Muslims did last rites to a hindu man in Maharashtra : இன்று கொரோனா ஊரடங்கின் 64-வது நாள் ஆகும். கோவிட்19 லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பலர் தங்களின் ஊர்களுக்கு செல்ல முடியாமல், தங்களின் உறவினர்களை காணாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதே நேரத்தில் தான் பல மனிதர்களின் குரூர மனத்தினையும் நாம் காண முடிகிறது.
Advertisment
மகாராஷ்ட்ர மாநிலம் அகோலா மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் மாரடைப்பில் மரணமடைந்துவிட்டார். அவருடைய மனைவிக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதியவரின் மரணம் தொடர்பாக நாக்பூரில் இருக்கும் அவருடைய மகனுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரோ நேரில் வரவோ, தன்னுடைய தந்தையின் உடலை பெறவோ விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனை அறிந்த அகோலா குச்சி மேமன் ஜமா அத் முஸ்லிம் அமைப்பினர் உடனே அந்த முதியவருக்கு செய்ய வேண்டிய அனைத்து இறுதி சடங்குகளையும் இந்து முறைப்படி செய்து முடித்தனர்.
அதன் படி அகோலாவில் அவருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யபட்டது. இது குறித்து அந்த ஜமா அத் தலைவர் ஜாவேத் ஜகேரியா கூறுகையில் ”ஊரடங்கு காலத்தில் பலரும் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடல்களை பெற மறுப்பு தெரிவித்துவிடுகின்றனர். அதனால் அவர்களின் உடல்களை பெற்று நாங்களே இறுதி சடங்குகளை செய்து தகனம் / புதைத்துவிடுகின்றோம். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை 21 நபர்களுக்கு சொந்த செலவில் இறுதி சடங்குகள் செய்துள்ளனர் இந்த ஜமா அத் உறுப்பினர்கள். இதில் 5 பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.