Kashmir valley communication blockade : ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு, 4ம் தேதி நள்ளிரவில் இருந்து ஊரடங்கு உத்தரவு காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையம், அலைபேசி சேவைகள் என தகவல் பரிமாற்ற சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் கல்லூரி, மேற்படிப்பு, வேலைகளுக்காக தங்களின் சொந்த இடங்களில் இருந்து வெளியேறிய காஷ்மீரகத்து மக்கள் தங்களின் குடும்பத்தினருடன் பேசமுடியாமல் தவித்து வருகின்றனர். அதே நிலை ஆனால் கொஞ்சம் ரிவெர்ஸாக ராணுவ வீரர்களை பாதித்துள்ளது.
பாதிப்புக்கு உள்ளாகும் ராணுவ வீரர்கள்
காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் மத்திய ஆயுதம் தாங்கிய காவல் படையில் பணியாற்றும் துணை ராணுவப்படையினரும் தங்களின் குடும்பத்தினருடன் பேசாமல் தவித்து வருகின்றனர். ஸ்ரீநகர் ஜீரோ ப்ரிட்ஜ் செக்பாய்ண்ட்டில் இருக்கும் இரண்டு துணை ராணுவப்படையினர் இது குறித்து பேசுகையில், நாங்கள் எங்களின் குடும்பத்தினருடன் பேசி வெகு நாட்களாகிவிட்டன. இறுதியாக ஆகஸ்ட் 4ம் தேதி பேசியது. ஒரு வாரத்தை தாண்டிவிட்டது. எங்கள் குடும்பத்தினருடன் பேச எங்களுக்கு வேறு வழியே இல்லை என்று கூறினார்கள். தங்களைப் பற்றிய தகவல்களை அவர்கள் அளிக்க முன்வரவில்லை.
சிறிது தூரத்தில் இருக்கும் மற்றொரு ராணுவ வீரர் அருகில் இருக்கும் மூன்று குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருந்தார். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அவர் “எனக்கு இது மிகவும் அயர்ச்சியை அளிக்கிறது. அனைத்துமே எனக்கு இங்கு அயர்ச்சியை அளிக்கிறது. நான் அனைவரிடமும் கேட்கின்றேன், என் குடும்பத்தினருடன் பேசுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று. காலை 5 மணியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மாலையில் முகாம்களுக்கு திரும்புகின்றோம். ஆனால் எங்களால் எங்கள் குடும்பத்தினருடன் பேச இயலவில்லை” என்று கூறினார் அவர்.
மேலும் படிக்க : ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா : மாறுதலுக்கு உள்ளாகும் இரு நாட்டுக் கொள்கைகள்!
Kashmir valley communication blockade
இந்த புகார்களை இவர்கள் மட்டும் வைக்கவில்லை. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் இந்த புகாரினை முன்வைக்கின்றார்கள். பக்கத்து ஊர் காவல் நிலையத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் காவலர்கள் கூட தங்களின் வீட்டிற்கு திரும்பிச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதை கூட எங்களால் அறிந்து கொள்ள இயலாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் இருந்து , கோத்தி பாக் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் 42 வயது மிக்க ராணுவ வீரர் கூறுகையில் ”நான் தினமும் என்னுடைய வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அலைபேசியில் அழைத்து பேசுவேன். இங்கு பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னை நினைத்து அவர்கள் கவலை கொள்வார்கள். விரைவில் இப்பகுதியில் தொலைத்தொடர்பு வசதிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்று நம்புகின்றேன். விரைவில் என் குடும்பத்தினரிடம் பேசி, நான் நலமாக இருக்கின்றேன் என்று கூறுவேன்” என்று வருத்தத்துடன் அறிவிக்கிறார் அவர்.
ரீகல் சௌக்கில் இருக்கும் மற்றொரு வீரரும் “நான் இது வரையில், இவ்வளவு நாட்கள் என் குடும்பத்தினருடன் பேசாமல் இருந்ததே இல்லை. இது எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. என் இரண்டு மகன்களையும் நான் மிகவும் மிஸ் செய்கின்றேன். என்னுடைய மனைவி என்னை நினைத்து மிகவும் கவலை கொள்வார் என்று கூறினார்.
டூரிஸ்ட் ரிசப்சன் செண்டரில் பணியில் ஈடுபட்டிருந்த வீரர் கூறுகையில் “காஷ்மீரில் இது தான் என்னுடைய முதல் வருகை. கடந்த ஒரு மாதமாக என் குடூம்பத்தினருடன் நான் பேசி வந்தேன். ஆனால் 5ம் தேதி முற்றிலுமாக நெட்வொர்க் டவுன் ஆனது. இது போன்ற நிலையில் நான் ஒருநாளும் இருந்ததில்லை. மெசேஜ்கள் செல்வதாக என்னுடன் பணிபுரியும் நண்பர் கூறினார். நான் என் வீட்டில் இருப்பவர்களுக்கு மெசேஜ் அனுப்பினேன். ஆனால் அந்த மெசேஜ் என்னுடைய தம்பிக்கு சென்றதா என்பது எனக்கு தெரியவில்லை. மீண்டும் இங்கு நிலை சீராகும் என்று நினைக்கின்றேன் என்று அவர் கூறினார்.
ராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக இங்கு சேட்டிலைட் போன்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அந்த போன்களும் இயங்கவில்லை. குறிப்பிட்ட அதிகாரிகளின் எண்களை மட்டும் டீ-ப்ளாக் செய்யக் கூறி, பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மிக அவசியமான செய்திகளை அனுப்பவும், தேவைகளைப் பெறுவும் அந்த எண்கள் பயன்பட்டு வருகின்றன.
ஸ்ரீநகரில் மூத்த அதிகாரியின் வீட்டில் கார்ட் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த ஒருவர், அந்த அதிகாரியின் வீட்டுக்கதவைத் தட்டி, குடும்பத்தினருடன் பேச விரும்புவதாக கூறினார். அவர் அந்த ராணுவ வீரரின் ஆசையை நிறைவேற்ற, அனுமதி அளித்தார். தன்னுடைய குடும்பத்தினருடன் பேசிய பின்பு அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டார். அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது. எங்களுக்கும் தான். நாங்களும் எங்கோ வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு சகோதரர்கள், தந்தைகள், மகன்கள், மற்றும் கணவர்கள். எங்களை நினைத்து அவர்கள் மிகவும் வருத்தம் கொள்வார்கள் என்று கவலையுடன் தெரிவிக்கிறார் அசாமில் இருந்து வந்த எஸ்.எஸ்.பி. வீரர்.