சமீபத்திய கொரோனா உயர்வை கேரளா எவ்வாறு கையாள்கிறது?

ஒவ்வொரு நாளும் 5,000 அல்லது 10,000  பாதிப்புகளை கையாளும் திறன் நமது பொது சுகாதார அமைப்புகளுக்கு உள்ளதா என்பதுதான் முக்கியமான கேள்வி.

By: October 10, 2020, 5:54:00 PM

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்ட முதல் மாநிலமான கேரளாவில், நான்கரை மாதங்களுக்குப் பின்தான், 10,000 க்கும் மேற்பட்ட  தினசரி பாதிப்பு என்ற உச்சநிலையை அடைந்தது. கடந்த புதன்கிழமை கேரளா, கர்நாடகா மாநிலங்கள் 10,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்தன

கொரோனா வைரசைத் திறம்பட எதிர்த்துப் போராடியதற்காக உலகளவில் பெயர் வாங்கிய கேரளா, தற்போது அசாதாரண போக்கை வெளிபடுத்தி வருகிறது.   மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக, கடந்த சில வாரங்களாக அதிகப்படியான தினசரி பாதிப்பை அம்மாநிலம் பதிவு செய்து வருகிறது.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மட்டும், அங்கு 1.93 லட்சத்துக்கும் மேற்பட்ட  கொரோனா பாதிப்புகள் பதிவாகின. 2.68 லட்சம் என்ற அதன் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், இது 70 சதவீதத்திற்கும் மேலானது. பெரும்பாலான பாதிப்புகள் சமீபத்திய காலங்களில் நிகழ்ந்ததால், கேரளாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 90,000 க்கும் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களத் தவிர அதிக  சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கேரளா கொண்டுள்ளது.

“தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ விட அதிகமாக இருக்கும். அதை, 15,000 க்கும் குறைவான நிலையில் வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நவம்பர் மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கே.கே. ஷைலஜா பல காரணங்களை மேற்கோள் காட்டினார்.

“ஜூன்- செப்டம்பர் மாதங்களுக்கு இடையே, பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுமார் ஒன்பது லட்சம் பேர் கேரளாவிற்கு திரும்பினர். மக்கள் தொகை அடர்த்தியான மாநிலங்களில் ஒன்றாகவும் கேரளா உள்ளது. ஓணம் பண்டிகை திருவிழாவின் போது, மக்கள் வழிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. இத்தகைய, காரணங்களால் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தன.  அதன் பின், அரசு நிர்வாகத்திற்கு  எதிராக எதிர்க்கட்சி மேற்கொண்ட தடுப்புப் போராட்டங்கள் (blockade)   பாதிப்புகளை அதிகரித்தது. கொவிட்-19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பது, நோய் பரவாமல் தடுப்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் நீர்த்து போக செய்ததோடு மட்டுமல்லாமல், அரசாங்கம் தேவையின்றி கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்ற உணர்வையும் மக்களிடத்தில்   கொடுத்தது,”என்று அவர் கூறினார்.

கொவிட்க்கு எதிரான போராட்டத்தில், மக்களை பொறுப்புடன் செயல்பட வைப்பது தான், தற்போது எங்களது மிகப்பெரிய சவால்  என்று அமைச்சர் கூறினார். “சமூக விலகல் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற  வேண்டும்.   எந்த சூழலிலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைத்துக் கொள்ள கூடாது. மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றும் தெரிவித்தார்.

பொது சுகாதார நிபுணரும், மாநிலத்தின் கோவிட் -19 மேலாண்மைக் குழுவின் முக்கிய உறுப்பினருமான டாக்டர் முகமது அஷீல் இது குறித்து கூறுகையில், “மே, ஜூன், ஜூலை மாதங்களில் பெருந்தொற்றுப் பரவலை கேரளா வென்றதாக ஒரு கருத்து நிலவியது. ஆனால், கேரளா கொரோனாவை  வெல்லவில்லை. கேரளா தன்னிச்சையாக இயங்கும் ஒரு தீவு அல்ல. கர்நாடகா,தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களில் அதிகப்படியான கொரோனா பாதிப்புகள் உள்ளது. அங்கிருந்து, தங்கள் சொந்த மாநிலமான கேரளாவிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரும்புகின்றனர். எனவே, கேரளாவில் நோய்த் தொற்று பரவல் காணப்படுகிறது,”என்றார்.

“கொரோனா வைரஸ் உச்சம் தொடும் காலக் கட்டத்தை மற்ற மாநிலங்களை விட கேரளா சிறப்பாக தாமதப்படுத்தியது. தேசிய பொது முடக்கநிலையின் நோக்கமும் இதுதான். அரசின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை போன்ற பல்வேறு உத்திகளையும் கேரளா சிறப்பாக மேற்கொண்டது. ஆனால், ஒரு நோய்த் தொற்றின் உச்சநிலையை நீங்கள் நிரந்தரமாக தாமதப்படுத்த முடியாது. ஒரு கட்டத்தில், எண்ணிக்கை அதிகரிக்கத் தான் செய்யும்,” என்று தெரிவித்தார்.

டாக்டர் முகமது அஷீல் மேலும் கூறுகையில்,“தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5,000 (அ) 10,000-ஐ கடந்திருக்கிறதா?என்பது முக்கியமல்ல; ஒவ்வொரு நாளும் 5,000 அல்லது 10,000  பாதிப்புகளை கையாளும் திறன் நமது பொது சுகாதார அமைப்புகளுக்கு உள்ளதா என்பதுதான் முக்கியமான கேள்வி. கேரளா, கடந்த நான்கரை மாதங்களில் தனது சமூக கண்காணிப்பு மற்றும் சுகாதார கட்டமைப்புகளை வலுபடுத்தியது. எனவே, தற்போதைய பாதிப்பு உச்சநிலையை சமாளிக்க கேரளா சிறந்த நிலையில் உள்ளது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

கோவிட் -19 மேலாண்மை குறித்த நிபுணர் குழுவின் தலைவர் டாக்டர் பி எக்பால், கேரளாவின் தற்போதைய சூழல் அசாதாரணமாக  இல்லை என்று கூறினார்.

“அனைத்து மாநிலங்களும் நாடுகளும் வெவ்வேறு கட்டங்களில் இது போன்ற ஒரு கட்டத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும், ”என்றார்.

ஆனால் ஆரம்ப மாதங்களில் கேரளாவின் கொரோனா சோதனை எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது என்பது உண்மை தான் . ஜூன் வரை, கேரளாவில்  தினசரி பரிசோதனை எண்ணிக்கை 5,000-6,000 என்ற அளவில் தான் இருந்தது. அதே நேரத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு  ஆந்திரா போன்ற மாநிலங்கள் ஒவ்வொரு நாளும் 20,000-30,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதித்தன. தற்போது, கேரளாவில் அதிக அளவிலான சோதனைகள்  மேற்கொள்ளப்படுகிறது ” என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Kerala health minister k k shailaja kerala covid cases spike

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X