24 வயது இளைஞனின் கழுத்தில் வலுக்கட்டாயமாக கயிற்றைக் கட்டி நாய் போல குரைக்க வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து மத்தியப் பிரதேச போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர் மற்றும் போபாலில் உள்ள உள்ளூர் நிர்வாகம் அவர்களின் வீடுகளின் சில பகுதிகளை இடித்தது.
இந்த சம்பவத்தின் ஒரு வீடியோவை பாதிக்கப்பட்ட விஜய் ராம்சந்தனி வெளியிட்டார், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் சோர்வடைந்ததாக விஜய் ராம்சந்தனி கூறினார். இதையடுத்து, மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, இதுகுறித்து விசாரிக்க கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்: ஆணவக் கொலை; இளம் தம்பதி கொல்லப்பட்டு, முதலைகள் நிறைந்த சாம்பல் ஆற்றில் வீச்சு; மத்திய பிரதேச கொடூரம்
“நான் அந்த வீடியோவைப் பார்த்தேன்… ஒரு மனிதனிடம் இத்தகைய நடத்தை மிகவும் கண்டிக்கத்தக்கது. 24 மணி நேரத்திற்குள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு போபால் காவல்துறை ஆணையருக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்... 4-5 மணி நேரத்திற்குள், குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்; சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர் பயன்படுத்தப்படும். இந்த வகையான மனநிலை முற்றிலுமாக அகற்றப்படும்” என்று அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறினார்.
சஜித், பிலால் திலா, பைசன் லாலா, சாஹில் பச்சா, முகமது சமீர் திலா மற்றும் முஃபீத் கான் ஆகிய ஆறு குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதுகுறித்து டி.சி.பி ரியாஸ் இக்பால் கூறுகையில், “ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ நேற்று இரவு முதல் வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தை அறிந்து, கட்டாய மதமாற்றம் மற்றும் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தோம். 6 பேரின் பெயர்களும் தெரியவந்துள்ளது, அதில் மூன்று பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக குற்றங்களைச் செய்து சொத்துக்களை சேர்த்துள்ளனர், மேலும் நாங்கள் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரித்து பட்டியல் தயாரித்து வருகிறோம்,” என்று கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, விஜய் ராம்சந்தனி (24) போபாலின் டீலா ஜமால்புராவில் தங்கியிருந்தார், அங்கு தான் குற்றம் சாட்டப்பட்ட நபர்களும் வசிக்கின்றனர்.
"நான் அவர்களுடன் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். எனது தவறு என்னவென்றால், ஒருமுறை நான் அவர்களில் ஒருவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் சில அவதூறுகளை எழுதினேன். மே 9 அன்று, நான் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பியபோது, அவர்கள் என்னைக் கடத்தி, கைவிடப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று என்னைத் தாக்கினர். அவர்கள் என் கழுத்தில் கயிறு கட்டி என்னை அவமானப்படுத்தினார்கள்... என்னால் சரியாக மூச்சுவிட முடியவில்லை, நான் பயந்தேன்,” என்று விஜய் ராம்சந்தனி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
விவசாய முகவராகப் பணிபுரியும் விஜய் ராம்சந்தனி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க முயற்சித்ததாகவும், ஆனால் பலனில்லை என்று கூறினார். “இந்தச் சம்பவத்திற்கு அவர்கள் என்னையே தொடர்ந்து குற்றம் சாட்டினார்கள். அப்போது என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. சமீபத்தில், என்னை மிரட்டி பணம் பறிக்கும் வீடியோவை, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்ற முடிந்தது. அதனால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தேன், அது வைரலானது,” என்று விஜய் ராம்சந்தனி கூறினார்.
வீடியோவில், விஜய் ராம்சந்தனி கழுத்தில் கயிற்றை மாட்டி ஒருவர் பிடித்திருந்த நிலையில், மற்றவர்கள் அவரின் சமூக ஊடகப்பதிவுக்காக அவரை மன்னிப்பு கேட்க வற்புறுத்தினர். அவர் மன்னிப்பு கேட்பதையும், தான் எதுவும் செய்யவில்லை என்று கூறுவதையும் வீடியோவில் கேட்கலாம்.
சாஹல், சமீர் மற்றும் முஃபீத் ஆகியோர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டீலா ஜமால்புரா காவல் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரி ஒமேஷ் குமார் திவாரி தெரிவித்தார். “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக NSA (தேசிய பாதுகாப்புச் சட்டம்) ஐப் பயன்படுத்த நாங்கள் முன்மொழிகிறோம். இன்று மூன்று இடங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அழிக்கப்பட்டன. சமீர் மீது 2013 முதல் 2022 வரை 26 வழக்குகள் உள்ளன, மேலும் அந்த பகுதியின் மோசமான குணம் கொண்டவர். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அந்த வீடியோவைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை மிரட்டிக்கொண்டிருந்தனர்,” என்று ஒமேஷ் குமார் திவாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
திங்கள்கிழமை மாலை, உள்ளூர் நிர்வாகம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை இடித்தது. இடிக்கப்பட்ட வீடுகளின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு முன் அறிவிப்பு அல்லது ஆவணங்களுடன் அதிகாரிகளிடம் விளக்கம் அளிப்பதற்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்று கூறினர்.
தலைமறைவான குற்றவாளிகளில் ஒருவரான பைசான் கான், உள்ளூர் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அவரது ஆறு பேர் கொண்ட குடும்பம் ரூ.1,500 வாடகை செலுத்தி ஒரு அறை வீட்டில் தங்கி வந்தனர். இதுகுறித்து பைசானின் தாய் ஷீபா கூறுகையில், “கடந்த காலங்களில் அவர் மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளார். நாங்கள் இப்போது ஒரு புதிய வீட்டைத் தேடுகிறோம்,” என்று கூறினார்.
சாஹில் தனது தாத்தாவின் வீட்டில் தங்கியிருந்தார், அங்கு உள்ளூர் நிர்வாகம் அறையின் ஒரு பகுதியை இடித்தது. "அவரது தாத்தா பிரச்சனையின் போது குடும்பத்திற்கு தனது வீட்டை திறந்து வைத்தார்... நிர்வாகம் எங்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை," என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார்.
சமீர் இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் தனது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தையில் இல்லை. இ-ரிக்ஷா ஓட்டும் அவரது தந்தை முகமது சலீம் (57) கூறுகையில், “என் மகன் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வந்து செல்வான், விரைவில் போலீஸ் வந்து அழைத்துச் செல்லும். இந்த முறை அவர்கள் எங்கள் வீட்டை இடித்துள்ளனர்,” என்று கூறினார். உள்ளூர் நிர்வாகம் தங்கள் குளியலறை, சமையலறை மற்றும் இரண்டு சுவர்களை உடைத்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.