Kerala based IAS officer Kannan Gopinathan : ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை மீண்டும் பணியில் சேரக் கூறி உத்தரவிட்டுள்ளது டையூ டாமன் நிர்வாகம். கேரளாவில் பிறந்து வளர்ந்த கண்ணன் கோபிநாதன் டையூ டாமன் பகுதியின் எரிசக்தி துறையின் செயலாளராக பணியாற்றினார். காஷ்மீர் மக்களின் குரல்கள் ஒடுக்கப்படுவதை எண்ணி வேதனை அடைந்த அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே நான் இருக்க வேண்டும் என்று நினைத்து சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதினேன். ஆனால் ஒரு மாநில மக்களின் குரல்களே ஒடுக்கப்பட்டுள்ளது. எனக்கு என்னுடைய கருத்து சுதந்திரம் மீண்டும் வேண்டும் என்பதால் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியே தன்னுடைய வேலையை ஆகஸ்ட் 21ம் தேதி ராஜினாமா செய்தார்.
மேலும் படிக்க : ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்?… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி
ஆனால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் காஷ்மீர் விவகாரம் காரணமாகவே நான் இம்முடிவை எடுத்துள்ளேன் என்று அவர் குறிப்பிடவில்லை. இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் தனிவிவகாரத்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு, நீங்கள் உங்களின் சேவையை தொடர வேண்டும் என டையூ டாமன் நிர்வாகம் அவருடைய வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
சில்வஸ்ஸாவில் இருக்கும் அரசு விருந்தினர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த கண்ணன் கோபிநாதன் தற்போது அங்கு இல்லை. அவருக்கு விடுக்கப்பட்டிருக்கும் நோட்டீஸில்“ஒரு சிவில் சேவை செய்யும் ஒருவரின் ராஜினாமா கடிதத்தை அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்த ராஜினாமா செல்லுபடியாகும். உங்களின் கடிதம் குறித்து இதுநாள் வரையிலும் எம்முடிவும் எட்டப்பட்டவில்லை. முடிவுகள் எடுக்கும் வரை உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமையையும் பொறுப்பையும் நீங்கள் நிறைவேற்ற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள வெள்ளத்தின் போது, நிவாரணப்பொருட்களை தோளில் சுமந்து மக்களுக்கு உதவியவர் கண்ணன் கோபிநாதன். அன்று அவர் செய்த உதவிகள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இணைய சேவைகள், நெட்வொர்க் சேவைகள், ஊடகங்களின் பங்கேற்பு, வெளியாட்கள் உள்நுழைவது என அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இன்றுடன் 24வது நாளாக ஊரடங்கு உத்தரவின் கீழ் மக்கள் இருந்து வருகின்றனர்.