சிபிஐ அமைப்புக்கு எதிராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா போராட்டத்திற்கு ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சாரதா சிட் ஃபண்டு மோசடி வழக்கு விவகாரத்தில் நேற்று சிபிஐ மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது. சிபிஐ நடவடிக்கையை எதிர்த்து கொல்த்தாவில் ‘அரசியலமைப்பை காப்பாற்றுவோம்’ என்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.
அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, பாசிச பாஜகவின் செயலை முறியடிக்க மம்தா பானர்ஜிக்கு துணை நிற்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். அதில், “பாசிச பாஜக ஆட்சியில் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். கூட்டாட்சி அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்கும் போரில் மம்தா பானர்ஜி உடன் துணை நிற்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சி.பி.ஐ. தனது வேலையை செய்ய வேண்டுமா? வேண்டாமா? என கேள்வி எழுப்பியதோடு, சி.பி.ஐ. தனது வேலையை செய்யும்போது, பழிவாங்கல் என சொல்வதும், அவர்கள் கேட்பதை செய்யாமல் இருந்தால் சி.பி.ஐ. கூண்டுக்கிளி என்றும் விமர்சிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டதாக தெரிவித்தார்.
Mamata Banerjee Dharna Live Updates : உச்சத்தை தொடும் மம்தா தர்ணா...உச்சநீதிமன்றத்தை நாடுகிறது சிபிஐ
மேலும், மேற்கு வங்க முதலமைச்சர் அரசியல் சட்டத்தை மீறி விட்டதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி. நரசிம்மராவ், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதன் மூலம் மம்தா சர்வாதிகார அணுகுமுறையை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நடக்கும் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்துவது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று குறிப்பிட்டுள்ள அவர், காவல்துறையை மம்தா பானர்ஜி சீர்குலைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.