கேரளா மழை வெள்ளம் காரணம் : கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் கனத்த மழை பெய்யத் தொடங்கியது. ஆசியாவின் மிகப் பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி செறுதொணி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்திருந்தது கேரள அரசு. மேலும் படிக்க : இடுக்கி அணையில் இருந்து அழகிய காட்சியும் கோர தாண்டவம் ஆடிய பருவமழையும்
மழை சற்று சீராகி மீண்டும் கனமழையாக மாறியது. செறுதுணி அணையின் நீர்பாயும் மாவட்டங்களான வயநாடு, பத்தினம்திட்டா, அலப்புழா, இடுக்கி, கோட்டயம் பெருத்த அழிவினை சந்தித்தன. லட்சக் கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கேரளா மழை வெள்ளம் காரணம் குறித்து அறிக்கை சமர்பித்த ஜேஎன்யூ
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சார்பில் விசாரணைக் கமிட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கமிட்டியில் இருக்கும் நபர்கள் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்புடன் இணைந்து, கேரளாவில் வெள்ளம் எதனால் ஏற்பட்டது என்று ஆராய்ச்சி செய்து அதன் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த பணியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேரிடர் மேலாண்மை இயக்கத் தலைவரான டாக்டர் அமிதா சிங்கும் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றார். அலப்புழா, இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருக்கும் 20 தாலுக்காவில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்ட பின்பே, கேரளாவில் 2007ம் ஆண்டு மாநில பேரிடர் மேலாண்மை அத்தாரிட்டி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட இந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பேரிடர் மேலாண்மை குறித்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் ஆண்டு 2013. அந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேரிடர்கள் ஏற்பட்டன, எங்கே ஏற்பட்டது என்ற விபரங்களை மட்டும் பதிவு செய்து வந்தது.
ஒரு பேரிடரை எதிர் கொள்ள தயார் நிலையில் இல்லாமல் போனது, மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையும் காதில் போட்டுக் கொள்ளாமல் மிகவும் தாமதமாக அணைகளில் இருந்து உபரி நீரை வெளியேற்றது போன்ற காரணங்களால் தான் ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை வெள்ளக்காடாக கேரளம் மாறியது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கேரளா மழை வெள்ளம் காரணம் : முன்னெச்சரிக்கையின்றி 38 அணைகள் திறப்பு
அணைகள் பாதுகாப்பு அத்தாரிட்டி ஆகஸ்ட் 7ம் தேதி நடத்திய செய்தியாளார்கள் சந்திப்பில் ஒரு வாரம் கழித்தே அணைகள் திறக்கப்படும் என்று பேட்டி அளித்திருந்தது. ஆனால் எதிர்பார்ப்பிற்கும் மேலாக மழை பொழிவு இருந்த காராணத்தால் மாநிலத்தில் இருந்து 38 அணைகளையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்டது. ஏற்கனவே மழையால் அவதிப்படும் மக்களை மேலும் துன்புறுத்தும் செயலாக இது மாறிப்போனது. அந்த நேரத்தில் தான் இடுக்கி அணையும் அதன் முழுக் கொள்ளளவையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை, கேரள அரசு மூன்று முறை இடுக்கியில் இருக்கும் கிராம பஞ்சாயத்து தலைவர்களை சந்தித்து பேசியது. அப்போது கிராம நிர்வாகிகள் இடுக்கி அணையை முன் கூட்டியே திறந்து விடக் கோரி தொடர்ந்து கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மேலும் வெள்ள காலத்தில் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என கேரள மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் அம்மக்களுக்கு பயிற்சிகள் எதையும் அளிக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க