INX media case VIP prisoners sentenced in Tihar jail : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், சிபிஐ விசாரணை முடிவுற்ற பிறகு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் இருக்கும் மத்திய திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். திகார் சிறை இன்று, அரசியல் மற்றும் இதர முக்கிய துறைகளில் தவறு செய்து தண்டனை பெற்றுச் செல்லும் விஐபிகளுக்கு பல்வேறு வசதிகள் இருக்கின்றன. ஆனால் முன்பு அப்படி ஒன்றும் கிடையாது. அந்த சூழலிலேயே திகார் சென்று திரும்பியவர் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி. அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் பெரும் மாற்றத்தை சந்தித்தது திகார் ஜெயில் என்பது தனிக்கதை.
தெற்காசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலைகளில் ஒன்று தான் இந்த திகார் ஜெயில். 1947ம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், தலைநகர் டெல்லியை மையமாக கொண்டு சிறை வளாகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார் ஜவகர்லால் நேரு. அவரின் மகள் மற்றும் பேரன் அங்கு சிறைக்கைதிகளாய் அடைக்கப்பட்டது வரலாறு.
Advertisment
Advertisements
புதுடெல்லிக்கு மேற்கே அமைந்திருக்கும் சாணக்கியபுரியில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்திருந்த திகார் கிராமத்தில் இந்த சிறைச்சாலை அமைக்கபட்டது. 1952ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1958-ல் திறக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய சிறை இது.
திகார் ஜெயிலில், எமெர்ஜென்சிக்கும் காரணமாக இருந்த இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, அதனை எதிர்த்து போராடிய ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் சிறைவாசம் சென்றனர். இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சத்வந்த் சிங்கும் இங்கு தான் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், முன்னாள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி போன்ற பல்வேறு வி.ஐ.பி.களை வரவேற்றது திகார் சிறை. 2ஜி அலைக்கற்றை மோசடி வழக்கில் கைதான ஆ. ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் மகனும் இந்த சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்னா ஹசாரே மற்றும் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த சிறைக்கு அனுப்பட்டுள்ளனர்.