CoronaVirus: உலக நாடுகளையே சீனாவின் கொரொனா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தி வருகிறது. மனித உயிர்களை வேட்டையாடும் இந்த கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
Advertisment
அதேசமயம், சீனாவில் இருந்து திரும்பியவர்கள் மூலமாக அமெரிக்கா, தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி இருக்கிறது. இதுவரை சீனா மட்டுமின்றி, 18 நாடுகளில் 68 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.
உலக நாடுகளுக்கும் வைரஸ் பரவுவதால், சர்வதேச பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், சீனாவிலிருந்து வருபவர்களிடம் விமான நிலையத்திலேயே முழு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சீனாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் மாணவி அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்றொரு மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. தனி வார்டில் மாணவி அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை கேரள அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது. இந்த தகவலை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். 3 பேருக்கு அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மாநில பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, "மாநில பேரிடர் என்ற அறிவிப்பை மக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. மாறாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.