக்கும் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார். அதற்குள் என்ன இருக்கின்றது என்றே தெரியாமல் எப்படி வாதிடுவது என்று கேள்வி எழுப்பிய அவர் இது இந்திய அரசியல் சாசனத்தை மீறுவதாகும் என்றும் குறிப்பிட்டார்.