திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 24 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் உள்ளனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் 3 பேருக்கும், திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 265 பேருக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
26 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 237 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர். தற்போது 1, 64,130 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1, 63,508 பேர் வீடுகளிலும், 622 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று மட்டும் 123 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7965 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் 7256 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது.
நாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்... ஆனால் அது போதுமா?
இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர். 7 பேர் வெளிநாட்டினர் ஆவர். 67 பேருக்கு அவர்களுடன் தொடர்பு இருந்ததால் இந்நோய் பரவி உள்ளது. ஜெர்மனியில் இருந்து கேரளாவின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா வந்து ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த 232 பேர் நேற்று அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு நலமுடன் இருப்பதாக ஜெர்மனியிலிருந்து கேரள அரசுக்கு தகவல் வந்துள்ளது. கேரளாவில் தேவைப்படுபவர்களுக்கு கோவிட் பரிசோதனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் புதிதாக 100 முதல் 150 பேர் நோய் அறிகுறியுடன் வருகின்றனர்.
இவர்களது உமிழ்நீர் மாதிரிகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. காசர்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நான்கு நாட்களுக்குள் கோவிட் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் . இலவச ரேஷன் பொருள் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது. சாலைகளில் இன்று ஆட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தேவையில்லாமல் ரோடுகளில் சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை 22, 338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12,783 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இனிமுதல் இவ்வாறு தேவையில்லாமல் ரோடுகளில் சுற்றித் திரிபவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகள் வருகை அதிகரித்துள்ளது. இன்று 2153 லாரிகள் பொருட்களுடன் வந்துள்ளன . காசர்கோடு அருகே கர்நாடக அரசு எல்லையை மூடி உள்ளது. இதன் காரணமாக சிகிச்சை கிடைக்காமல் இதுவரை 7 பேர் இறந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.