ஜனவரி 2021 இல், டெல்லி நீர்வளத் துறை வளாகத்தில் உள்ள 15 ஆம் நூற்றாண்டு நினைவுச்சின்னத்தை பார்வையிட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, தொல்லியல் துறை அந்த நினைவுச்சின்னத்தின் பாதுகாப்பு மற்றும் "உடனடி கவனம்" செலுத்துவதற்கான அனுமதியைக் கோரி டெல்லி நீர்வளத் துறைக்கு கடிதம் எழுதியது. இந்த ஆண்டு ஜனவரியில், அந்த இடத்திற்குத் திரும்பி வந்து பார்த்தப்போது, நினைவுச்சின்னம் காணாமல் போனதை தொல்லியல் துறை கண்டறிந்தது. மேலும், அப்போதைய டெல்லி நீர்வளத் துறை தலைமை நிர்வாக அதிகாரியின் அதிகாரப்பூர்வ பங்களாவை அமைப்பதற்காக நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டது என்றும் தொல்லியல் துறை கண்டுபிடித்தது.
புதனன்று, விஜிலென்ஸ் துறை 2007 பேட்ச் ஐ.ஏ.எஸ் (ஏ.ஜி.எம்.யு.டி கேடர்) அதிகாரி உதித் பிரகாஷ் ராய்க்கு 1418 ஆம் ஆண்டு சையது வம்சத்தினர் தில்லியை ஆண்டபோது கட்டிய "பதான் கால" மஹால் நினைவுச்சின்னத்தை இடித்ததற்காகவும் மற்றும் டெல்லி நீர்வளத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தப்போது தங்குவதற்காக அந்த இடத்தில் புதிய அரசு தங்குமிட கட்டிடம் கட்டியதற்காகவும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதையும் படியுங்கள்: போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட நடிகை; ஷார்ஜா சிறையிலிருந்து விடுதலை
உதித் பிரகாஷ் ராய் இந்த ஆண்டு டெல்லியிலிருந்து மிசோரமுக்கு அனுப்பப்பட்டார், ஆனால் அவரது குடும்பம் இன்னும் புதிய தங்குமிடத்திலேயே வசித்து வருகிறது.
தென்கிழக்கு டெல்லியின் ஜல் விஹாரில் லஜ்பத் நகர் அருகே உள்ள காணாமல் போன நினைவுச்சின்னத்தில் தற்போது ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. இது தொல்லியல் துறையின் முகம்மதிய மற்றும் இந்து நினைவுச்சின்னங்களின் பட்டியலில் தொகுதி. IV இல் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் மஹால் என்று அழைக்கப்படுகிறது.
“மஹால் (அரண்மனை)… செங்கல் கொத்து மற்றும் சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட” கட்டமைப்பு உடையது என பட்டியல் விவரிக்கிறது. அதன் முக்கிய அம்சம் "மூன்று வளைவு கொண்ட டாலன் (வராண்டா)... இரண்டு அறைத் தொகுப்புகளால் சூழப்பட்டுள்ளது" என்று பட்டியல் கூறுகிறது.
அதே வளாகத்தில் கட்டப்பட்ட சில சிறிய குடியிருப்பு கட்டிடங்களுக்கு அருகில் உள்ள இந்த நினைவுச்சின்னம் டெல்லி நீர்வளத் துறையின் "கட்டுப்பாட்டின்" கீழ் இருப்பதாக விஜிலென்ஸ் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நினைவுச்சின்னத்தை மாற்றியமைத்து கட்டப்பட்ட புதிய வீட்டின் பரப்பளவு 700 சதுர மீட்டர் ஆகும், இது 7 ஆம் வகை கட்டடத்திற்கு அனுமதிக்கப்பட்ட 403 சதுர மீட்டர் பரப்பளவைக் காட்டிலும் கிட்டத்தட்ட 300 சதுர மீட்டர் அதிகமாக உள்ளது, என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதித் பிரகாஷ் ராய்க்கு 5 ஆம் வகை அரசு வீட்டுமனைக்கு உரிமை இருந்தது.
