சபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா? விடை இதோ!

கேரள அரசியலில் மீண்டும் சர்ச்சை

எழுதியவர்கள் : Sowmiya Ashok, Shaju Philip, Arun Janardhanan, Nikitha Phyllis , Liz Mathew 

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, இதுவரை 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

கேரள அரசு வெளியிட்ட இந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. கேரள அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஹான்சாரியா, இதுவரை 51 பெண்கள் கோவிலுக்குள் சென்றுள்ளனர் என்ற தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார். நீதிமன்றத்தில் அவர் தெரிவித்த தகவலின் முழு விபரம்.

“சபரிமலை செல்ல இதுவரை 16 லட்சம் பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.இதில் 7,500 பேர் 10 – 50 வயதிலானவர்கள் பெண்கள்.இதில் ஆன்லைனில் பதிவு செய்யாமல் நேரடியாக சென்றவர்கள் இடம்பெறவில்லை. கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் தற்போது வரை 44 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்துள்ளனர்.

50 வயதிற்கு உட்பட்ட 7,564 பெண்கள் சபரிமலை தரிசனத்திறகாக ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர் என்பதை அவர்களின் ஆதார் விவரம் மூலம் உறுதியாக தெரிவிக்கிறோம். இதில் 51 பெண்கள் இதுவரை சபரிமலையில் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். எங்களிடம் சபரிமலை வரும் பக்தர்களின் வயதை தெரிந்து கொள்வதற்கு வேறு எந்த வழியும் இல்லை” என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில், கேரள அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு பாஜக, காங்கிரஸ், சபரிமலை கர்மா சமிதி, பந்தளம் அரண்மனை குடும்பம் ஆகியவை கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன

சபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்களின் பெயர் அடங்கிய பட்டியலும் நேற்று வெளியாகியது இதில் அவர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் இடம்பெற்றிருந்தது. இதை சரிபார்க்கும் விதமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஒரு சிறப்பு முயற்சியை மேற்கொண்டது.அந்த முயற்சியின் உண்மை நிலவரம் இதோ… இதில் கவனிக்கத் தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் லிஸ்டில் இடம்பெற்றுள்ள பெண்ணில் ஒருவர் கூட கேரளாவைச் சேர்ந்தவர் இல்லை.

இருவர் இல்லை… இதுவரை 51 பெண்கள் சபரிமலை சென்றுள்ளனர்

லிஸ்டில் எல்லா பெண்களும் 41-49 வயதில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 20 பெண்களையும், ஆந்திராவிலிருந்து 4 பெண்களை கோவாவிலிருந்து 1 பெண்ணையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்புக்கொண்டு பேச முற்பட்டது. ஆனால் அவர்களின் பதில்கள் வெவ்வெறாக இருந்தன.

சபரிமலை 51 பெண்கள்

சபரிமலை 51 பெண்கள்

அடுத்த 6 எண்களை தொடர்புக் கொண்டு பேசிய போது, அதற்கு பதிலளித்த ஆண்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பெண்களுக்கு எங்களுக்கும் சம்பந்தமில்லை என கூறினர். அடுத்த 9 நபர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வயது தவறு என்றும், 50 வயதுக்கு அதிகமானோர் தான் நாங்கள் என கூறினர்.

கடைசி 2 நபர்கள்,ஆன்லைன் பதிவில் தவறாக வயது பதிவிடப்பட்டு விட்டதாக கூறினர். செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 50 வயதிற்கு கீழ் உள்ள கனதுர்கா மற்றும் பிந்து என்ற கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் சபரிமலைக்குள் சென்று சாமியை தரிசனம் செய்தாக கூறப்பட்டது. ஆனால் வெளியான லிஸ்டில் இந்த இருவரின் பெயரும் இடம்பெறவில்லை.

அதிலும் கனதுர்கா என்ற பெண் தமிழ்நாட்டில் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் எந்தவித தொடர்பு எண்களும் இடம்பெறவில்லை.

இது தொடர்பாக சபரிமலை தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், “இதுவரை 7,564 பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் வரிசைப்படி 51 பெண்கள் கோயிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சன்னிதானத்தை அடைந்தார்களா? வழிபட்டார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது” என மேலோட்டமாகப் பதிலளித்துள்ளார்.

அதே போல்  பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் இது. உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பொய் தகவலை கூறியதுடன், மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள்” என கூறியுள்ளார். இதனையடுத்து, கேரள அரசியலில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close