700 கோடி ரூபாய் நிதி உதவி: கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பெருத்த சேதாரத்தினை சந்தித்திருக்கிறது கேரளா. அவர்களுக்கு உதவி புரிவதற்காக உலகின் பல்வேறு பக்கங்களில் இருந்தும் நிதியை திரட்டி மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் அண்டை மாநிலத்தவர்கள்.
700 கோடி ரூபாய் நிதி உதவி
பல்வேறு மாநில அரசுகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியினை கேரளாவிற்கு அளித்து வந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாயை நிதியாக கேரளாவிற்கு தர விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் அந்த நிதி உதவியினை ஏற்க இடம் தரவில்லை என்ற நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வந்துள்ளது.
இது தொடர்பான விரிவான செய்தியினை படிக்க
மன்மோகன் சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட கொள்கை
இந்திய பேரிடர் நிவாரண நிதிக் கொள்கை 2004ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன்படி, எந்த ஒரு சூழலிலும் இந்தியா வெளிநாட்டு அரசிடம் இருந்து வரும் நிதியினை பெற்றுக் கொள்ளாது என்பதாகும். சுனாமி பேரலை வந்த பின்பு தான் இக்கொள்கைகள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இந்தியாவில் ஏற்பட்ட பேரழிவுகளில் வெளிநாட்டின் நிதி உதவியை இந்தியா பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர்காஷி நிலநடுக்கம் (1991), லத்தூர் நிலநடுக்கம் (1993), குஜராத் பூகம்பம் (2001), பிகார் வெள்ளம் (2004) காலங்களில் இந்தியா வெளிநாட்டின் நிதி உதவியை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
2004க்குப் பின்பு
மன்மோகன் சிங் “எந்த பேரிடராக இருந்தாலும் அதை இந்தியா சமாளித்துக் கொள்ளும். அதையும் மீறி ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். அதற்கு பின்னாலான இந்த 14 வருடங்களில் ஒரு முறை கூட வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி உதவியை இந்தியா பெற்றதில்லை. இதற்கு இன்றளவும் இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.
ஒன்று இந்தியா இது போன்ற பிரச்சனைகளை தனியாளாக நின்று சமாளித்துக் கொள்ளும். மற்றொன்று பல்வேறு காரணங்களால் ஒரு சில நாட்டினரிடம் இருந்து நிதி உதவி பெறாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களிடம் முறையாக வேண்டாம் என்று மறுப்பதும், மற்றவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதும் மன வருத்தத்தினை உண்டாக்கும் என்பதால் பொதுவாக வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதை நிறுத்திவிட்டது இந்தியா.
தற்போது மாலத்தீவுகள் கொடுத்த 34 லட்சம் நிதி உதவியையும், ஐக்கிய அரபு அமீரகம் தரும் 700 கோடியையும் நிராகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
14 வருடங்களில் ரஷ்யா, அமெரிக்கா, மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து உத்தரகாண்ட் வெள்ளம், காஷ்மீர் பூகம்பம், காஷ்மீர் வெள்ளம் ஆகியவற்றிற்காக தரப்பட்ட நிதி உதவியை இந்தியா நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.