வீடு கட்டப்பட்டுள்ள முழு நிலத்தின் பரிமாணங்கள் சுமார் 5,500 சதுர மீட்டர்.
நோட்டீஸின்படி, திட்டத்திற்காக கிட்டத்தட்ட ரூ.4 கோடி செலவிடப்பட்டுள்ளது.
டெல்லி அரசாங்கத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் மொழித் துறையின் கீழ் வரும் தொல்லியல் துறை, உள்ளூர் முக்கியத்துவம் வாய்ந்த புராதன நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது, இந்த தொல்லியல் துறை டிசம்பர் 2020 இல் அந்த இடத்தைப் பார்வையிட்டது.
ஜனவரி 2021 இல், தொல்லியல் "உடனடி கவனம்" மற்றும் பாதுகாப்பிற்காக நினைவுச்சின்னத்தின் உடைமைகளை ஒப்படைக்குமாறு டெல்லி நீர்வளத் துறைக்கு கடிதம் எழுதியது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொல்லியல் துறை மற்றும் டெல்லி நீர்வளத் துறை அதிகாரிகளின் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 2020 டிசம்பரில், துறை அதிகாரிகள் “இரண்டு கட்டமைப்புகளைக் கண்டறிந்தனர், அவற்றில் ஒன்று நுழைவாயிலாகவும் மற்றொன்று மேற்கூறிய மஹாலின் பிரதான கட்டிடமாகவும் தோன்றியது…
இருப்பினும், ஜனவரி 2023ல் தொல்லியல் துறை ஆய்வுக் குழு அந்த இடத்திற்கு வந்தப்போது, "தளத்தில் ஒரே ஒரு கட்டமைப்பை அதாவது நுழைவாயில் மட்டுமே அடையாளம் காண முடிகிறது என்பதைக் கண்டறிந்தது".
விஜிலென்ஸ் துறை தனது நோட்டீஸில், “டெல்லி நீர்வளத் துறை இன்ஜினியர்களின் உதவியுடன் நீர்வளத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி உதித் பிரகாஷ் ராய் உத்தரவுப்படி பதான் காலத்தின் மஹால் இடிக்கப்பட்டது” என்று கூறியுள்ளது.
"முழு கட்டமைப்பின் அனைத்து பகுதியையும் இடித்தது..." மற்றும் "ஒரு வரலாற்று நினைவுச்சின்னம் உள்ளது என்ற உண்மையை அவர் நன்கு அறிந்திருந்தார்" என்பதற்கு உதித் பிரகாஷ் ராய் பொறுப்பு என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசுக்கு உதித் பிரகாஷ் ராய் இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளுக்கு கருத்து தெரிவிக்க உதித் பிரகாஷ் ராய் பதிலளிக்கவில்லை.
நீர்வளத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜும் அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை.
புதன்கிழமை, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நினைவுச்சின்னம் உள்ள இடத்தில் கட்டப்பட்ட வீட்டைப் பார்வையிட்டபோது, உதித் பிரகாஷ்ராயின் மனைவி அங்கே இருந்தார். இந்த அறிக்கையில் அவர் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. மேலும், “இவை வெறும் குற்றச்சாட்டுகள். இங்கு பழைய நீர்வளத் துறை குடியிருப்புகள் இருந்தன, அவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. இது எங்கள் சொந்த வீடு அல்ல. நாங்கள் வெளியேறினால், நினைவுச்சின்ன கட்டமைப்பு மீண்டும் வராது. பிரச்சினைக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். நினைவுச்சின்னம் எல்லைக்குள் இல்லை. எல்லையின் மறுபுறத்தில் ஒரு நினைவுச்சின்னம் இன்னும் உள்ளது. வன விலங்குகள் மற்றும் திருடர்கள் வராமல் இருக்க எல்லையில் ஷட்டர் அமைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.