Karnataka Crisis : கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் கடந்த வருடம் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்பட்டது. ஜூலை 6ம் தேதி, இந்த கூட்டணியின் மீது அதிருப்தி தெரிவித்து 13 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 3 மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் தங்களின் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அளித்தனர். ஆனால் அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக விரைவில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் 15 எம்.எல்.ஏக்கள் வழக்கு பதிவு செய்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
தலைமை நீதிபதி ரஞ்சன் கோயாய் மற்றும் நீதிபதிகள் அனிருத்தா போஸ், தீபக் குப்தா அடங்கிய அமர்வு இவ்வழக்கினை விசாரணை செய்து 17ம் தேதி தீர்ப்பு வழங்கியது. குறிப்பிட்ட கால நேரத்தில் சபாநாயகரை ஒரு முடிவு எடுக்க நிர்பந்திக்க இயலாது என்றும், அதே நேரத்தில் 15 எம்.எல்.ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அழுத்தம் தரக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினர்.
இந்நிலையில் நேற்று கர்நாடக சட்டசபை கூடியது. 15 எம்.எல்.ஏக்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. நம்பிக்கை கோரும் தீர்மானத்தினை முன்மொழிந்து பேசினார் முதல்வர் குமாரசாமி. அவரை தொடர்ந்து கர்நாடகாவின் காங்கிரஸ் கமிட்டி சட்டப்பேரவை குழு தலைவர் சித்தராமையா இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார். பாஜகவினர் 15 எம்.எல்.ஏக்களை கடத்திவிட்டதாக அவையில் சச்சரவு ஏற்பட நேற்று மதியம் 3 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. கட்சி தாவல் சட்டத்தை ஆய்வு செய்து 15 எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுத்த பின்னர் தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் விடாப்பிடியாக நிற்க, எவ்வளவு நேரம் ஆனாலும் சரி இன்றே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜகவின் எடியூரப்பா நேற்று வலியுறுத்தினார்.
ஆனாலும் அமளி நிலவிய காரணத்தால் அவையை விட்டு வெளியேறாமால் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டனர் பாஜகவினர். சிலர் போர்வை தலையணையுடன் வர, அங்கேயே காலை வரை உறங்கியும் உள்ளனர்.
கர்நாடக பேரவையில் நாளை மதியம் 1.30 மணிக்கு குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வாஜூபாய் வாலா கடிதம் எழுதியுள்ளார். எம்எல்ஏக்களின் அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் கர்நாடக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா இக்கடிதத்தை அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று மதியம் 01:30 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடகாவில் நடைபெற இருந்ததாக கூறப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுனர் உத்தரவிட்டார். ஆனாலும் அதன்படி நடக்கவில்லை. இதனால் குழப்பமான நிலையே நீடித்தது.
இதைத் தொடர்ந்து ஆளுனரின் உத்தரவை எதிர்த்து முதல்வர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனால் நிமிடத்திற்கு நிமிடம் கர்நாடகா நிலவரம் களேபரமாகி வருகிறது.
மேலும் படிக்க : ராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீது முதலில் நடவடிக்கை… பின்பு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு… – காங்கிரஸ் கோரிக்கை!