Make Sanskrit compulsory from Class 1, RSS tells Gujarat govt: குஜராத்தில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) 1 ஆம் வகுப்பிலிருந்து சமஸ்கிருதத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்று மாநில அரசாங்கத்துடனான ஒரு கூட்டத்தில் வலுவாக வலியுறுத்தியுள்ளது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.
ஆதாரங்களின்படி, ஆர்.எஸ்.எஸ் சங்கத்தின் மூத்த பிரதிநிதிகள் மற்றும் அதன் துணை அமைப்புகளின் மூத்த பிரதிநிதிகள் கல்வி அமைச்சர் ஜிது வகானி, கல்வித்துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் குஜராத் பா.ஜ.க.,வின் நிறுவன பொதுச் செயலாளர் ரத்னாகர் ஆகியோருடன் ஏப்ரல் மாதம் புதிய தேசிய கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
இதையும் படியுங்கள்: உ.பி.,யில் சமாஜ்வாதியின் கோட்டைகளை தகர்த்த பா.ஜ.க; கட்சியின் தோல்விக்கு காரணம் என்ன?
கிட்டத்தட்ட 25 மூத்த அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பங்கேற்ற கல்வி அமைச்சர் ஜிது வகானி உடனான சந்திப்பில், வித்யா பாரதி, ஷைஷிக் மகாசங், சம்ஸ்கிருத பாரதி, பாரதிய ஷிக்சன் மண்டல் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளின் கிட்டத்தட்ட 20 பிரதிநிதிகளின் முக்கிய வலியுறுத்தலாக சமஸ்கிருதம் கற்பித்தல் இருந்தது. பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை, ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்கவும், வேதக் கணிதத்தை கட்டாயமாக்கவும், உபநிடதம் மற்றும் வேதங்களின் அடிப்படையில் மதிப்புக் கல்வியை வழங்கவும், தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தவும் ஆர்.எஸ்.எஸ் முன்மொழிந்தது.
கூட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ், சமஸ்கிருதத்திற்கு ஒரு வாரத்தில் குறைந்தது ஆறு பாடவேளைகளை ஒதுக்குமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டதாக அறியப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தல் பற்றிய விளக்கக்காட்சியின் நகல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இடம் உள்ளது. அதில், தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழி கொள்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் சமஸ்கிருதத்திற்கு “சிறப்பு முன்னுரிமை” வழங்குவதைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது. மேலும், ஆரம்ப வகுப்புகளில் “சிறந்த ஆங்கிலத்தை கற்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், ஆனால் இந்திய மொழிகள் கற்பித்தலை தவறவிடக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமாக, தேசிய கல்விக் கொள்கை 2020 இல் உள்ள மும்மொழி கொள்கை பள்ளியில் கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டிய எந்த குறிப்பிட்ட மொழியையும் பரிந்துரைக்கவில்லை. “குழந்தைகள் கற்றுக் கொள்ளும் மூன்று மொழிகளும் மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் நிச்சயமாக மாணவர்களின் தேர்வாக இருக்கும், மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டிருக்கும்” என்று கொள்கை கூறுகிறது.
தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்காவிட்டாலும், RSS ஏன் சமஸ்கிருதத்தை மும்மொழி கொள்கையின் கீழ் தள்ளுகிறது என்று கேட்டதற்கு, RSS துணை அமைப்பான சம்ஸ்கிருத பாரதியின் ஹிமஞ்சய் பாலிவால் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார், “… தேசிய கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தைப் பற்றி தெளிவில்லாமல் பேசுகிறது. தேசிய கல்விக் கொள்கை சமஸ்கிருத மொழிக்கு ஆதரவானதா அல்லது அதற்கு எதிரானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதில் எந்த தெளிவும் இல்லை.” என்று கூறினார். பாலிவால் சமஸ்கிருத பாரதியின் குஜராத் சங்கதன் பிரதிநிதியாக உள்ளார்.
மேலும், “எந்த மொழியும் மாணவர்களிடம் திணிக்கப்படாது என்று தேசியக் கல்விக் கொள்கை கூறினாலும், பள்ளிகளில் ஆங்கிலம் கட்டாயம் கற்பிக்கப்படுகிறது. 1 ஆம் வகுப்பிலிருந்து சமஸ்கிருதம் கற்பிக்க, மாநில அரசாங்கத்துடன் அனைத்து மட்டங்களிலும் ஆலோசனை செய்யப்படுகிறது… தேசிய கல்விக் கொள்கை வழிமுறைகளை வகுத்துள்ளது. இப்போது, வழிமுறைகள் எவ்வாறு விளக்கப்படும் மற்றும் செயல்படுத்தப்படும் என்பது அரசாங்கத்தின் கையில் உள்ளது.” என்று பாலிவால் கூறினார்.
இருப்பினும், சமஸ்கிருதப் படிப்பு குறித்த ஆர்.எஸ்.எஸ்.,ஸின் பரிந்துரை பள்ளிக் கல்விக்கு மட்டும் அல்ல. இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியில், குஜராத்தியை முதல் மொழியாகவும், சமஸ்கிருதத்தை இரண்டாம் மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்றும், மூன்றாம் மொழி விருப்பமாக எது வழங்கப்பட வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்கலாம் என்றும் ஆர்.எஸ்.எஸ் பரிந்துரைத்துள்ளது. மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சமஸ்கிருதம் படிக்காத மாணவர்கள் பி.ஏ.எம்.எஸ் (இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) படிப்புகளில் சேர தடை விதிக்க வேண்டும் என்று மாநில அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரங்களின்படி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து RSS மற்றும் குஜராத் அரசு இடையே ஒரு தொடர் கூட்டம் ஜூலை மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ்-ன் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து பேசிய கல்வி அமைச்சர் ஜிது வகானி, “நாங்கள் பல ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம். சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராயும், அதன்படி இவை செயல்படுத்தப்படும்” என்றார்.
குஜராத் அரசு, கடந்த மூன்று ஆண்டுகளாக சமஸ்கிருதம் கற்பதை ஊக்குவிக்கும் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. உதாரணமாக, இது குஜராத் சமஸ்கிருத கல்வி வாரியத்தை 2019 இல் தொடங்கியது.
பிற பரிந்துரைகள்
– அனைத்து நிலைகளிலும், சமஸ்கிருத மொழியில் மட்டுமே சமஸ்கிருதம் கற்பிக்கப்பட வேண்டும்.
– திறந்தநிலைப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் (தற்போது 14 லட்சம் பேர் வழக்கமான மாணவர்கள் மற்றும் 63,000 பேர் மட்டுமே திறந்தநிலைப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்)
– 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்தின் வழியில் அறிவியல் பாடத்தை முயற்சிக்க இரண்டு விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
– சமூக சமத்துவமின்மையை ஊக்குவிக்கும் RTE சட்டத்தின் (பிரிவு 2 (1)c) கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு பல பள்ளிகள் தனி வகுப்பறைகளை உருவாக்கியுள்ளன. இதை கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil