Mamata rally : தேசம் எங்கும் சாரதா சிட் ஃபண்ட் மூலமாக லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றிய வழக்கில் மேற்கு வங்கத்தின் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி மூன்றாம் தேதி கொல்கத்தா விரைந்தனர்.
Mamata rally - மூன்று நாட்கள் நடைபெற்ற தர்ணா
ஏற்கனவே மத்திய புலனாய்வுத் துறையினை தடை செய்து அறிவித்திருந்தது மமதாவின் அரசு. இந்நிலையில் ராஜீவ் குமாரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை காவல்துறையினர் சிறைபிடித்தனர். மேலும், மத்திய அரசானது, அரசியல் ஆதாயத்திற்காக சி.பி.ஐ-யை பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டினை கூறி மமதா மூன்று நாட்கள் தர்ணாவில் ஈடுபட்டார்.
அவருடன், அந்த தர்ணாவில் முக்கியமான காவல்துறை அதிகாரிகள் ஐவர் பங்கேற்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசு, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மலாய் குமார் டேவிற்கு உத்தரவிட்டுள்ளது.
டி.ஜி.பி விரேந்திர குமார், வினித் கோயல், அனுஜ் சர்மா, கூடுதல் டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) க்யாவந்த் சிங், கமிஷ்னர் பிதான்னகர் மற்றும் கொல்கத்தா கூடுதல் ஆணையர் சுப்ரதிம் சர்கார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டுள்ளது உள்த்துறை அமைச்சகம்.
கமிஷ்னர் ராஜீவ் குமார் தவிர, முதல்வர் மமதா பானர்ஜீயின் ஆணைக்கிணங்க இந்த ஐவரும் தர்ணாவில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்களிடம் கேள்வி எழுப்பிய போது, இது மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையிலான பிரச்சனை என்று கூறி கருத்து கூற மறுத்துவிட்டனர்.
இந்திய சிவில் சர்வீஸில் இருக்கும் அரசு அதிகாரிகள் அனைவரும் மத்திய உள்த்துறை அமைச்சகத்தின் உத்தரவில் பணியாற்றுபவர்கள். அதனால் தான், இந்த உத்தரவை உள்த்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகள்: மம்தா கடும் எதிர்ப்பு